மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

முஹம்மது நபி(ஸல்) போதித்த குழந்தை வளர்ப்பு
கா.தனம் 12ஆம் வகுப்பு இ பிரிவு, அமீர் ஜமால் மேல்நிலைப்பள்ளி, இடையன்குளம்., June 16-30, 2025


சென்னை பெரம்பூர் ஜமாலியா மேனிலைப்பள்ளி ஆண்டுதோறும் நடத்தும் அனைத்துப் பள்ளி நபிகள் நாயகம் கட்டுரைப் போட்டியில் 2024-2025 (51ஆவது) ஆண்டிற்கான போட்டியில் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கான பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை

நாம் வளர்ந்தது போல் இன்றைய பிள்ளைகளை வளர்க்க முடியாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறார்கள். அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பெற்றோருக்கு அஞ்சி நடந்தவர்கள் இப்போது பிள்ளைகளைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோரைக் கண்டு அஞ்சி நடந்த இறுதித் தலைமுறையும் நாமே. பிள்ளைகளைக் கண்டு அஞ்சிய முதல் தலைமுறையும் நாம்தான் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.

இறைவன்  திருக்குர்ஆனில்  கூறிய வசனங்களையும் முஹம்மது நபி சொன்ன திருமொழிகளையும் ஏற்று குழந்தையை வளர்ப்போமானால் இறை அருளைப் பெற்ற குழந்தையாக இவ்வுலகில் வலம் வருவார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

பண்பாளர் போதிக்கும் பணிவு

தாழ்மை இறைவனின் திருவருளைப் பெற்றவர்களின் குணமாகும். பெருமை இறைவனின் திருவருளைப் பெறாத ‘பிர்அவ்ன்’ போன்றோரின் குணமாகும். ‘பணிவு கொள்வதன் சிறப்பு என்பது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைக் கண்டவுடன் அவருக்குச் சாந்தி சொல்வதும், அவையில் மரியாதையாக ஒதுங்கியிருப்பதுமாகும்’ இதனைப் பெற்றோர்கள் தங்கள் பிள் ளைகள் தங்கள் சொல் கேட்டு நடக்கும் தருணத்திலேயே அவர்கள் மனதில் பதிய வைத்து விட வேண்டும்.

‘சங்கையுள்ளவன் வணக்கசாலியானால் பணிவு கொள்வான். அற்பனாகிய ஈனன் வணக்கசாலியானால் பெருமை கொள்வான்’. ‘தாழ்வாகப் பணிவுடன் நடப்பவர்களைக் கண்டால், நீங்கள் அவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்’ என்பது முஹம்மது நபி அவர்களின் பொன்மொழியாகும். இவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து, அதன்படி நடக்க வைத்தால் குழந்தைகள் சரியான பாதையில் நடைபோடுவார்கள்.

சங்கைக்குரியோன் காட்டும் சகிப்புத் தன்மை

சகிப்புத் தன்மை என்பது எவரேனும் தீய சொற்கள் பேசி விட்டாலோ, தமக்கு எதிராகத் தீயசெயல்களைச் செய்து விட்டாலோ, அதற்குப் பதிலாக ‘எந்தத் தீய சொற்களும் பேசாமலிருப்பது, எந்தத் தீய செயல்களையும் செய்யாமல் இருப்பது. ‘அவர்கள், (நிந்தனையாக) கூறுவதைக் சகித்துக் கொண்டு கண்ணியமாக அவர்களை விட்டு ஒதுங்கி விடுவீராக!’ என்று திருக்குர்ஆனில் 73ஆவது அத்தியாயம் 10ஆவது வசனம் பேசுகிறது.

‘மனிதர்களுடன் கலந்துறவாடி, அவர்கள் இழைக்கும்  துன்பங்களைச்  சகித்துக் கொள்ளும் முஸ்லிம், மனிதர்களுடன் கலந்துறவாடாமலும், அவர்கள் இழைக்கும் துன்பங்களைச் சகிக்காமல் இருக்கும் முஸ்லிமை விடச் சிறந்தவர்’ என முஹம்மது நபி அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

‘நீசத்தனமான சொற்களைக் கேட்டு ஒருவர் சகித்துக் கொள்வாராயின் அவருக்குப் பத்து நன்மைகள் பதிவு செய்யப்படும்’ என்று நபி மூஸா அவர்கள் நவின்றிருக்கிறார்கள். குர்ஆன் வசனத்தையும் முஹம்மது நபி அவர்களின் திரு உரைகளையும் தானும் மேற்கொண்டு பிள்ளைகளுக்கும் அறிவுறுத்தி வளர்த்தால் சகிப்புத்தன்மை உள்ள பிள்ளைகளாக வளர்வார்கள் என்பதில் ஐயமில்லை.

மாசுடையோரை மன்னிக்கும் மாண்பு

இறைவனின் குணங்களில் ஒன்று மன்னித்தல். அடியார்கள் செய்யும் தீமைகளை, வஞ்சகங்களை, பொறாமை போன்ற தீய குணங்களை மன்னித்து அவர்களுக்கு அருளை வேண்டுவதால் அவன் உண்மையான இறை அடியானாகின்றான்.

‘மன்னிக்கும் குணம் கொண்டோரே தண்டனை அளிக்கும் சக்தி உடையோராகிறார்’ என்றும் ‘உன் எதிரியை நீ தண்டிப்பதற்குச் சக்தி பெற்றிருக்கையில் அவனை மன்னித்து விடு. இது உன் அதிகாரத்திற்குக் கிடைத்திருக்கும்  நன்றியறிதலாகும்’ என்றும் கலீஃபா அலீ அவர்கள் கூறியிருக்கிறார்கள். ‘பழி தீர்க்கும் சக்தியிருந்தும் மன்னித்து விடுகின்றானே அவன் தான் சிறந்தவன்’ என்று நபி மூஸா அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் குழந்தைகளும் மன்னிக்கும் குணத்தைப் பெறுவார்கள். இந்தக் குழந் தைகளும் தவறு செய்யும் போது மற்றவர்கள் மன்னிப்பார்கள்.

மனித நேயம் என்னும் நற்குணம்

மனிதன் மதம், மொழி, இனம், மேல் சாதி, கீழ் சாதி, ஆண்டான், அடிமை போன்றவற்றால் பிரிந்து வாழ்கிறான். இவற்றையெல்லாம் கடந்து மனிதனை மனிதனாகப் பார்க்கும் பார்வையே மனிதநேயம் என்கிறோம்.

‘நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீர்களாக! அப்பொழுது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் உற்ற நண்பரைப் போல் ஆகி விடுவார்’ என்று திருக்குர்ஆனில் 41ஆம் அத்தியாயத்தில் 34ஆம் வசனம் பேசுகிறது.

‘மானிடர் மீது ஒரு காலம் அண்மிக்கும். உங்களில் மனிதப் பண்பும் நற்குணமும் குன்றி மனிதரை மனிதம் வெறுத்து வாழ்வர். இந்நிலை நிலவுகையில் குழப்பங்களை எதிர்பார்ப்பீர்கள்’ என்று முஹம்மது நபி அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அதனால் மனித நேயத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் மனித நேயம் மிக்கவர்களாக மற்றவர்கள் மதிக்கும் நல்லவர்களாக வலம் வருவார்கள் என்பதில் ஐயமில்லை.

உண்மை எனும் உயர்பண்பு

உண்மை என்னும் பதத்திற்குத் தமிழில் வாய்மை என்று கூறப்படுகிறது. ‘சத்யமேவ ஜெயதே’ என்னும் அரசுச் சின்னத்தில் ‘வாய்மையே வெல்லும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. காரணம் வாய்மையின் வலிமை வேறு எந்தப் பண்பிற்கும் இல்லை எனலாம்.

‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் உண்மை பேசுபவருடன் சேர்ந்து இருங்கள்’ என்று புனித குர்ஆனில் 9ஆம் அத்தியாயத்தின் 119ஆம் வசனம் பேசுகிறது. இறைவனை அஞ்சுதலுக்கு அடுத்தபடியாக உண்மை பேசுவோர் உயர்ந்து நிற்கிறார்கள் என்று இந்த வசனம் நமக்கு எடுத்துக்கõட்டுகிறது. உலக வாழ்க்கையில் யாரும் தனியாக வாழ்ந்து விட முடியாது. ஒருவருடன் ஒருவர் சேர்ந்துதான் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்கின்ற போது நாம் கட்டாயம் உண்மை பேசுபவர்களுடன்தான் சேர்ந்து இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

‘உன் நண்பன் யார் என்று சொல். நீ யார் என்று நான் சொல்கிறேன்’ என்ற பழமொழி சிந்திக்கத்தக்கது. முஹம்மது நபி அவர்கள் சிறு வயதிலேயே ஊர் மக்கள் போற்றும் இரு பண்பைப் பெற்றிருந்தார்கள். நம்பிக்கைக்குரியவர், உண்மைக்குரியவர் என்பதுதõன் அந்த இரு பண்புகள்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால் நாமும் நமது பிள்ளைகளைச் சிறுவயதிலிருந்தே பொய் பேசுவதை நீக்கி, எப்போதும் உண்மையான பேச்சுகளைப் பேசும் பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். ‘இந்த நாள் உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மை பலனளிக்கும் நாளாகும்’ என்று திருக்குர்ஆனின் 5ஆம் அத்தியாயம் 119ஆம் வசனம் குறிப்பிடுகிறது.

இவ்வாறு யுக முடிவு நாளான மறுமை பற்றிப் பேசும் போதும் உண்மையை வலியுறுத்துகிறது. ‘மேலும் நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்’ என்று திருக்குர்ஆனில் 2ஆம் அத்தியாயம் 42ஆம் வசனம் பேசுகிறது.

மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனங்கள் எப்போதும் உண்மையைப் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தன் பிள்ளைகளுக்கு அதனை அறிவுறுத்த வேண்டும் என்றும் நமக்குப் போதிக்கிறது.

முடிவுரை

இறைவனுக்கு  நன்றி  செலுத்துதல், பொறாமையைப் பொசுக்குதல், இன்னா செய்தார்க்கும் இனிய செய்தல் போன்ற குணங்களையும் குழந்தை வளர்ப்பு முறையில் ஏராளமாய் எழுதலாம். உலகம் நிலையானது என்றும் அதன் சுகங்களும் நிலையானவை என்றும் ஒரு மாயத் தோற்றத்தை மனிதர்களின் மனதில் சைத்தான் ஏற்படுத்துகிறான். இந்த ஏமாற்று வேலையை யார் புரிந்து கொண்டார்களோ, அவர்களிடம் மாயக்கார சைத்தான் தோற்றுப் போய் விடுகிறான்.

அதனால் திருக்குர்ஆனின் வசனங்களையும் முஹம்மது நபி அவர்களின் போதனைகளையும் முதலில் பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை வளர்ப்பு பற்றி இøறமறை பெற்றோர்களுக்குப் போதிக்கும் அறிவுரைகளையும், முஹம்மது நபி அவர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்திய எச்சரிக்கைகளையும் மனதில் கொண்டு, பிள்ளைகளை வளர்க்க முடியும்.

செல்லும் நெட்டும் உடைத்தாயின் இல்வாழ்க்கைஅல்லும் பகலும் கெடும்என்னும் புதுக் குறளுக்கு ஏற்ப பெற்றோர்கள் பிள்ளைகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிடில் பெற்றோர்கள் கண்முன்னே பிள்ளைகள் சீரழிவதைப் பார்த்துக் கொண்டே இறக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்