
‘எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரையும் எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக் கூடியவர்களாக விளங்கச் செய்வாயாக. மேலும் எங்களை இறையச்சமுடையவர்களுக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!’ (திருக்குர்ஆன் 25:74)
குழந்தைகள் மனமகிழ்வைத் தருபவர்கள். ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு அளவுக்கு மீறிய அன்பையும் மகிழ்வையும் கொடுத்து நேசிக்கின்றனர். தமது குழந்தைகள் எல்லா வசதிகளையும் அனுபவிக்க வேண்டும், பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும், அதிகமான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நிறையக் கனவுகளோடு இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கின்றனர். இவ்வாறு தங்களுடைய வாழ்க்கையையே குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கின்றனர்.
ஆனாலும் தங்களுடைய குழந்தைகளின் மனோநிலையை அறிந்து அவர்களுடைய வாழ்க்கைக்கு நேரிய பாதையை அமைத்துத் தரும் பெற்றோர்கள் குறைவாகத்தான் உள்ளனர். குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் வாழ்க்கையில் துன்பங்களையும் சந்தித்தாக வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுத்தர மறந்து விடுகின்றனர்.
குழந்தைகள் மறைமுகமாகக் கற்றுக்கொள்பவர்கள்
குழந்தைகளுக்காக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்களைக் கவனிக்க நேரமின்றி ஹாஸ்டலில் சேர்க்கின்றனர். பின் இரவு பகலாகச் சம்பாதித்து ஓய்ந்து வயதாகும் காலத்தில் தம் பிள்ளைகள் உடன் இருக்க விரும்பு கின்றார்கள். ஆனால் பிள்ளைகள் சம்பாதிக்கும் வயதை அடையும் போது பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் விட்டுவிடுகிறார்கள். பிள்ளைகள் இந்தப் பாடத்தைத் தங்களின் பெற்றோர்களின் செயல்பாடுகளின் வழியாகவே கற்றுக் கொள்கின்றனர்.
இத்தகைய அவலநிலை ஏற்படாமல் இருக்க பெற்றோரில் ஒருவராவது குழந்தைகளிடம் மிக நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
குழந்தைகள் முதலில் தன் தந்தை தாயிடமும், தாய் தந்தையிடமும் காட்டும் அன்பையும் மரியாதையும் பார்த்துத் தான் மற்றவர்களிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கின்றனர். ஆனால் தாய் தந்தைக்கு இடையே சுமூகமான உறவு இல்லாமல் வாழும் சூழ்நிலையைக் குழந்தைகள் பார்ப்பதால் அவர்களின் மனநிலை தடுமாறி வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரி எது, தவறு எது என்பதைப் பிரித்து அறியமுடியாமல் தீயசெயல்களின் வலையில் வீழ்ந்துவிடுகின்றனர்.
குழந்தைகள் தவறு செய்யும் போது தாயும் தந்தையும் ஒரே மாதிரி கண்டிக்காமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் குழந்தைகளை அணுகும் சந்தர்ப்பத்தில் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அதனால் குழந்தையின் சிந்தனைகள் மாறுபட்டு அவர்களைச் சமுதாயத்தில் வேறுபட்ட மனிதனாக நிற்க வைத்துவிடுகிறது. ஒவ்வொரு குழந்தையும் மனதளவில் பெற்றோர்களின் இனிமையான உறவையே விரும்புகின்றனர்.
குழந்தைகளின் செயல்திறன்
குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் சின்னஞ்சிறு மாற்றங்களை நடைமுறைப்படுத்தினால் படிப்பிலும் ஒழுக்கத்திலும் அவர்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். அவர்களின் செயல்திறனிலும் நல்ல முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியும்.
இறைவனை நினைவுகூர்தல், சிந்தித்தல், கவனித்தல், வாசித்தல், கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுதல், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல், நன்மை தீமைகளை ஆராய்தல், உணவு முறை, உடற்பயிற்சி, உறக்கம் இதுபோன்ற செயல்களில் குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோர், ஆசிரியர்களின் பொறுப்பாகும். இவ்வாறு குழந்தைகளை வழிநடத்திச் செல்லும் போது குழந்தைகளின் மனநிலை வேறு எங்கும் சிதற வாய்ப்பே இல்லாமல் போகும்.
இறைவனின் உதவியின்றி இவ்வுலகில் எதுவும் நிகழ முடியாது. ஆதலால் இறைவனை அனைத்து விஷயங்களிலும் சார்ந்திருக்கக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல் மிக அவசியமாகிறது. பிரார்த்தனை எனும் பேராயுதத்தை அவர்களின் கையில் கொடுத்து விட வேண்டும்.
குழந்தைகளுக்குச் சிந்தனைத் திறன் மிக மிக அவசியம். பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூறும் அறிவுரையை அவர்கள் நன்கு கேட்கிறார்களே தவிர, பிற்காலத்தில் தேவையான இடங்களில் அவற்றைப் பயன்படுத்தத் தெரிவதில்லை. கற்றுக்கொண்டதைப் புரிந்துகொண்டு தேவைப்படும் நேரத்தில் செயல்படும் போது சூழ்நிலைக்குத் தக்கவாறு சரியான முடிவுகளை எடுக்கமுடியும்.
குழந்தைகளிடம் நன்றாகக் கவனிக்கும் திறன் இருக்குமேயானால் படிப்பிலும் மற்றவர்களிடம் பழகுவதிலும் சிறந்து விளங்குவார்கள். அதேபோல வாசிக்கும் திறன் அவர்களின் அறிவை பெருகச் செய்கிறது. பெற்ற அறிவினால் நன்மை, தீமையைச் சரியாக அறிந்து கொள்ள முடிகிறது.
மேற்கண்ட திறன்களைக் குழந்தைகளிடம் வளர்த்தெடுப்பதன் வாயிலாகக் குழந்தைகளை அவர்களின் வாழ்வின் அனைத்து சந்தர்ப்பத்திலும் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வைக்க முடியும்.
குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க வேண்டிய நற்பண்புகள்
ஒவ்வொரு பெற்றோரும் தன்னுடைய குழந்தைகள் நல்ல ஒழுக்கத்துடனும் நன்னடத்தையுடனும் வளர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஒழுக்க நெறிகள் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு கற்றுக் கொடுப்பது அல்ல. நற்பண்புகளைப் பிள்ளைகள் சிறு குழந்தையாக இருக்கும்போதே செதுக்க வேண்டும். அவர்களின் எண்ணங்களை நல்லெண்ணங்களாக மாற்ற வேண்டும். சமுதாயத்திற்குப் பயனளிக்கும் மனிதர்களாக உருவாக்க வேண்டும்.
அவர்களிடம் மனித நேயத்தை விதைக்க வேண்டும். பேராசைகளைத் தகர்க்க வேண்டும். அறம் செய்வதில் முன்னோடிகளாகத் திகழச் செய்ய வேண்டும். குழந்தைகளின் மனதில் எழும் எதிர்மறையான எண்ணம், செயல்பாடுகளிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பதை அவர்களுக்கு நடைமுறையில் கற்றுக் கொடுக்க வேண்டும். நவீன உலகில் தென்படுகின்ற நச்சுக் காரியங்கள் எவை என்பதை விளக்க வேண்டும். அவற்றோடு ஒழுக்கம் மட்டுமே உயர்வைத் தரும் என்பதை அவர்களின் மனதில் ஆழமாகப் புரிய வைப்பதும், ஒழுக்கக்கேடான ஆபாசங்கள் அவர்களைத் தீய படுகுழியில் தள்ளிவிடும் என்பதையும் நன்கு உணர்த்துவது மிகமிக அவசியம்.
குழந்தைகள் தினத்தைப் போன்று ஒருநாள் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல குழந்தைகள். அவர்களை நாம் தினம் தினம் கொண்டாடவும் சிறப்பாகப் பராமரித்து வளர்க்கவும் வேண்டும். அவர்களைத் தினம் தினம் நல்லொழுக்கவான்களாக வார்த்தெடுப்பதில் தான் நல்ல சமுதாயம் உருவாகமுடியும்.