மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

தேவை: சமவாய்ப்பு ஆணையம்
- புதுமடம் ஜாஃபர் அலீ, 16 - 31 டிசம்பர் 2024


இந்தியா மதச்சார்பற்ற நாடு. என்றாலும், தனிமனிதருக்கு மதம் உண்டு. ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்ற அவருக்கு உரிமை உண்டு. அரசுக்கு மதம் கிடையாது என்பதுதான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான நிலைமை. ஆனால் அரசை வழி நடத்துபவர்கள் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மதத்தின் ஆதரவாளர்களாக மாறியுள்ள நிலையில், சட்டங்களை மீறுவது, மதத்தின் அடிப்படையில் பிறரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாகப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமைப்பு (United States Commission International Religious Freedom - USCIRF) அண்மையில் 2024 அக்டோபர் 2 அன்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தனிமனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; மதத் தலைவர்கள் தன்னிச்சையாகக் கைது செய் யப் பட்டுள்ளனர்; வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் இடிக்கப்பட்டுள்ளன என்பவற்றைச் சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை இவை மதச் சுதந்திரத்தின் மீதான கடுமையான விதிமீறல்களாகும் என எச்சரித்துள்ளது. அதே போல் 2024 ஜூலை 26அன்று ஐ.நா மனித உரிமைக் குழு இந்தியா குறித்த ஆய் வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் முதன்மையாகக் கவனிக்க வேண்டிய அம்சங்களும் சிவில், அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையைச் (ICCPR) செயல்படுத்துவது பற்றிய பரிந்துரைகளும் உள்ளன.

இக்குழுவின் அறிக்கையில், சிறுபான்மையினக் குழுக்களுக்கு எதிரான மதப் பாகுபாட்டையும் வன்முறையையும் குறித்த ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. அண்மையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ‘இஸ்லாமியருக்கு எதிரான இந்திய நீதித்துறை’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அக்கட்டுரை பல்வேறு வழக்குகளில் முஸ்லிம்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை விரிவாகவும் விளக்கமாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் அனுகூலங்களுக்காக இஸ்லாமியரின் அடையாளம், உணவு, பண்பாடு ஆகியவை சார்ந்து தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்படுகின்றன. மத வெறுப்பரசியலை வளர்த்தெடுத்து, அதன் அடிப்படையில் பசுவின் பெயரால் இஸ்லாமியரை அடித்துக் கொலை செய் வது, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது, மத வழிபாட்டுத் தலங்களை இடிப்பது போன்ற வன்முறைச் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. அமைதியான வழியில் போராடும் முஸ்லிம் அறிவுஜீவிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் கைது செய் யப்படுகிறார்கள். அவர்களுக்கான தீர்ப்பு காலதாமதப்படுத்தப்படுகிறது; அதுமட்டுமல்ல, அவர்களுக்குப் பிணை வழங்குவதற்கான மனுக்கள் கூட நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படுகிறன.

2021 முதல் 2022 வரை அசாம் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 171 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; கொல்லப்பட்டதில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள் என்பது ஆழ்ந்த கவலையுடன் பரிசீலிக்கத்தக்கது. முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு, அவர்கள் தனிமைப்படுத்தப்படுதல்; ஓரங்கட்டப்படுதல் போன்ற நடவடிக்கைகள் கடந்த பத்தாண்டு ஒன்றிய ஆட்சியில் ஏகத்துக்கு அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், முஸ்லிம்கள் நாட்டுக்குக் கேடு விளைவிப்பவர்கள், எனவே அவர்கள் சமூகத்தின் விளிம்பு நிலையில் வைக்கப்பட வேண்டும் என்ற கூட்டு உணர்வு திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எதிர்வினையாக, இந்தியாவில் உள்ள பெரும் நகரங்களில் முஸ்லிம்களுக்கு வாடகை வீடு மறுக்கப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் நாளுக்கு நாள் கவலை தரும் அளவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டிலேயே இதுதான் நிலைமை என்றால், பிற வட மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசம். உத்தரகாண்ட் மாநிலத்தின் கன்சர் நகரில் வியாபாரம் செய் து கொண்டிருந்த 15க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் அந் நகரத்திலிருந்து வெளியேற வேண்டும் என அங்குள்ள வர்த்தக சங்கம் தீர்மானம் நிறைவேற்றி, அதைச் செயல்படுத்தியுள்ளனர்.மும்பை டாட்டா புற்றுநோய் மருத்துவமனை முன் இருபது ரூபாய் மதிப்புள்ள உணவை அங்குள்ள தன்னார்வலர் அமைப்பு ஏழைகளுக்கு வழங்கிவருகிறது. அங்கே ஏழ்மையில் உள்ள இஸ்லாமியப் பெண் ஒருவர் உணவு வாங்க வந்த வேளையில், அவரிடம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால்தான் உணவு தர முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. தன்மானம் கொண்ட அந்தப் பெண் அப்படிச் சொல்ல மறுத்து உணவு வேண்டாம் என்று சென்றுவிட்டார்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை வெறும் எடுத்துக்காட்டுகளே! இந்திய ஒன்றியத்தின் பன்மைத்துவம் பலமான அடிகளைப் பெற்று வருகிறது என்பதை இந்தச் சம்பவங்கள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன. மத நல்லிணக்கச் சூழல் மிக மோசமான பாதிப்பை அடைந்துள்ளது. சட்டங்களை மீறுவதும் மதத்தின் அடிப்படையில் பிறரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதும் அரசும் அதிகாரிகளும் இத்தகைய விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் அதற்கு இசைந்து போவதும் நம் நாட்டின் புதிய வழிமுறைகளாக முகிழ்த்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இவை போன்ற கொடுமைகளுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் சிறுபான்மையினருக்கான ஆதரவுக் குரலை வலுவாக எழுப்பி வந்தன. ஆனால், தற்போதைய அரசியல் சூழலோ பெரும்பான்மை வாதம் எனும் நச்சுப் பாம்புக்குப் பால் வார்க்கிறது. சிறுபான்மையினருக்கான   ஆதரவுக்கை நீள்வதில் முன்னெப்போதுமில்லாத அளவிலான  சுணக்கத்தைக்  காண முடிகிறது. 20 கோடி இஸ்லாமியர்களின் இறுதி நம்பிக்கையாக இருந்து வந்த நீதிமன்றங்கள் கூட மதப் பாகுபாடு என்னும் புதைகுழியில் சிக்கியுள்ளது. அண்மையில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி M. நாகபிரசன்னா மஸ்ஜிதுக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவது மத உணர்வுகளைப் புண்படுத்தாது என்று கூறி னார். மற்றொரு நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று குறிப்பிட்டார்; எதிர்ப்புகள் வலுக்கவே பிறகு மன்னிப்புக் கேட்டார். முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை அதிகார மட்டத்தில் ஆளுமை செலுத்துகிறது. ஆபத்தான இந்த மனநிலையைச் சமாளிப்பது வருங்கால இந்தியாவின் மிகப்பெரிய சவால்.

மத அடிப்படையில், மக்களிடம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் இருப்பது போன்ற ‘சம வாய் ப்பு ஆணையம் (Equal opportunities commission)' உருவாக்கப்பட வேண்டும் என சர்ச்சார் குழு பரிந்துரைத்திருந்தது. இங்கிலாந்தில் சீக்கியர் ஒருவருக்கு அரண்மனையின் தலைமைக் காவலர் பதவியைக் கொடுக்க மறுத்தனர். அதாவது, இன பாரபட்சத்தின் அடிப்படையில் அந்தப் பதவி மறுக்கப்பட்டது. உடனே பாதிக்கப்பட்ட சீக்கியர், சம வாய் ப்பு ஆணையத்தை அணுகி முறையிட்டார். அவர் தரப்பு நியாயங்களைச் சொல்லி, நீதிக்காகப் போராடினார். அதை முழுமையாக விசாரித்த ஆணையம், குறிப்பிட்ட அந்தப் பதவியைப் பெற அவருக்குத் தகுதி உண்டு என்பதால் அவருக்கு அந்தப் பதவியை வழங்க உத்தரவிட்டது.

இப்படி ஓர் ஆணையம் இந்தியாவின் இப்போதைய தேவையாக உள்ளது. சிறுபான்மையின மக்கள், தங்களுக்கு மத அடிப்படையில் இழைக்கப்படும் அநீதி களுக்கு எதிராக, ஆணையத்தில் முறையிட்டுப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியும். அரசு, தனியார் துறைகளில் மறுக்கப்படும் எந்த வாய் ப்பையும் உரிமை, நியாயத்தின் அடிப்படையில் கோரிப் பெற முடியும். அரசியல் அதிகாரக் களங்களில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களுக்கு இது போன்ற ஆணையம் மிகவும் உதவியாக அமையும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்