இஸ்ரேலுடன் போர் புரிவது அமெரிக்காவுடன் போர் புரிவதற்குச் சமமானது’ என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தான் தற்போதைய ஈரான் இஸ்ரேல் போரை நாம் கணிக்க வேண்டும். பெர்சியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஈரானுக்கு மிகப்பெரிய பாரம்பரிய பெருமை உண்டு. உலக நாகரிகத்தின் தொட்டில் என அந்நாடு அறியப்பட்டது. இறுதியாக ஆரியர்கள் இந்த நாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு கைபர் கணவாய் வழியாக வந்து சிந்துச் சமவெளிப் பகுதியில் குடியேறி அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை விரட்டி அடித்தனர் என்பது வரலாறு. புரட்சிக்கு முன்னர் ஈரானை ஆண்டு வந்த மன்னர் ஷா தன்னை ஆரிய மெஹர் என்றே அழைத்துக் கொண்டார்.
மத்திய ஆசிய நாடான ஈரான் (அன்றைய பெர்சியா அல்லது பாரசீகம்) நபித்தோழர் உமர்(ரலி) ஆட்சிக் காலத்தின் போது வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமியப் பேரரசின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தது. நூற்றாண்டுகள் கடந்த பிறகு அரபியர்களின் மேலாண்மையை விரும்பாத ஈரான், இஸ்லாமியப் பேரரசுகள் பின்பற்றிய சுன்னத்துல் ஜமாஅத்தைப் பின்பற்றாமல் நபிகளாரின் மருமகனார் கலீஃபா அலீ(ரலி) அவர்களே எங்களது இமாம் என்று கூறப்பட்ட சமயக் கொள்கையை ஏற்றுக் கொண்டது. இவர்கள் பின்னாள்களில் ஷியாக்கள் என அழைக்கப்படலாயினர். எனவே மத்திய கிழக்கிலுள்ள சுன்னத்துல் ஜமாஅத்தைப் பின்பற்றும் முஸ்லிம் நாடுகளுக்கும், ஷியா பிரிவை ஏற்றுக் கொண்ட ஈரானுக்கும் சுமூக உறவு இருக்கவில்லை.
11.2.1979 அன்று ஈரானில் புரட்சி ஏற்பட்டு மன்னர் ஷா பதவியிலிருந்து துரத்தப்பட்டார். புரட்சியின் நாயகரான ஆயதுல்லா ரூஹுல்லா குமைனி ஈரானின் உயர் அதிகாரம் படைத்த தலைவரானார். மன்னர் ஷாவின் ஆட்சிக் காலத்தில் ஈரான் அமெரிக்காவின் மிகச் சிறந்த நட்பு நாடாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அது அமெரிக்கவின் அடிமை நாடாக இருந்தது. ஆனால் புரட்சிக்குப் பின் நிலைமை மாறியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வல்லாண்மையை ஏற்றுக்கொள்ள ஈரான் மறுப்புத் தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளிலும் சரி, வெளிநாட்டுப் பிரச்னைகளிலும் சரி சுயமான முடிவுகளை எடுக்க ஆரம்பித்தது.
மத்திய கிழக்கிலுள்ள சவூதி அரேபியா, குவைத், ஜோர்டான், அமீரக நாடுகள் (பின்னர் எகிப்து) ஆகியன அமெரிக்காவின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு அடங்கி இருக்கின்ற போது ஈரான் மட்டும் தனக்கு எதிராக இருக்கிறது என்பதை அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே ஈரானைப் பணிய வைக்க அமெரிக்கா அனைத்து வழிகளையும் கடைப்பிடிக்க ஆரம்பித்தது.
1980க்கும் 1988க்கும் இடையே எட்டு ஆண்டுகளில் எல்லைப் பிரச்னை சம்பந்தமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. ஈரானில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக ஈராக்கில் பெரும்பான்மையினராக இருந்த ஷியாக்கள் எழுச்சி பெற்று விடுவார்களோ என்று கருதி ஈராக்கின் அன்றைய அதிபர் சதாம் ஹுசைன் ஈரானுக்கு எதிரான போக்கினைக் கடைப்பிடித்தார். இந்தப் போரின் போது அமெரிக்கா ஈராக்கிற்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வந்தது. அதில் ரசயான ஆயுதங்களும் இருந்தன.
ஈரானை எப்படியும் அடக்கியாள வேண்டும் என்ற நோக்கிலேயே அமெரிக்கா ஈராக்கிற்கு அனைத்து உதவிகளையும் செய்தது. எனினும் ஈரானைப் பணிய வைக்க முடியவில்லை. (ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்ற ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் பின்னர் அதே அமெரிக்காவால் அழித்தொழிக்கப்பட்டார் என்பது தனி வரலாறு)மத்திய கிழக்கில் ஈரான் மிகப்பெரிய நிலப்பரப்பையும், மக்கள் தொகையையும் கொண்ட நாடாகும். அந்நாட்டின் பரப்பளவு 16,48,195 சதுர கிலோ மீட்டர். அதன் மக்கள் தொகை 9.2 கோடியாகும். (இந்தியாவின் பாதிப் பரப்பளவு) கர்பலா உள்ளிட்ட பல புனிதத் தலங்கள் ஈரானில் உள்ளன. மத்திய கிழக்கில் உள்ள நாடுகளை விடவும், ஈரானின் மக்கள் தொகை அதிகம். ஈரானில் புரட்சிக்குப் பின் பதவிக்கு வந்த அரசுகள், அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இதனை அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அணுகுண்டு தயாரிக்கக் கூடாது என அமெரிக்கா ஈரானை மிரட்டி வருகிறது. தான் தயாரித்துள்ள அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் பொருளாதாரத் தடை விதிப்போம் என அமெரிக்க ஜனாதிபதிகள் (பாரக் ஒபாமா தவிர) தொடர்ந்து ஈரானை அச்சுறுத்தி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் ஐஐ, ஈரான் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் போட மறுத்தபோது அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்தன.
மத்திய கிழக்கில் சின்னஞ்சிறு நாடான இஸ்ரேல் அணுகுண்டுகள் வைத்துள்ளது. ஆனால் ஈரான் அணு குண்டுகள் தயாரிக்கக் கூடாது என அமெரிக்கா மிரட்டுகிறது. என்ன நியாயம் இது. ஈரான் அணுகுண்டு தயாரித்து விட்டால் தத்துப் பிள்ளையான இஸ்ரேலுக்குப் பாதகம் ஏற்பட்டு விடும் என அமெரிக்கா கருதுகிறது. மத்திய கிழக்கில் ஈரான், தனது ஆதரவு அளிக்கும் அரபுநாடுகளை விடவும் வல்லமை பெற்ற நாடாக ஆகி விடும் என்றும் அமெரிக்கா அஞ்சுகிறது.
தற்போதைய நிலவரப்படி, அணுகுண்டை உருவாக்க யுரேனியத்தை 90 விழுக்காடு செறிவூட்ட வேண்டும். ஈரான் அறுபது விழுக்காடு அளவுக்கு அதனைச் செறிவூட்டி இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களில் அணுகுண்டுகளைத் தயாரிக்கும் நிலைக்கு அந்த நாடு வந்து விடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாக எந்த ஆதாரப்பூர்வ தகவலும் இல்லை.
இந்தப் பின்னணியில் தான் தற்போது ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல்களைப் பார்க்க வேண்டும். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தூண்டுதலின் பேரிலேயே இஸ்ரேல் திடீரென்று ஈரானின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி ஒன்பதுக்கும் மேற் பட்ட அணு விஞ்ஞானிகளையும், 3 இராணுவ உயர் அதிகாரிகளையும் குறி வைத்துக் கொன்றுள்ளது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களில் தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்று கூறும் அமெரிக்காவின் ட்ரம்ப், இன்னொரு பக்கம் ஈரானைப் பணிய வைத்துத் தான் தயாரித்துள்ள அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் இடச் செய்ய வேண்டும் என்ற வஞ்சக நோக்கிலேயே இஸ்ரேலைத் தூண்டி விட்டுக் கெண்டிருக்கிறார். ஆனால் நல் வாய்ப்பாக, தனது நாட்டின் மீது தொடுக்கப்பட்ட வான் தாக்குதல்களுக்கு எதிராக ஈரானும் ஏவுகணைகள் கொண்டு இஸ்ரேலைத் தாக்கி வருகின்றது.
ஃபலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது. ஏனைய அரபு நாடுகள் சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் இருக்கின்ற போது ஈரான் எந்தவிதமான சமரசமுமின்றி ஃபலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கிறது. முன்னர் ஈரானின் பிரதமராக இருந்த ரப்ஷன் ஜானி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது, ‘இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பியர்களால் தான் யூதர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாயினர். ஐரோப்பாவின் ஹிட்லர் தான் இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தான். இந்த இன அழிப்பில் முஸ்லிம்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. எனவே யூதர்களுக்கு ஒரு தாயகம் வேண்டுமென்றால், அதனை ஐரோப்பியாவில்தான் உருவாக்கியிருக்க வேண்டும். ஃபலஸ்தீனத்தில் அல்ல’ என்று உரையாற்றியதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
தனது செல்லப் பிள்ளையான இஸ்ரேலுக்கு எந்தவிதமான பாதகமும் வந்து விடக்கூடாது. மத்திய கிழக்கில் ஈரான் ஒன்றுதான் இஸ்ரேலை முழு மூச்சாக எதிர்க்கிறது. போராடும் ஃபலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற காரணத்தினõலேயே இஸ்ரேலைத் தூண்டி விட்டு ஈரான் மீது தாக்குதல் நடத்துகிறது. எனவே ஈரான் அமெரிக்காவின் மறைமுகமான தாக்குதல்களை எதிர்த்துதான் போரிட வேண்டியதிருக்கிறது என்பதே யதார்த்தமாகும்.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகிலேயே ஈரான் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக ஈரானிலிருந்துதான் இந்தியா கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. ஈரான் என்றைக்கும் இந்தியாவின் நட்பு நாடாகவே திகழ்கிறது. ஈரானிலிருந்து தரை மார்க்கமாகக் கச்சா எண்ணெயைக் கொண்டு வரும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியா இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா அப்படிச் செய்யவில்லை. நியாயத்தின் பக்கம் நிற்பதே நடுநிலைமை. அநீதிக்கும் நீதிக்கும் இடையில் நடைபெறுகின்ற போரில் மௌனமாக இருப்பது நடுநிலையாகாது.