நம் வாழ்க்கை பலருடன் பின்னிப் பிணைந்து இருக்கிறது. பலதரப்பட்ட மக்களோடு அன்றாட வாழ்வில் பழகுகிறோம். கொடுக்கல் வாங்கல் களில் ஈடுபடுகிறோம். ஆனாலும், நம் வீட்டிற்குப் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு சிறப்பான இடம் இருக்கிறது.
நம்மில் பெரும்பாலோருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. ஒருவரிடம் பழகும்போது, அவர் யார் என்று பார்த்துப் பார்த்துப் பழகுகிறோம். எந்த அளவிற்கு இன்றைய காலகட்டத்தில் மாற்றங்கள் வந்து விட்டது என்றால், அவரின் மதம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஒருவர் எந்த மதம், பிறகு எந்த சாதி, எந்த இனம் என்ற ரீதியில் தொடங்கி அவரின் பொருளாதார நிலை, அவர் படித்தவரா, படிக்காதவரா, இப்படிப் பலதரப்பட்ட ஏற்றத் தாழ்வுகளை மனதில் கொண்டு முடிவுகள் எடுக்கின்றோம்.
ஓர் இரயில் பயண நட்பு போல சட்டென முடிந்து விடாமல், நீண்ட காலத்திற்கு இருக்கக் கூடியது நம் அண்டை வீட்டுக்காரரின் நட்பு. நம் பக்கத்து வீட்டுக்காரரிடம் பழக எத்தனிக்கும் பொழுது நம் மனநிலை, பல தரப்பட்ட தரவுகளை வைத்து முடிவு எடுக்கக் கூடிய நிலையில் தான் இருக்கிறது. சில சமயம் பக்கத்து வீட்டுக் காரரிடம் பழகுவதற்கு 6 மாத காலம் அல்லது ஓராண்டு கூட ஆகி விடுகிறது.
ஏன் இந்த நிலை? பக்கத்து வீட்டுக்காரர் யாராய் வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டுமே! நம்மைப் போல அவரும் ஒரு மனிதர் தானே! யாராய் இருந்தால் நமக்கென்ன? என் பக்கத்து வீட்டுக்காரர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால் எனக்கென்ன? ஏழையோ, பணக்காரரோ, படித்தவரோ, படிக்காதவரோ எனக்கு அதைப்பற்றிய கவலை எல்லாம் இருக்கக் கூடாது. அவரை சக மனிதனாக மதித்துப் பழக வேண்டும்.
நபிகளாரின் அறிவுரையில் பக்கத்து வீட்டுக்காரர் என்ற பொது வார்த்தையைத் தான் பயன்படுத்தி அறிவுரையை சொல்லியிருக்கின்றார்கள். எந்தவித பாகுபாடும், வேறுபாடும் பார்க்காமல், சக மனிதனாகத் தான் அணுகச் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு முறை இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அமர்(ரலி) அவர்களுக் காக ஆடு ஒன்றைச் சமைத்து அவருக்குப் பரிமாறத் திட்டமிட்டார்கள். ஆட்டு இறைச்சி நன்றாகச் சமைத்து பொறிக்கப்பட்ட ஆட்டி றைச்சியாக மாற்றம் கண்டது. அவர் தம் வேலைக்காரரிடம் ‘வேலைக்காரரே, நீங்கள் சமைத்து முடித்ததும், நம் பக்கத்து வீட்டு யூதரிடமிருந்து பரிமாறி ஆரம்பம் செய்யுங்கள்’ என்றார்.
அப்துல்லாஹ் இப்னு அமர்(ரலி) அவர்கள் முதலில் தான் சாப்பிடாமல், தன் அண்டை வீட்டாரான யூத நண்பருக்கு முதலில் கொடுத்து விட்டு, தனக்கு சாப்பாடு பரிமாறப்பட வேண்டும் என்று கட்டளை இட்டார். சமையல் எல்லாம் முடிந்து சாப்பாடு அப்துல்லாஹ் இப்னு அமர்(ரலி) அவர்களுக்குப் பரிமாறப்பட்டது.
அப்துல்லாஹ் இப்னு அமர்(ரலி) அவர்கள் கேட்ட முதல் கேள்வி ‘நம் யூத அண்டை வீட்டுக்காரருக்கு நீர் அன்பளிப்புக் கொடுத்தீரா?’ என்பது தான். இந்தக் கேள்வியை இரண்டாவது முறையாகவும் கேட்டார். பிறகு, ஏன் அந்தக் கேள்வியைத் தான் கேட்டேன் என்பதற்கான விளக்கத்தையும் மிகவும் தெளிவாக தன் வேலைக்காரரிடம் சொன்னார்.
வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் எந்த அளவிற்குத் தொடர்ந்து வலியுறுத்தி அறிவுறுத்திச் சொன்னார்களென்றால், அண்டை வீட்டுக்காரரை வாரிசாக்கி விடுவார்களோ என்று நபி(ஸல்) அவர்கள் எண்ணுகின்ற அளவிற்குச் சொன்னார்களாம்.
அப்படி என்றால், பக்கத்து வீட்டுக்காரர் யாராயிருந்தால் என்ன, அவரைப் பற்றி எதையும் யோசிக்காமல் தன் வீட்டுக்கருகே இருக்கும் சக மனிதர் என்ற அடிப்படையில் அவரிடம் நட்புறவு கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்லி இருக்கின்றார்கள்.
உணவை அன்பளிப்பாக வழங்குவதற்கு முதலில் தகுதி பெற்றவர் பக்கத்து வீட்டுக்காரர் தான் என்ற அழகான வழிகாட்டலைத் தந்திருக்கின்றார்கள். அவர் இந்துவா, கிறித்தவரா, சீக்கியரா, ஜெயினரா, யூதரா என்று பார்க்காமல் மத நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நபி(ஸல்) அவர்களை விட வேறு யாரால் இவ்வளவு அழகாகச் சொல்ல முடியும்?
அனைவரிடமும் அன்பாக, பண்பாக குறிப்பாக அண்டை வீட்டுக்காரரிடம் மிகவும் நெருங்கிப் பழக வேண்டும் என்பதை நாம் அனைவரும் பின்பற்றி இஸ்லாம் காட்டித் தந்த மத நல்லிணக்கத்தைப் பேணி நடப்போம். வேற்றுமைகளைக் காட்டி பிளவுகளை ஏற்படுத்துபவர்கள் மத்தியில் வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் நன்மக்களாக வாழ்வோம்.