அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புயை முன்னிட்டு ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மத்தியத் தலைமையகம் வழங்கிய வெள்ளி மேடைக் குறிப்புகள்.
இஸ்லாத்தின் சமூக நெறிமுறைகளில் அண்டை வீட்டாரின் உரிமைகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. புனித குர்ஆனில் அல்லாஹ்வை வணங்கும்படி கட்டளையிட்ட உடனேயே பெற்றோர், உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், அண்டை வீட்டõரின் உரிமைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனுடன் யாரையும் இணைக்காதீர்கள்; பெற்றோரிடம் கருணையுடன் நடந்துகொள்ளுங்கள்; உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், அண்டை வீட்டார் உறவினராகிய அண்டை வீட்டார், அந்நிய அண்டை வீட்டார், தோழர்கள் ஆகியோரிடமும் அன்பும் கருணையும் காட்டுங்கள்..’
இந்த வசனங்களும் ஹதீஸ்களும் காட்டுவது அண்டை வீட்டாரின் உரிமைகள் ஒரு விருப்பமான நல்லொழுக்கம் மட்டும் அல்ல; அது நம்பிக்கையின் அடிப் படை அங்கமாகும்.
நமது சமூகத்தில் காணப்படும் குறைபாடுகள் இன்றைய சமுதாயத்தில் இந்த உரிமைகளை நிறைவேற்றுவதில் பல குறை பாடுகள் உள்ளன. அவற்றை உணர்ந்து சரிசெய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இதனால் வீடுகளும், தெருக்களும், நகரங்களும் இரக்கம், அன்பு நிறைந்த சூழலாக மாறலாம்.
அறியாமை
அண்டை வீட்டாரின் உரிமைகள் பற்றிய இஸ்லாமிய போதனைகள் பலருக்குத் தெரியாது. மதரஸாக்கள், பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இந்தத் தலைப்புகள் பெரும்பாலும் சேர்க்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை உரைகளிலும் சமூக நெறிமுறைகளுக்குக் குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் விளைவாக உரிமைகள் மறக்கப்படுகின்றன. பழக்க வழக்கங்களே வழிகாட்டிகளாகின்றன. அறியாமை நடைமுறை பலவீனத்திற்கும் வழிவகுக்கிறது.
தொடர்பு, பற்றின்மை
நகர்ப்புற வாழ்க்கை, அடுக்குமாடி வீடுகள், வேலையின் பரபரப்பு, டிஜிட்டல் ஈடுபாடுகள் இவை எல்லாம் கதவுகளுடன் இதயங்களையும் பூட்டிவிட்டன. பல ஆண்டுகளாக ஒரே குடியிருப்பில் வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் பெயர்கூட அறியாமல் இருக்கின்றனர். சில இடங்களில் ஸலாம் கூட பரிமாறப்படுவதில்லை. இஸ்லாம் ஸலாம் என்பதை அன்பின் திறவுகோலாக அறிவித் துள்ளது. ஆனால் அந்தச் சாவி நம்மிடமிருந்தே பூட்டப்பட்டுள்ளது.
சிறிய தகராறுகள் பெரிய மோதல்கள்வாகன நிறுத்தம், குப்பை, நீர் குழாய் போன்ற சிறிய பிரச்னைகளே பெரும் மோதல்களாக மாறுகின்றன. இவ்வாறு தகராறுகள் பெருகும் போது கடுமையான வார்த்தைகள், அவமதிப்பு, மத அடிப்படையிலான வெறுப்பு போன்றவை கலந்து நிலைமை மோசமாக்கப்படுகிறது. நபி(ஸல்) அவர்கள் அண்டை வீட்டாருக்குத் தீங்கு விளைவிக்கத் தடை செய்தார்கள். தோழர்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுத்தும் அண்டை வீட்டாரின் நலனில் அக்கறை காட்டினர்.
துன்புறுத்தல்
சிறியதாகத் தோன்றும் பல பழக்கங்கள் அண்டை வீட்டாருக்குத் துன்பம் தருகின்றன. கழிவுகளை வீசுதல், படிக்கட்டில் அடைப்பு, இரவில் சத்தம், இசை, மோட்டார் சைக்கிள் சப்தம், சமையலறை புகை, பால்கனியில் இருந்து தண்ணீர் அல்லது குப்பை வீசுதல் போன்றவை. இவை ஷரீஆவில் தடை செய்யப்பட்டவை. இவை அண்டை வீட்டாரின் நம்பிக்கையையும், உறவின் இனிமையையும் பாதிக்கின்றன.
அண்டை வீட்டாருடன் தூரம்
குர்ஆனில் நெருங்கிய அண்டை வீட்டார், அந்நிய அண்டை வீட்டார் என இருவரின் உரிமைகளும் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் சமூகப் பிரிவினைகள், அடையாள அரசியல், வரலாற்று உணர்ச்சிகள் ஆகியவை நம்மிடமிருந்து அன்பும் ஞானமுமான உற வைப் பறித்துவிட்டன. இதன் விளைவாக ஐயங்கள், வதந்திகள், பிரிவினைகள் உருவாகின்றன.
துன்பத்தில் பங்குபெறாமை
நோய், துக்கம், வேலை இழப்பு போன்ற சமயங்களில் அண்டை வீட்டாருக்கு உதவுவது குறைந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ‘நீங்கள் ஒரு குழம்பு சமைத்தால் அதில் தண்ணீர் சேர்த்து அண்டை வீட்டாருக்கும் கொடுங்கள்’. இந்தச் சிறிய செயல் இதயங்களை இணைக்கும் ஆழமான செயல் ஆகும்.
சமூக நீதி இல்லாமை
ஏழை அண்டை வீட்டாரின் தேவைகளைப் பூர்த்தி செய்தல். வாடகை, மின்சாரம், மருந்து, பள்ளிக் கட்டணம் அல்லது ரேஷன் இவை சமூக நலனின் அடிப்படைத் தூண்கள். ஆனால் பகிரங்கமாகச் செய்யப்படும் உதவி அவர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்துகிறது. உதவி ரகசியமாகவும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும்.
காரணங்கள், தீர்வுகள்
மேற்கண்ட குறைபாடுகளைச் சரி செய்வதற்கான சில நடைமுறை வழிகள்:
விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல்
ஜும்ஆ உரைகள், குர்ஆன் வகுப்புகள், மதரஸா பாடங்கள், சமூக ஊடக வீடியோக்கள் மூலம் அண்டை வீட்டாரின் உரிமைகள் பற்றிய போதனைகள் எளிமையாகவும் மனதைத் தொடுமாறும் வழங்கப்பட வேண்டும். குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் அரபி மூலத்துடன் மனப்பாடம் செய்யப்படும் போது அதன் தாக்கம் அதிகரிக்கும். கதைகள், நாடகங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பழக்கமாக்கலாம்.
உறவுகளை மீட்டெடுப்பது
ஸலாம் சொல்வதை வழக்கமாக்க வேண்டும். இது உறவின் முதல் செங்கல். சிறிய அறிமுக அமர்வுகள், தேநீர் விருந்துகள் போன்றவை அக்கம் பக்கத்திலே நடத்தலாம். ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி சில நிமிடங்கள் பேசலாம். பெண்களுக்குத் தனித்தனி வட்டங்கள் அமைத்து கல்வி, சுகாதாரம், குடும்ப வாழ்க்கை போன்ற தலைப்புகளில் கலந்துரையாடலாம். பெண்களின் உறவு வலுவானால், அக்கம்பக்கச் சூழலும் மென்மையடையும்.
மோதல் தடுப்பு
பார்க்கிங், குப்பை, கட்டிடப் பழுது போன்ற பிரச்னைகளுக்கான பொதுவான நடத்தை விதி ஒன்றை எழுதி வைத்து காட்சிப்படுத்தலாம். பிரச்னைகள் ஏற்பட்டால், அண்டை வீட்டாருக்குள் மத்தியஸ்தம் செய்யும் குழுவை அமைக்கலாம். இதன் நோக்கம் மறு தரப்பினரின் சுயமரியாதையையும் அமைதியையும் காக்கும் தீர்வை அடைவதாகும்.
துன்பம் தரும் பழக்கங்களைச் சரிசெய்தல்
சப்தத்தைக் குறைப்பது, சமையல் புகை, செல்லப்பிராணி சத்தம் போன்றவற்றால் அண்டை வீட்டாருக்குப் பாதிப்பு வராதபடி கவனம் செலுத்த வேண்டும். பழுதுபார்ப்பு வேலைகள், நிகழ்வுகள் போன்றவை முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். இரவு 10 மணிக்குப் பிறகு சப்தமிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வலிகளைப் பகிர்ந்து கொள்வது
அண்டை வீட்டாருடன் உறவு மத அடிப்படையில் அல்ல, மனித அன்பை அடிப்படையாகக் கொண்டது. நோயுற்றால் நலம் விசாரிப்பது, துக்கத்தில் ஆறுதல் சொல்வது, மகிழ்ச்சியில் வாழ்த்துவது இவை அனைத்தும் இதயங்களை இணைக்கும் பாலமாகும். உதவி வழங்கும் போது சுயமரியாதையையும் நம்பிக்கையையும் காக்கும் விதமாக ஜகாத், ஸதகா முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
சமய அறிமுக உறவு
வாராந்திர ஆய்வுக் கூட்டங்கள், குழந் தைகளுக்கான ஒழுக்கக் கதைகள், முதியோருக்கான சுகாதார, உடற்பயிற்சித் திட்டங்கள், கூட்டுத் தூய்மை இவை அனைத்தும் ஒற்றுமையையும் நினைவையும் உருவாக்கும்.
உள்ளூர் அமைப்புகளின் பொறுப்பு
மஸ்ஜித்கள், மத அமைப்புகள், சமூக நிர்வாகங்கள் ஆகியன ‘அண்டை வீட்டாரின் உரிமைகள்’ என்ற தலைப்பை ஆண்டு நிகழ்ச்சிகளில் சேர்க்க வேண்டும். சொற்பொழிவுக்கான வரைவு உரைகள், ஆசிரியர்களுக்கான பாடத் திட்டங்கள், இளைஞர்களுக்கான செயல் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ‘சுற்றுப்புற ஒருங்கிணைப்பாளர்’ நியமிக்கப்பட வேண்டும். பிரச்னைகள் ஒருங்கிணைந்த முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்றடைய வேண்டும்.
அன்பையும் மரியாதையையும் உருவாக்குங்கள்
அண்டை வீட்டாரின் இதயங்களில் அன்பை உருவாக்குவது இஸ்லாமிய போதனைகளின் முக்கியப் பகுதியாகும். இஸ்லாம் வெறும் உரிமைகளை நிறைவேற்றுவதை மட்டுமல்லாமல், இதயங்களை வெல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அன்பு என்பது இதயங்களின் உணவாகும்.
அன்பை வளர்ப்பதற்கான முதல் படி உளத்தூய்மை, நல்லொழுக்கம் ஆகும். மென்மையான பேச்சு, நல்ல பழக்க வழக்கங்கள், நேர்மையான அணுகுமுறை ஆகியவை அண்டை வீட்டாரின் இதயத்தில் இடம் பெறும். தினசரி சந்திப்புகளில் வாழ்த்துதல், புன்னகைத்தல் போன்றவை மிக எளிமையானதாய் இருந்தாலும், இதயங்களை இணைக்கும் வலிமையான வழிமுறைகளாகும்.
ஒருவரின் இதயத்தில் அன்பு பிறக்கும் போது, பெரும்பாலும் அது கடினமான நேரங்களில் யாராவது அவருக்குத் துணையாக நிற்கும் போது தான். நோயில் அவரைச் சந்திப்பதும், துக்கத்தில் ஆறுதல் கூறுவதும், மகிழ்ச்சியில் வாழ்த்துவதும் இதயங்களை இணைக்கும் செயல்களாகும். அதேபோல், சிறிய பரிசுகள் வழங்குவதும் ஈத் போன்ற மகிழ்ச்சிக் காலங்களில் உணவை அனுப்புவதும் அண்டை வீட்டாரின் இதயத்தில் நெருக்கத்தை உருவாக்கும்.
அன்பை உருவாக்குவதற்கான இன்னொரு முக்கிய வழி அண்டை வீட்டாருக்கு நமது செயல்களால் எந்தத் தீங்கும் செய்யாமல் இருப்பது ஆகும். சப்தம், சண்டை, கடுமையான பேச்சு போன்றவை அன்பை அழிக்கும்.
கருணை, மென்மை, துக்கக் காலங்களில் ஆதரவு, நேர்மையான உறவு இவை அனைத்தும் அண்டை வீட்டாரின் இதயத்தில் அன்பின் விளக்கை ஏற்றும் ரகசியங்கள் ஆகும். இந்தப் பொருளில் குர்ஆன், நபிவழியின் ஒளியில் நமது வாழ்க்கையை வடிவமைக்க முயல வேண்டும். அண்டை வீட்டாருடன் நல்ல நடத்தை என்பது வெறும் தார்மிக வழிகாட்டுதலாக அல்ல, அது ஒரு மார்க்கக் கடமை என்பதை நமது குடும்பத்தினருக்கும் உணர்த்த வேண்டும்.
பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து இந்தச் செய்தியைப் பரப்ப வேண்டும். தங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொண்டு உறவை வலுப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் அண்டை வீட்டாருடன் நட்பாக இருத்தல், அன்பாகப் பேசுதல், சண்டையிடாமை போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும்.
இந்தச் செய்தி ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும், சமூகத்திலும் பரவ வேண்டும். இலக்கியங்கள், சிறிய கூட்டங்கள், கருத்தரங்குகள் மூலமாக இதை எடுத்துச் செல்லலாம். அதைவிட முக்கியமாக, நமது வாழ்க்கையே இதற்கான நடத்தை முறையாக இருக்க வேண்டும்.
சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்தல், தேவைப்படுபவர்களுக்கு பொருளாதார உதவி வழங்குதல் போன்ற திட்டங்கள் மூலம் அண்டை வீட்டாருக்கான உண்மையான சேவையைச் செயல்படுத்தலாம்.
அண்டை வீட்டார் நேரடியாகப் பயனடையும் வகையில் நகரங்களிலும் கிராமங்களிலும் இதுபோன்ற சமூக நலத் திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இளைஞர்களும் மாணவர்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். சமூக சேவை நடவடிக்கைகளில் பங்கேற்பது, சமூக ஊடகங்கள் மூலம் இந்தச் செய்தியை பரப்புவது, கல்வி நிறுவனங்களில் அண்டை வீட்டாரின் உரிமைகள் குறித்து விவாதங்கள் நடத்துவது ஆகியவை அவர்களின் கடமையாகும்.
நாம் இந்த வேலையை வெறும் வார்த்தைகளில் அல்ல, நடவடிக்கைகளில் காட்ட வேண்டும். உள்ளூர் மட்டத்தில் சுற்றுப்புறக் கூட்டங்கள் நடத்தி, வெவ்வேறு மதங்களையும் சமூகங்களையும் சேர்ந்த அண்டை வீட்டாரை அழைத்து, நல்லெண்ணம், நல்லொழுக்கம் மூலம் உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.
இந்தப் பரப்புரை மூலம் நம் அருகிலுள்ள அண்டை வீட்டாரின் உரிமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், பெரிய முயற்சிகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அர்த்தமேதுமில்லை.
குர்ஆன், ஹதீஸின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்வதற்கும், நமது சுற்றுப்புறத்தை அமைதி, அன்பின் தொட்டிலாக மாற்றுவதற்கும், அல்லாஹ் நமக்கு வல்லமை வழங்குவானாக!
தமிழில் : மௌலவி சமியுல்லாஹ் உமரி