ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி ‘வக்ஃபைப் பாதுகாப்போம்; அரசியலமைப்பைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் 13.06.2025 வெள்ளிக்கிழமை மாலை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தமிழ் நாடு கிளை ஏற்பாடு செய்திருந்தது.
தனியார் சட்ட வாரியத்தின் வக்ஃப் பரப்புரை ஒருங்கிணைப்பாளர் இப்னு சவூத் தலைமையில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தனியார் சட்ட வாரிய உறுப்பினர் ஃபாத்திமா முஸஃப்பர் வரவேற்புøரயாற்றினார். தமிழக மஸ்ஜித்கள் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவர் ஏ.முஹம்மது பஷீர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத்தலைவர் முஹம்மது முனீர், ஜம்மியத்தே உலமாயே ஹிந்த் தமிழ்நாடு தலைவர் மௌலானா மன்சூர் காஷிஃபி, அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் ஃபாகிரா அதீக், ஜம்மியத்தே அஹ்லே ஹதீஸ் தமிழ்நாடு புதுச்சேரி மாநிலப் பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் அப்துல் வாஹித் உமரி மதனி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஓ. பஷீர் அஹமது, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஹைதர் அலீ, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மௌலவி என்.ஏ. காஜா முயீனுத்தீன் ஜமாலி, SDPI கட்சித் தலைவர் நெல்லை முபாரக், தமிழ் மையம் தலைவர் அருட்திரு ஜெகத் கஸ்பர், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் வஹீதா நிஜாம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரவீந்திரன், மதிமுக மாநிலப் பொருளாளர் மு.செந்தில் அதிபன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் M.P பேசும்போது, 'Moral Fear என்று சொல்வார்களே அத்தகைய அச்சமில்லாமல் இஸ்லாமியர்களின் தனிச் சொத் தில் தலையிடுவோம் என்று ஆணவத்துடன் இந்த அரசு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால் இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று தோன்றலாம். அவர்களின் சதித் திட்டத்தை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம்’ என்று கூறினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு, புதுச்சேரி தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ பேசும் போது, ‘நாம் சோர்ந்து போய் விடாமல் தொடர்ந்து போராட வேண்டும். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: ‘அல்லாஹ்வின் அனுமதி கொண்டு எத்தனையோ சிறு கூட்டங்கள் பெருங்கூட்டங்களை வெற்றி கொண்டுள்ளனர்.’ நாம் தைரியத்துடனும் மதிநுட்பத்துடனும், பொறு மையுடனும் போராட வேண்டும். பொறுமை என்பது அமைதியாக இருப்பதல்ல. திட்டமிடுவது, செயல்படுவது, காத்திருப்பது’ என்று குறிப்பிட்டார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உரையாற்றும் போது, ‘ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் ஒட்டுமொத்த மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 5 கோடி தமிழர்களின் அரசியல் சிந்தனை அதற்கு எதிராக உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுப்பட்டுள்ளதே இதற்குச் சான்று’ என்று குறிப்பிட்டார். இறுதியாக அகில இந்திய முஸ்லிம் தனி யார் சட்ட வாரிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் S.Q.R இல்யாஸ் பேசுகையில், ‘முஸ்லிம்களுக்கு எதிராகப் பல்வேறு சதிகள் நாட்டில் நடைபெறுகின்றன. அவர்கள் ஆரம்பிக்கும் போது நாங்கள் வக்ஃப் சொத்தைப் பாதுகாப்பதற்காக, பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக, ஏழை எளிய மக்களின் நிலையை மேம்படுத்துவதற்காக இத்திருத்தத்தைக் கொண்டு வருகிறோம் என்று கூறினர். ஆனால் அவ்வாறு ஒன்றுமே நடைபெற வில்லை. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த போதும் இதை நிறைவேற்றி விட்டார்கள். எனவே நாம் ஒன்றுபட்டு போராடுவோம். வெற்றி பெறுவோம்’ என்று கூறினார். பரப்புரையின் துணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஸலாஹுதீன் குரைஷி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வை இனாமுல் ஹஸன் தொகுத்தளித்தார். ஜஃபருல்லாஹ் ரஹ்மானி தலைமையிலான குழு ஊடகப் பணிகளைச்
சிறப்பாகச் செய்தனர்.