மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஆலிம்கள்  எழுச்சி பெற வேண்டும்
மௌலவி முஹம்மது நாசர் புஹாரி , 2025 ஜனவரி 16 - 31


 

 

 ‘ஆலிம்களின் எழுச்சியே சமுதாயத்தின் வலிமை’ என்கின்ற மையக்கருத்தில் 2025 ஜனவரி 28 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள L.K.S மஹாலில் காலை 9:30 முதல் மதியம் 1:30 வரை ஆலிம்களுக்கான மாநில மாநாட்டை நடத்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மார்க்க அறிஞர்கள் பிரிவான ராபிதத்துல் உலமா திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு குறித்து மாநாட்டு அமைப்பாளர் மௌலவி முஹம்மது நாசர் புஹாரி சமரசம் இதழுக்கு அளித்த நேர்காணல்

 

ஆலிம்களுக்கான மாநாட்டை இப்போது நடத்துவதற்கான காரணம் என்ன?

இஸ்லாமிய இயக்கங்கள் செயல் திட்டங்களைத்தீட்டி பணிகளைச் செய்து வருகின்றன. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் செய்ய வேண்டிய பணிகளை ஆய்வு செய்து செயல் திட்டம் தீட்டிச் செயல்படுகின்றது. அந்த அடிப்படையில் நடப்பு செயல் ஆண்டில் மாநில அளவில் ஆலிம்களை ஒருங்கிணைத்து உருது பகுதி ஆலிம்களுக்குத் தனியாகவும் தமிழ்ப் பகுதி ஆலிம்களுக்குத் தனியாகவும் மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் 2024 ஜூன் மாதம் வாணியம்பாடியில் உருது பகுதி ஆலிம்களுக்கான மாநில மாநாடு நடைபெற்றது. சமுதாய ஒற்றுமையை மையக்கருத்தாக வைத்து நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் ஐநூறுக்கும் அதிகமான ஆலிம் பெருமக்கள்  கலந்து கொண்டார்கள். நாடறிந்த மார்க்க அறிஞர்கள் சிந்தனையாளர்கள் கருத்துரை வழங்கினார்கள். கருத்து வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைக் கொண்ட ஆலிம்கள் கலந்து மிகப் பெரும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் வழங்கினார்கள். இப்போது தமிழ்ப்பகுதி ஆலிம்களுக்காக திருச்சியில் இந்த மாபெரும் மாநாட்டை நடத்தத்திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். 

 

ஆலிம்களால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று கருதுகின்றீர்களா?

இந்திய நாட்டின் மீது அக்கறை கொண்ட சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். நாடு சந்தித்த எல்லாப் பேரிடர் காலங்களிலும், விடுதலைப் போராட்டத்திலும் தனது சக்திக்கு மீறி முஸ்லிம் சமுதாயம் செயல்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். மக்கள் நலனுக்காக, மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் அரசியலுக்கு வருகிறபோது, எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மதம், மொழி கடந்து அவர்களின் வளர்ச்சிக்காக முஸ்லிம் சமுதாயம் செயல்பட்டுள்ளது. இந்த உழைப்பிற்கு நாட்டு நலனே பிரதான இலட்சியமாகும். ஒருபுறம் முஸ்லிம்கள் இந்த நாட்டு நலனுக்காகச் செயல் பட்டுக் கொண்டிருந்தாலும் மறுபுறம் முஸ்லிம்களுடைய கல்வி, பொருளாதார, அரசியல் நிலை மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை தேசிய சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளது என்பதை நீதிபதி சச்சர் தலைமையிலான அறிக்கை நமக்குக் காட்டுகிறது. அதே சமயத்தில் இஸ்லாமிய வெறுப்பு இந்த நாட்டில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. முஸ்லிம்களின் திருமணம், மணவிலக்கு, வக்ஃப் போன்ற உரிமைகளில் கை வைப்பதோடு மட்டுமில்லாமல், இது குறித்த இஸ்லாமியக் கொள்கைகளுக்கு நேர் எதிரான பொய்ப்பரப்புரைகளும் நடந்த வண்ணம் உள்ளன. 

இச்சூழலில் முஸ்லிம் சமுதாயத்தை, இந்த பலவீனமான நிலையில் இருந்து வலிமையான நிலைக்குக் கொண்டு வருவதற்கும், இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப் பரப்புரைகளை முறியடித்து இஸ்லாத்தின் உண்மை நிலையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இன்றைய காலத் தேவையாக இருக்கிறது. இப்பணியைச் செய்வதற்குத் தகுதியானவர்கள் ஆலிம்களே. முஸ்லிம் சமுதாயம் எப்போதெல்லாம் திக்குத் தெரியாமல் நின்றதோ, அப்போதெல்லாம் ஆலிம்களின்  எழுச்சிமிக்க பணிகளால் தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் ‘எது ஹதீஸ்?’ என்கின்ற குழப்பம் வந்த போதும், கிரேக்கத் தத்துவங்கள் இஸ்லாத்திற்குள் பல சிக்கல் களை ஏற்படுத்திய போதும், காலனி ஆதிக்கம் இந்த உலகைச் சூழ்ந்து நின்ற போதும் அதிலிருந்து மீட்பதற்குக் களப் பணியாற்றியவர்கள் ஆலிம்கள் தான். இன்றைய  முஸ்லிம்  சமுதாயம் வலிமை பெறுவதற்கும் ஆலிம்களின் பணி மிகவும் அவசியமானது. மஹல்லாவைத் தம் கட்டுப்பாட்டில் வைத்து பணிகளை மக்களுடன் இணைந்து செய்யும் வாய்ப்பு ஆலிம்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சமுதாய மாற்றத்தில் பங்கு இருக்கின்றது என்றாலும் ஆலிம்களுக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருப்பதாகக் கருதுகின்றோம்.

 

ஆலிம்களை ஒருங்கிணைப்பது சவாலான பணி இல்லையா?

வழக்கமான மாநாடுகளைப் போல் விளம்பரங்களால் மட்டுமே இதை நிகழ்த்திக் காட்டி விட முடியாது. ஆலிம்களைத் தனித்தனியே சந்தித்து மாநாடு குறித்து உரையாட வேண்டிய தேவை இருக்கிறது. தனிநபர் சந்திப்பு, மாநாட்டு அறிமுகக் கூட்டம், ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்திப்பு, மஹல்லாவிலுள்ள ஆலிம்கள் ஒருங்கிணைப்பு என பல்வேறு தளங்களில் ராபிதத்துல் உலமா திட்டமிட்டு   செயலாற்றி  வருகிறது. அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருப்பதைத் தவிர்க்க இயலாது. கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒருங்கிணைந்து செயல்படுவதை ஆலிம்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்கள். ஆலிம்கள் எங் களுக்கு உற்சாகமான வரவேற்பையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றார்கள். இந்த மாநாட்டில் ஆலிம்கள் மட்டுமின்றி இறுதி ஆண்டு பயிலும் அரபிக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். அரபிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் கட்டுரைப் போட்டி ஒன்றையும் நடத்துகின்றோம்

 

பல்வேறு சிந்தனைப் பிரிவுகளைக் கொண்ட ஆலிம்கள் ஒன்று கூடும் போது நீங்கள் எத்தகைய கருத்தியலை முன்வைப்பீர்கள்?

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொதுவாக கருத்து வேறுபாடுகளில் கவனம் செலுத்துவது இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்ஹப், தரீக்கா, இயக்கங்களை விரும்பாதவர்கள் எனப் பலவித சிந்தனையில் ஆலிம்கள் இருக்கின்றார்கள். இந்த மாநாடு அனைத்து ஆலிம்களையும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து அழைக்கின்றது. கருத்து வேறுபாடுகளை மறப்பதற்காக  அழைக்கின்றது.  மதரஸா போன்ற கலாசாலைகளில் விவாதிக்க வேண்டிய விஷயங்களைப் பொது மேடைகளில் விவாதித்து மக்களிடையே கருத்து மோதல்களை உருவாக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும் என்பதை இந்த மாநாட்டில் நாம் முன் வைக்க விரும்பும் மாபெரும் சிந்தனையாகும். இறை மார்க்கத்தை இந்த மண்ணில் மேலோங்கச் செய்ய வேண்டிய மகத்தான பணியைச் செய்வதற்கான வேண்டுகோளை விடுக்கின்றோம். ஒவ்வொருவரும் அவரவர் தளங்களிலும், களங்களிலும் இருந்து கொண்டே இந்தப் பணியை முன்னெடுக்கலாம்.

 

மாநாட்டின் மையக்கருத்தைக் குறித்து சொல்லுங்கள்!

ஆலிம்களின் எழுச்சியே சமுதாயத்தின் வலிமை என்பது மாநாட்டின் மையக்கருத்து. சமுதாயத்தை  வழிநடத்திச்  செல்லும் ஆலிம்கள் எழுச்சி பெற வேண்டும்; அவர்கள்  ஒருங்கிணைய  வேண்டும்; ஆலிம்கள்  எப்படி  இருக்கின்றார்களோ அது போன்றே சமுதாயமும் இருக்கும். எனவே ஆலிம்கள் கருத்தியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் தங்களை வளர்ச்சி அடைந்தவர்களாக ஆக்கிக் கொள்ளும் பொழுது அவர்கள் சார்ந்து இருக்கிற சமுதாயமும் வலிமை மிக்கதாக மாறும் என்பதைக் கவனப்படுத்துவதுதான் மாநாட்டின் நோக்கமாகும்.

 

மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை எப்படித் திட்டமிட்டுள்ளீர்கள்?

தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்  பெருமக்கள் உரை நிகழ்த்த இசைந்துள் ளார்கள். மக்களின் கருத்தை இஸ்லாத்திற்குச் சாதகமாக மாற்றுவதில் ஆலிம்களின் பங்கு, சமுதாயக் கட்டமைப்பில் நாற் பெரும் இமாம்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து சமுதாயாத்தை மீட்டெடுப்பதில் ஆலிம்களின் பங்களிப்பு, வளமான இந்தியாவிற்கு ஆலிம்களின்  பங்கு, முன்மாதிரி மஸ்ஜித்; முன்மாதிரி மஹல்லா, இஸ்லாமிய சிந்தனையைச்  செழித்தோங்கச் செய்வதில் ஆலிம்கள்,  நவீன கால சீரா வழிமுறை, ஆலிம்களும் ஆளுமைகளும் போன்ற பல்வேறு தலைப்பில் உரைகள், சிந்தனை அரங்கம் நடை பெறஉள்ளது.

 

இந்த மாநாடு குறித்தும், ராபிதத்துல் 

உலமா குறித்தும் மேலும் விவரங்களை அறிய 

9003429432 என்ற அலைப்பேசி எண்ணில் 

தொடர்பு கொள்ளலாம். 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்