‘இணைப்பே இலக்கியம்’ என்ற முழக் கத்தை முன்வைத்து உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சி மாநகரிலுள்ள MIET பொறியியல் கல்லூரி வளாகத்தில் 2025 மே மாதம் 9, 10, 11 தேதிகளில் சிறப்பாக நடந்தது.
இம்மாநாட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்ததும், தனது உரையில் அவர் திருநெல்வேலி நகரில் அரசு சார்பில் கட்டப்படவிருக்கின்ற நூலகத்திற்கு காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்களின் பெயர் சூட்டப்படும் என அறிவித்ததும் பேராளர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்வடையச் செய்தது.
அதனைத் தொடர்ந்து அன்றும் 10, 11 தேதிகளிலும் சமய நல்லிணக்கக் கருத்தரங்கம், கவியரங்கம், ஆய்வரங்கம், மார்க்க அறிஞர்கள் அரங்கம், மகளிர் அரங்கம், ஊடக அரங்கம், இஸ்லாமியப் பாடல் அரங்கம், நாடும் நடப்பும் என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம், நிறைவு விழா என பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் முகையதீன் அவர்களுக்கு உமறுப் புலவர் விருதும், பேராசிரியர் முனைவர் சே.சாதிக் அவர்களுக்கு கவிக்கோ விருதும் முதல்வரால் வழங்கப்பட்டன. மேலும் பத்து ஆளுமைகளுக்கு இலக்கியக் காவலர் விருதும், எழுத்தாளர்களுக்கு இலக்கியச் சுடர் விருதுகளும் வழங்கப்பட்டன.
பீட்டர் அல்போன்ஸ், அருட்திரு ஜெகத் கஸ்பர் ராஜ், தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள், மௌலானா எம்.அப்துல் காதர் பாகவி ஹழ்ரத், முஸ்லிம் லீகின் மாநில முதன்மைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், முனைவர் ஜெ.ராஜா முகம்மது, பேராசிரியர் சாயபு மரைக்காயர், P.A.காஜா முயினுத்தீன் பாகவி, எம்.சதீதுத்தீன் பாகவி, இல்யாஸ் ரியாஜி, கம்பம் பீர்முகம்மது பாகவி, அப்துல் குத்தூஸ் அஸ்ஹரி, வக்ஃப் வாரிய உறுப்பினர் ஃபாத்திமா முஸஃப்பர், SDPIகட்சித் தலைவர் நெல்லை முபாரக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் M.H.ஜவாஹிருல்லா, திருச்சி சிவா, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, மேனாள் நீதியரசர்கள் G.M.அக்பர் அலீ, K.N.பாஷா, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஜோ.அருண், பேராசிரியை முனைவர் பர்வீன் சுல்தானா உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகள் இம்மாநாட்டின் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
தமிழ்நாடு மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் பேராளர்கள் கலந்து கொண்டனர். இலங்கையிலிருந்து வந்த முப்பதுக்கும் மேற்பட்ட பேராளர்களை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பிய நிகழ்ச்சி அனைவரையும் வருந்தச் செய்தது. இம்மாநாட்டில் அனைத்து நிகழ்வுகளிலும் பார்வையாளராகக் கலந்து கொண்டு நள்ளிரவைத் தாண்டிய பின்னரும் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த பேராசிரியர் K.M. காதர் முகையதீன் அவர்களின் இலக்கிய ஆர்வம் அனைவரையும் ஈர்த்தது.
இதற்கு முன்னர் நடைபெற்ற மாநாடுகளைப் போல் அல்லாமல், இந்த மாநாட்டில் இலக்கியம் மட்டுமல்ல, முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்களும் விவாதிக்கப்பட்டன. ஆனால் அனைத்து அரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றியவர்கள் இலக்கியத்தின் சிறப்பையும் மேன்மையையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. குறிப்பாக மார்க்க அறிஞர் அரங்கத்தில் இஸ்லாமும் இலக்கியமும் என்ற பொதுத் தலைப்பில் உரையாற்றிய மார்க்க அறிஞர்கள் அனைவரும் இஸ்லாம் இலக்கியத்திற்கு எதிரானது அல்ல; இசைவானதே என்ற கருத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் கவியருவி தி.மு. அப்துல்காதர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் தாங்கள் யாத்திருந்த கவிதைகளை வாசித்தனர். கவிதைகள் சிந்தைக்கு விருந்தாக அமைந்திருந்தன. தலைமை வகித்த பேராசிரியர் தி.மு. அப்துல் காதர் இடையிடையே தனது கவிதை வரிகளால் அரங்கத்தைக் கலகலக்கச் செய்தார். கவிமழையில் மக்கள் நனைந்து மகிழ்ந்தனர்.
10.5.2025 அன்று மார்க்க அறிஞர் அரங்கம் நடந்தேறிய அதே நேரத்தில் மற்றொரு வளாகத்தில் மகளிர் அரங்கமும் நடைபெற்றது. இதனால் இங்குள்ளவர்கள் அங்கும் அங்குள்ளவர்கள் இங்கும் வர இயலாத நிலைமை ஏற்பட்டது. நேர நெருக்கடி காரணமாக இப்படிச் செய்ய நேரிட்டதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அன்று நடைபெற்ற ஊடக அரங்கமும் களை கட்டியது. ஊடகம் கவலையும் கவனமும் என்ற பொதுத் தலைப்பில் உரையாற்றிய அனைவரும் தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கான ஒரு மின்னணு ஊடகம் இல்லாத குறையையும், முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ தினசரி ஏடான மணிச்சுடருக்கு சமுதாய மக்கள் போதிய ஆதரவு அளிக்காத நிலையையும் கவலையுடன் பதிவு செய்தனர்.
சமரசம் இதழின் பொறுப்பாசிரியர் வி.எஸ். முஹம்மத் அமீன் இந்த ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. அன்று இரவு நடைபெற்ற பாட்டரங்கத்தில் இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முன்னணி முஸ்லிம் பாடகர்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர். இதற்கு முந்தைய இலக்கிய மாநாடுகளில் இல்லாத ஒரு நிகழ்ச்சி இது. சுவையாகவே இருந்தது.
10.5.2025 அன்று நடைபெற்ற 11 ஆய்வரங்கங்களில் மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்தவர்கள் தங்களது கட்டுரையை வாசித்தும் அதற்குத் தக்க விளக்கங்கள் அளித்தும் பேசினர். இக்கட்டுரைகளின் தொகுப்பு மாநாட்டில் வெளியிடப்பட்டது. மாநாட்டு மலரும் வெளியிடப்பட்டது. இதிலும் முன்னணி எழுத்தாளர்களின் கட்டு ரைகள் இடம் பெற்றுள்ளன. 11.5.2025 அன்று காலையில் நடைபெற்ற நாடும் நடப்பும் கருத்தரங்கத்தில் உரையாற்றிய தொல்.திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, S.N.சிக்கந்தர் உள்ளிட்டோர் இந்திய முஸ்லிம் சமூகம் இன்று சந்தித்து வருகின்ற நெருக்கடிகள் குறித்து விரிவாகவே பேசினார். நிறை உøரயாற்றிய திருச்சி சிவா எம்.பி. இஸ்லாமிய இலக்கியங்களின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டு பார்வையாளர்களை மகிழ்ச்சியுறச் செய்தார்.
இம்மாநாட்டில் இலக்கியம் குறைவாகப் பேசப்பட்டதாகவும், அரசியல் கருத்துகள் அவற்றை விஞ்சி நின்றன என்றும், சிலர் குறை கூறியுள்ளனர். காலத்தின் தேவை கருதி, இன்றைய இந்திய முஸ்லிம்கள் சந்தித்து வருகின்ற நெருக்கடிகளைப் பற்றிப் பேசியதில் தவறில்லை என்பதே எனது கருத்தாகும். ஃபாசிஸ சக்திகளின் கோரத் தாக்குதல்களை எதிர்கொள்ள கதை, கட்டுரை, கவிதை, சினிமா, நாடகம் என இலக்கியத்தின் அனைத்து அம்சங்களையும் ஆயுதங்களாகக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனை இம்மாநாடு செவ்வனே செய்து முடித்துள்ளது என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.
ஏராளமான நிகழ்ச்சிகள், ஏராளமான பேச்சுகள், அவர்கள் பேசுவதற்குப் போதிய நேரமின்மை ஆகியனவும் சில பேராளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இது போன்ற மாநாடுகளில் இந்த நெருக்கடிகள் தவிர்க்க இயலாதது என்பதே என் கருத்து. எனினும் மாநாட்டில் பேசிய ஆளுமைகள் தங்களது முக்கியமான கருத்துகளைப் பதிவு செய்து கொண்டனர் என்பதை மாநாடு நடைபெற்ற மூன்று நாள்களிலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட என்னால் உறுதியாகக் கூற முடியும்.
மாநாட்டில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்ளவில்லை. இளைஞர்கள் கலந்து கொள்ளவில்லையென்றும் சில பேராளர்களும் பார்வையாளர்களும் குறிப்பிட்டிருக்கின்றனர். இதற்கான பொறுப்பு முழுவதையும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மீது சுமத்த முடியாது. ஒவ்வொரு இலக்கியவாதிக்கும் இலக்கிய ஆர்வலருக்கும் இதில் பங்கு உண்டு. ஊர் கூடித் தேர் இழுத்தலே சாத்தியமான ஒன்று.
மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களில் ஒரு கணிசமான பகுதியினர் ஆங்காங்கே நின்று கொண்டு அலைப்பேசி, கேமரா கொண்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டும், ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டும், முக்கியமான தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அதனைக் கவனிக்காமல் அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டும் இருந்தனர் என்பது கசப்பான உண்மையாகும். இந்தக் கவனிப்பின்மை நோய் களையப்பட வேண்டும். இந்தக் கவனிப்பின்மைக்கு ஏற்பாட்டாளர்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?
வாசகர்கள் ஒன்றுகூடும் மாபெரும் இலக்கியத் திருவிழாவான இந்த மாநாட்டில் புத்தக அரங்குகள் அமைக்க ஏற்பாடு செய்திருக்கலாம். வாசிப்பையும், பதிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் நூல் அரங்குகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் வெளிநாட்டிலிருந்து வந்த பேராளர்கள் நூல்கள் வாங்கிச் செல்வதற்கான நல்வாய்ப்பாக அமைந்திருக்கும். குறைந்தபட்சம் இப்படியான நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்பதையாவது அறிந்திருப்பார்கள். புத்தகக் காட்சி அமைத்தால் பேராளர்கள் நிகழ்வைக் கவனிப்பதற்கு இடையூறாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் கருதியிருக்கலாம். நிகழ்ச்சி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் புத்தக அரங்குகளுக்கான விற்பனையை அனுமதித்திருக்கலாம்.
இம்மாநாடு சிறப்புற நடைபெறுவதற்காகக் கடந்து ஆறு மாதங்களாகத் தங்களது நினைப்பையும், நேரத்தையும், உழைப்பையும் வழங்கிய இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சே.மு. முஹம்மது அலீ, பொதுச் செயலாளர் பேரா. மு.இ. அஹமது மரைக்காயர், பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜஹான் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். இந்தப் பெருமக்களையும் துணை நின்றவர்களையும் பாராட்டுவோம்.
மாநாடு குறித்துப் பேராளர்களும், மற்றவர்களும் வழங்கியுள்ள சில ஆக்கப்பூர்வமான கருத்துகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு எதிர்வரும் நாள்களில் இலக்கியக் கழக நிர்வாகிகள் செயல்படுவார்கள் என நம்புகிறேன். இலக்கியம் இதயங்களை இணைக்கட்டும்! இறையருள் நிலவட்டும்!
புகைப்படங்கள் : கவிஞர் ஜலால்