மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

தியாகத்தின் தலைமகன் இப்ராஹீம்(அலை)
ஷமீம் ரியாஸ், June 1-15, 2025


இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. இந்த ஐந்து தூண்களும் ஒவ்வொரு வணக்க வழிப்பாட்டைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இதில் இறுதியானது தான் ஹஜ் வழிபாடு. ஹஜ்ஜைத் தவிர மற்ற அனைத்து வணக்கங்களும் உடல் சார்ந்த அல்லது பொருள் சார்ந்த வணக்கங்களாக  இருக்கின்றன.  ஹஜ் என்ற வணக்கமோ உடல், பொருள் இரண்டும் சார்ந்த வணக்கமாக உள்ளது. தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற எந்த வணக்கமும் ஒரு தனி மனிதனின் தியாகத் தால் விளைந்தவை அல்ல. ஆனால் ஹஜ் ஒரு தனி மனிதரின், அவருடைய குடும்பத்தினரின் தியாகங்களினால் உருவான வணக்க வழிபாடு ஆகும். ஹஜ் ஒரு வணக்கமாக உருவெடுப்பதற்குக் காரணமாக இருந்த ஏகத்துவத்தின் தந்தை, அல்லாஹுவின் நண்பர் இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்விலிருந்து நாம் பாடம் பெறும் அழகிய தருணம்தான் ஹஜ் காலம்.

பகுத்தறிவின் தந்தை

முழு உலகமும் இறைவனை மறந்திருந்த வேளையில் பிறந்தவர் இப்ராஹீம்(அலை)அவர்கள். இளம் வயதிலேயே இறைவனைத் தேட முற்பட்ட இப்ராஹீம்(அலை) அவர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற படைப்புகள் இறைவனாக இருக்குமோ என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். ஆனால் மறையும் திறன் கொண்ட இவை கண்டிப்பாக இறைவனாக இருக்கவே முடியாது என்பதில் நிலைத்து நின்றார்கள். எனவே இவற்றைப் படைத்த இறைவன் ஒருவன் நிச்சயமாக இருக்க வேண்டும். எல்லாமும் எல்லோரும் எவனிடம் சார்ந்து இருக்கின்றதோ, அனை வரின் வாழ்வும் மரணமும் இலாபமும் இழப் பும் யாரிடம் இருக்கின்றதோ அத்தகைய ஒருவன் தான் இறைவனாக இருக்க முடியும் என்று இப்ராஹீம்(அலை) அவர்கள் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார்கள். இவ்வாறாக ஏகத்துவத்தை பூமியில் நிலைநாட்டினார்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள். சோதனைகளில் சாதனை தாம் அடைந்த ஏகத்துவத்தின் ஒளியை தனது தந்தைக்கும் தான் சார்ந்திருந்த சமூகத்திற்கும் எடுத்துக் கூறியதால் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

சொத்தில் உரிமை இல்லை, வீட்டை விட்டு வெளியேற்றி விடுவேன் என்று தந்தையும், எங்களில் யாரும் உனக்கு அடைக் கலம் தர மாட்டோம் என்று சமூகமும் விரட்டி அடித்தது. இப்ராஹீம்(அலை) அவர்களின் மீது அரசவையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. துணையற்று விடப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் சத்தியத்திற்காக அசையாத மலைபோல உறுதியுடன் நின்றார்கள்.

அவர்களது அழைப்புப் பணியின் தாக்கம் அரசனை எட்டியபோது அவன் கொதித்து எழுந்தான். நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியுமாறு உத்தரவிட்டான். ஆனால் நபி இப்ராஹீம் அவர்கள் இறைவன் மீது வைத்திருந்த உறுதியான நம்பிக்கையால் இறைவன் அந்த நெருப்பை பூஞ்சோலை யாக மாற்றினான். இறைவனுக்காக நாம் எந்தத் தியாகத்தைச் செய்தாலும் அதில் இறைவன் மிகச்சிறந்த அபிவிருத்தியைத் தருவான் என்ற பேருண்மையை இங்கு நாம் அறிந்து கொள்ளலாம். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அடிபணிந்து வாழுங்கள் என்று ஏகத்துவத்தை எடுத்துரைத்த இப்ராஹீம்(அலை) அவர்கள் சிரியா, ஃபலஸ்தீன், எகிப்து போன்ற நாடுகளுக்குப் பயணப்பட்டார்கள்.

ஏகத்துவத்தை எடுத்தியம்பிக் கொண்டும் அதை நடைமுறைப்படுத்திக் கொண்டும் இருந்த இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு எண்பது வயது ஆன போது இறைவன் அவர்களுக்குக் குழந்தைச் செல்வத்தை வழங்கினான். நமது வாழ்வு தான் நாடோடி வாழ்வாகிவிட்டது. நம் பிள்ளையாவது செல்வ வளமும், செழிப்பும் பெற்று வாழ வேண்டும். அந்தத் தகுதி நிலைக்கு தேவையான வழிகளை மேற்கொள்வோம் என்ற எண்ணம் சாதாரண மனிதனுக்குத் தோன்றியிருக்கும். ஆனால் இத்தகைய எண்ணம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குத் தோன்றவில்லை. மாறாக ஏகத்துவ முழக்கத்தைப் பரப்புவதற்காகத் தன் பிள்ளையைத் தயார்படுத்தினார்கள்.

உறுதுணையான மனைவி

மனைவி ஹாஜிரா(அலை) அவர்களையும் வயது முதிர்ந்த காலத்தில் கிடைத்த மகனையும் மனிதச் சஞ்சாரம் இல்லாத மக்கத்து பாலைவனத்தில் விட்டு விட்டு வரும்படி இறைவன் கட்டளையிட்டான். அந்தக் கட்டளையையும் சிறப்பாக நிறைவேற்றி அந்தச் சோதனையிலும் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் வெற்றி பெற்றார்கள். மனைவியையும் மகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்லும்போது, ‘ஏன் எங்களை இங்கு விட்டுச்செல்கிறீர்கள்?’ என்று ஹாஜிரா(அலை) அவர்கள் கேட்டதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் இப்ராஹீம்(அலை) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

‘இது இறைவனின் கட்டளையா?’ என்று அம்மையார் கேட்டபோது, ‘ஆம்!’ என்று கூறி விறுவிறுவென நடந்து சென்றார்கள். கணவனின் கீழ்ப்படிதலுக்குச் சற்றும் சளைக்காத மனைவியான ஹாஜிரா(அலை) அவர்கள், ‘இது இறைவனின் கட்டளை எனில் எங்களை அவன் பார்த்துக் கொள்வான்’ என்று உறுதியுடன் கூறினார்கள். இறைவனின் சோதனையில் கணவன் வெற்றி பெற மனைவி உறுதுணையாக நின்றார்.

தந்தைக்குச் சளைக்காத மகன்

இறைவனின் அனைத்துச் சோதனை களிலும் மிகச் சிறந்த முறையில் வெற்றி அடைந்து கொண்டிருந்த இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு இறைவன் அடுத்து ஒரு மாபெரும் சோதனையைக் கொடுத்துச்சோதித்தான். நபி இப்ராஹீம்(அலை)அவர்கள் அனைத்தையும் விட இறைவன் மீது அதிகமாக அன்பு கொண்டு உள்ளாரா? என்பதுதான் அந்தச் சோதனை. தமக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக அழிந்துவிட்ட வயோதிக நிலையில் பிறந்த அந்தக் குழந்தையை அகிலத்தின் இறைவனுக்காக இப்ராஹீம்(அலை) அவர்களால் தியாகம் செய்ய முடியுமா? என்று பார்ப்பது தான் இறைவனின் இறுதிச் சோதனையாக இருந்தது.

இப்ராஹீம்(அலை) அவர்கள் மகனிடம், ‘மகனே நான் உன்னைப் பலியிடுவதாக எனக்குக் கனவில் காட்டப்பட்டது. உங்கள் கருத்தைக் கூறுங்கள்’ என்று கேட்டவுடன், இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த, சிறந்த தாயின் வளர்ப்பினால் வார்த்தெடுக்கப்பட்ட இஸ்மாயீல்(அலை) அவர்கள், ‘தந்தையே! உங்களுக்குக்  கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றுங்கள். இறைவன் நாடினால் என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண் பீர்கள்’ என்று கூறி தந்தையை மிஞ்சிய தனயன் என்பதை நிரூபித்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்களின் இந்த அடிபணிதலைப் பொருந்திக் கொண்ட இறைவன் ஆட்டை அறுக்குமாறு உத்தரவிட்டான். இவ்வாறுதான் நாம் உளுஹிய்யா என்ற வழிபாட்டைப் பெற்றோம்.

இவ்வாறு இறைவனின் அனைத்துச் சோதனைகளிலும் மிகச் சிறப்பாக வெற்றி பெற்ற இப்ராஹீம்(அலை) அவர்களை உலகம் முழுவதற்கும் தலைவராகவும் இமாமாகவும் இறைவன் தேர்ந்தெடுத்தான். ஒரு சமுதாயம் முழுவதும் செய்யும் வணக்கத்தை ஒரு சமுதாயம் முழுவதும் செய்யும் தியாகத்தை தனி மனிதனாக நின்று செய்தவர் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள். எல்லாச் சூழ்நிலைகளிலும் ஏன் எதற்கு எப்படி என்ற எதிர் கேள்விகள் இன்றி இறைக் கட்டளைக்கு உடனடியாகக் கீழ்படிந்தவர்கள் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள். தந்தை மிரட்டிய போதும் சமுதாயம் விரட்டிய போதும் ஆட்சியாளன் நெருப்பிலிட முற்பட்ட போதும் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நிலைத்து நின்றார்கள். எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலைகளிலும் இறைவனிடம் மட்டுமே முழு நம்பிக்கை வைத்தார்கள். யார் என்ன சிரமங்களைத் தந்தாலும் சத்தியத்தில் ஒருபோதும் சமரசம் இல்லை என்று நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து நின்ற இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்க்கைப் பாடங்களை இந்த ஹஜ்ஜுப் பெருநாள் நமக்கு நினைவூட்டுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இப்ராஹீம்(அலை) அவர்கள் செய்த துஆவின் பலனாக நமக்குக் கிடைத்த அருட்கொடை தான் சுவனத்தின் தலைவர், இறுதித் தூதர், முஹம்மது நபி(ஸல்) அவர்கள். நமக்குச் சிறந்த முன்மாதிரி நபி(ஸல்) என்று கூறும் அல்லாஹ், நபி இப்ராஹீம்(அலை) அவர்களிடம் உங்களுக்கு முன்மாதிரி உள்ளது என்று கூறியுள்ளான். இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக அல்லாஹ் ஹஜ் வணக்கத்தை ஏற்படுத்தினான். உண்மையில் இந்த ஹஜ் உலகின் மிகப்பெரிய சர்வதேச ஆன்மிக மாநாடாகும். ஹஜ் பயணம் முற்றிலும் இறைவனுக்காக மட்டுமே, இறைவன் விதித்த கடமையை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் பயணமாகும். ஏகத்துவத்தின் ஒளியை உலகெங்கும் பரப்பிய ஏகத்துவத் தலைவர் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போல நமது குடும்பத்தையும் ஏகத்துவக் கொள்கையில் வார்த்தெடுக்க உறுதி பூணுவோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்