
சமகால இஸ்லாமிய உலகுக்குத் தமது புரட்சிகர சிந்தனைகளால் புத்துயிர் ஊட்டியவர் சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). தமது எழுத்துகளையும் சிந்தனைகளையும் இயக்கமாக மாற்றி அவற்றுக்கு உயிரூட்டியவர். தனது புரட்சிகரமான, எழுச்சியான, ஆழமான, தெளிவான கருத்துகளின் மூலம் ஒரு பேரியக்கத்தை உயிரோட்டமாக அமைத்து, வழிநடத்திச் சென்ற மிகப்பெரும் ஆளுமையான மௌதூதி அவர்கள் தனது நேர்மையான கருத்துகளின் மூலமாகவும் துணிச்சலான சிந்தனைத் தூண்டல்களினாலும் சமூகத்தில் நடந்து கொண்டிருந்த பல தவறுகளைச் சுட்டிக் காட்டி சீர்திருத்தம் செய்தார். இந்தத் துணிச்சல், தீர்க்கமான கருத்துகளின் மூலம் நிகழ்ந்த விஷயங்களுக்காக அவர் பல விமர்சனங்களுக்கு ஆளானார். பொறாமையின் காரணத்தினால் அநியாயமாக மௌதூதி அவர்களை விமர்சித்தவர்களும் உண்டு.
இது மௌதூதியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூலல்ல; அவருடைய சிந்தனைகளையும் கருத்துகளின் மூலம் ஏற்படுத்திய புரட்சிகளையும் அதன் தாக்கங்களையும் அறியும் வண்ணம்; சம காலத்தில் வாழ்ந்த மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களின் நளராத் ஃபீ ஃபிக்ரில் இமாம் அல் மௌதூதி என்ற அரபி நூலைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பன்னூலாசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.
மௌதூதி மீதான விமர்சனங்களின் உண்மைத் தன்மை, அவற்றின் நோக்கம், அவர்களின் சிந்தனையின் தனிச் சிறப்புகள், இந்தியாவில் நிலவிய மௌதூதியின் முக்கிய சிந்தனைகள், அவர்களுடைய சிறந்த பண்புகள்; அவர் சீர்திருத்தவாதியாகவும் மாற்றத்தின் அழைப்பாளராகவும் எவ்வாறு திகழ்ந்தார் என்பதனையும் மௌதூதி அவர்களின் சிந்தனையின் இயக்க அம்சங்களாக விளங்குவது என்ன என்பதனையும் விரிவாக விளக்குகிறது.
மௌதூதியின் பார்வையில் இஸ்லாம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டம். அதில் வணக்கம், பண்பாடு, சமூகம், பொருளாதாரம், அரசியல் உள்பட அனைத்தும் உள்ளடக்கி இருப்பதை அனைவருக்கும் உணர்த்தினார். அவரது சிந்தனையின் முதல் சிறப்பம்சமே முழு இஸ்லாத்தையும் வலியுறுத்தியதுதான்.
ஒரு கண் கொண்டு இஸ்லாத்தையும் மற்றொரு கண் கொண்டு சம காலத்தையும் பார்ப்பதுதான் மௌதூதியின் சிந்தனையின் இரண்டாவது சிறப்பம்சம். அவர் சமகாலத்தை விட்டு ஒதுங்கி கடந்த காலத்தில் வாழவில்லை. மாறாக சமகால அறிவுடன் அதன் மொழியில் பேசியுள்ளார்.
உயர்தர அழைப்பாளர்களின் விவகாரம் இப்படித்தான் இருக்கும் என்பதனையும் சட்டம் இயற்றுவதற்கான எல்லை எது? சட்டங்களின் விரிவாக்கம், ஒப்பாய்வு, சட்டங்களை வடிமைப்பதற்கான ஆய்வு எவ்வாறிருக்க வேண்டும். இஜ்திஹாதுக்கு சட்ட நிலைமை எப்போது கிடைக்கும் என்பது உள்ளிட்ட அரிய தகவல்களும் மௌதூதி நேரிட்ட விமர்சனங்களுக்கான சரியான பதில்களையும் டாக்டர் யூசுஃப் கர்ளாவி இந்நூலில் விளக்கியுள்ளார்.
மௌலவி நூஹ் மஹ்ழரியின் மொழிபெயர்ப்பு இந்த நூலின் வாசிப்பை எளிமைப் படுத்தியுள்ளது. மௌதூதியின் எழுத்துகளை முழுமையாக வாசிக்காமல் இருப்பதன் ஆபத்து தான் அவரைக் குறித்தான விமர்சனங்களுக்கான காரணம் என்பதனையும் அறிஞர் பெருமக்கள் அவர் மீது வைத்த விமர்சனங்களும் அதற்கான தக்க பதிலடியும் இந்நூலில் விரிவாக காணக் கிடைக்கிறது. இந்நூலினை அறிஞர் பெருமக்கள், ஆலிம்கள், சிந்தனையாளர்கள் எனப் பல்வேறு தளங்களில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.