மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

அதிகாலைத் தொழுகையில் அலட்சியம்
மௌலவி அப்துல் ஹஸீப் பாகவி ஃபாஜில் தேவ்பந்த், 1-15 ஜனவரி 2025





முஸ்லிம்களைப் பல்வேறு பாவங்கள் கவ்வி நிற்கின்றன. ஆனால் ஒரு பாவம், ஒரேயொரு பாவம் மட்டும் மிக அதிக அளவில் காணப்படுகின்றது. விபச்சாரமோ திருட்டோ கொலையோ சமூகத்தில் 90% இருப்பதில்லை. வேறு எந்தப் பாவமும் இத்தனை விழுக்காடு சமுதாயத்தில் நிகழ்வதில்லை. ஐந்து அல்லது பத்து விழுக்காடு இருக்கலாம். ஆனால் இந்த ஒரு பாவம் மட்டும் தான் முஸ்லிம் சமுதாயத்தில் தொண்ணூறு விழுக்காடு இருக்கின்றது என்றால் அது மிகை அல்ல. அந்தப் பாவம்தான் அனைத்துப் பாவங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்ற ஃபஜ்ர் எனும் வைகறைத் தொழுகையை விடுதல் ஆகும்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஃபஜ்ர் தொழுகை என்ற மாபெரும் கடமையை விட்டு விடுகின்ற பெரும் பிழையைச் செய்வதைக் கனத்த மனதுடன் ஒப்புக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. இதர நேரத் தொழுகைகளைச் சரியாகத் தொழுபவர் கூட சுபுஹ் தொழுகையை விட்டு விடுவது பெரும் அவலம் அல்லவா! மற்றப் பாவங்களுக்கும் இந்தப் பாவத்திற்கும் வித்தியாசங்கள் பல உண்டு.

1. ஏனைய பாவங்கள் அனைத்தும் அதனைச் செய்பவர்கள் தொடர்ந்து செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எப்போதேனும் அத்தவறுகளைச் செய்யலாம். ஆனால் சுபுஹ் தொழுகையை விடுகின்ற பாவம் தொடர்ந்து செய்கின்ற பாவமாகச் சமூகத்தில் இருப்பதை மிக அழுத்தமாகக் கவனிக்கவும்.

2. ஏனைய பாவங்களைத் தனித்த நிலையில் செய்கின்ற போது ஃபஜ்ர் தொழுகையை ஒரு குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து தவற விடுகின்ற நிலை மிகவும் ஆபத்தானது.

3. மற்ற பாவங்கள் நம்முன் நடைபெற்றால் பதறிக் கொண்டு அதைத் தடுத்து நிறுத்தும் பக்குவம் நமக்கு உண்டு. ஆனால் தந்தை தொழச் செல்கின்றார். குடும்பத்தில் யாரும் தொழவில்லை; தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது எந்தப் பதட்டமும் இல்லாமல் கடந்து சென்று அவர் மட்டும் தொழுகின்றார். நாள்தோறும் நடைபெறும் நிகழ்வாக இது மாறிவிடுகின்றது. தொழாமல் உறங்கிக் கொண்டிருக்கின்ற தன் குடும்பத்தாரை எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏன் ஏற்படவில்லை? மற்ற பாவங்களைக் குடும்பத்தில் யாராவது செய்தால் இப்படித்தான் நடந்து கொள்வாரா?


ஃபஜ்ர் தொழுகையை விடுவதற்கும் மற்ற பாவங்களைச் செய்வதற்குமான பல்வேறு வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ளும் போது அதிகாலைத் தொழுகையை முஸ்லிம்கள் எவ்வளவு உதாசீனம் செய்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அருளும் அழிவும்

மற்ற நேரங்களைப் போல் அல்ல அதிகாலை நேரம். எல்லாம் வல்ல இறைவன் அதிகாலை நேரத்தில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களின் கோரிக்கைகளையும் பாவ மன்னிப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். ஏராளமான அருள்வளங்களைப் பொழிகின்றான். அதே சமயம் அல்லாஹ்வுடைய கோபப்பார்வை இறங்கும் நேரமும் அதிகாலை நேரம் தான். முந்தைய நபிமார்களின் சமூக மக்கள் அழிக்கப்பட்ட வரலாற்றைத் திருமறைக் குர்ஆனில் பார்க்கின்றோம். வேதனை இறங்கி அழிக்கப்பட்ட மக்கள் எப்பொழுது அழித்தொழிக்கப்பட்டார்கள்? அதிகாலை நேரத்தில் தானே..! லூத்(அலை), ஹூத்(அலை), சாலிஹ் (அலை) ஆகிய நபிமார்களின் கூட்டத்தினர் அழிக்கப்பட்டதும் வைகறைப் பொழுதில் தான். ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப்பெற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் அல்லாஹ்வின் சாபத்தை எதிர்ப்பார்க்கும் விதமாகப் படுக்கையில் இருப்பது எப்படிச் சரியாகும்?

பாதுகாப்பு அரண்

இந்தத் தீமைகள் எல்லாம் முஸ்லிம்களிடம் ஒருபோதும் வந்து சேராது என்று உறுதியுடன் இருந்த நிலை இப்பொழுது மாறி இருக்கின்றது. எல்லா மக்களிடமும் காணப்படுகின்ற அனைத்து வகையான தீமைகளும் பெரும் பாவங்களும் இன்றைக்கு முஸ்லிம்களிடமும் தீயாய்ப் பரவி வருவதைக் காண்கின்றோம். எப்படி இந்தத் தீமைகள் முஸ்லிம்களிடம் வந்து சேர்ந்தன? என்று ஆய்வு செய்யுங்கள். பாவங்களைத் தடுக்க அல்லாஹ் வழங்கிய பாதுகாப்பு அரண் ஒன்றைத் தகர்த்து விட்டோம். அதன் விளைவாக அனைத்துப் பாவங்களும் நம்மை அடைந்து விட்டன. அந்தப் பாதுகாப்பு அரண் தான் தொழுகை. அதிலும் குறிப்பாக ஃபஜ்ர் தொழுகை. இன்றைய இளவல்கள் மிகப்பெரிய அளவில் திசை மாறிச் செல்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் தொழுகை என்ற பாதுகாப்பு அரணைக் கட்டமைக்காததே! ஓர் இளைஞன் சுயமாக எழுந்து காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பனி, மழை என எந்தச் சூழலாக இருந்தாலும் அதனைக் கடந்து தொடர்ந்து ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றினால் பாவங்களிலிருந்து தடுக்கும் பாதுகாப்புக் கவசத்தை, அரணை அவன் பெற்றுக்கொள்கின்றான் என்று பொருள். நமது இளவல்களுக்கு உரிய வயதில் ஃபஜ்ர் தொழுகையை நாம் பழக்கப்படுத்தி விட்டால் பாவம் செய்யும் சூழல் அமைந்தாலும் அவர்களால் பாவம் செய்வதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

தூக்கத்தைவிடத் தொழுகை மேலானது

தொழுகைகளைச் சரியான நேரத்தில் தொழுவதுதான் இஸ்லாம்; அல்லாஹ்விற்குக் கட்டுப்படுதல். ஆனால் நாம் காரணங்கள் பலவற்றை முன்னிறுத்தி தொழுகையை விட்டு விடுகின்றோம். ஆனால் ஃபஜ்ர் தொழுகையை விடுவதற்குத் தூக்கம் ஒன்றைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. நமது ஆசையை வென்று அல்லாஹ்வின் விருப்பம் தோற்று விடும் போது இங்கே நம் மனோ இச்சையைப் பின்பற்றும் நிலை ஏற்படுகின்றது.அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றாமல் உறங்கி விடும் ஒவ்வொரு முஸ்லிமும் அந்தச் சில மணித்துளிகள் அல்லாஹ்வை விட தம்மையே பெரிதாக நினைக்கிறோம் என்ற மாபெரும் அபாயம் ஏற்படும்.

நயவஞ்சகத்தின் அடையாளம்

நயவஞ்சகர்கள் குறித்து திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கின்றது. அவர்களின் பல்வேறு செயல்பாடுகளைப் பட்டியலிட்டு உண்மை முஸ்லிம்களைச் சீர்திருத்தம் செய்கின்றது. ‘தொழுகையில் அவர்கள் சோம்பலாக நிற்பார்கள்’ (திருக்குர்ஆன் 4:142) குறிப்பாக ஃபஜ்ர், இஷா தொழுகையில் சோம்பலாக இருப்பார்கள். அதற்கான காரணத்தை விரிவுரையாளர்கள் பதிவு செய்கின்றனர். அதாவது நயவஞ்சகர்கள் தூக்கத்தின் தொடக்கமாகிய இஷா, தூக்கத்தின் முடிவாகிய ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் மிகவும் தாமதமாக சுறுசுறுப்பில்லாமல் வந்து சேர்வார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம். நயவஞ்சகர்கள் கூட ஃபஜ்ர் தொழுகையைத் தவிர்க்கக்கூடிய தைரியம் வரவில்லை. தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டே ஃபஜ்ர் தொழுகையை எப்படி முழுவதுமாகப் புறக்கணிக்க முடிகிறது? அதிகாலைத் தொழுகையில் அலட்சியம் நமது இந்த உலக வாழ்வின் வெற்றியையும், மறுஉலக வெற்றியையும் பாழ்படுத்தி விடும். எழுந்திருங்கள். தூக்கத்தை விட தொழுகை மேலானது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்