மனிதன் ஒரு சமூகமாக வாழ இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றான். மற்ற படைப்பினங்களுக்கு இல்லாத சில சிறப்புத் தன்மைகள் மனிதர்களுக்கு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று குடும்ப உறவுகள். மனிதன் இரத்தபந்த உறவுகளைப் பேணுகிறான். அதைவிட முக்கியமாக அண்டை வீட்டாரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூட இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது. பக்கத்து வீட்டில் வசிப்பவருடன் மட்டுமல்லாமல் சிறிது நேரம் நம்முடன் இருப்பவருடனும் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று இறைவன் வலியுறுத்துகின்றான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு நற்குணம் உள்ள மனைவி, சிறந்த அண்டை வீட்டார், பயணிப்பதற்கேற்ற வாகனம், வசிப்பதற்கு நல்ல விசாலமான வீடு ஆகிய நான்கு விஷயங்கள் அவசியம்’
ஒரு மனிதனுக்கு இந்த நான்கு விஷங்களும் அழகாக, சிறப்பாக அமைந்துவிட்டால் நலம். இதில் மனைவி நன்றாக அமையவில்லையென்றால் வாழ்க்கையே நரகம். அண்டை வீட்டார் சரியில்லையென்றால் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது.
அண்டை வீட்டுக்காரனுக்கு நம்மால் எந்தத் தொந்தரவும் இருக்கக்கூடாது. நமக்குப் பிடித்தமான திருமறை ஓதலை கிராஅத் கேட்பதாக இருந்தாலும் பிறருக்கு இடையூறு அளிக்கும் வகையில் அதிகமான ஒலி வைத்துக் கேட்பது தவறு. ஒரு தனிமனிதனின் சுதந்திரம் என்பது நீங்கள் கைகளை நீட்டினால் அடுத்தவர் மூக்கு வரை தான் எல்லை. அடுத்தவனுக்குத் தொல்லை, தொந்தரவு தருவது சுதந்திரம் அல்ல. என் வீடு, என் வாசல் என அண்டை வீட்டினருக்குத் தொல்லை தருபவன் சிறந்தவன் அல்லன்.
அண்மையில் ஒரு நண்பர் ஒரு புதிய வீட்டிற்குக் குடியேறினார். அந்தத் தளத்தில் நான்கு வீடுகள். அதில் மூன்று குடும்பங்கள் முஸ்லிம்கள். ஒருவர் முஸ்லிமல்லாதவர். மூன்று நபர்களும் நண்பர்கள் ஆனார்கள். ஆனால் அந்த முஸ்லிம் அல்லாத குடும்பத்தினர் மட்டும் தனித்தே இருந்தனர். ஒரு வழியாக மூவரும் சேர்ந்து அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடிய போது அவர்கள் சொன்ன செய்தி, ‘இதற்கு முன் ஒரு முஸ்லிம் குடியிருந்தார். அவர் எப்பொழுதும் எங்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். நீங்களும் அப்படி இருப்பீர்களோ என்ற பயம் தான் நான் விலகிச் சென்றதற்குக் காரணம்’ என்றார்.
இதைச் சாதாரண செய்தியாகக் கடந்துவிட முடியாது. இஸ்லாத்திற்கு நாம் எவ்வாறு சான்று வழங்கிக் கொண்டிருக்கின்றோம்? நாம் அண்டை வீட்டினருடன் மோசமாக நடந்து கொண்டால் மீடியா சொல்வது சரிதான் என்று நினைக்கத் தோன்றுமல்லவா? இஸ்லாத்திற்கே தவறான பிம்பமாகிவிடும். நாம் ஒவ்வொருவரும் இஸ்லாத்திற்குச் சான்று பகரக்கூடியவர்களாக வேண்டும்.
நீங்கள் அவர்களிடத்தில் நல்லமுறையில் நடந்து கொண்டீர்களானால், நீங்கள் இஸ்லாத்தின் பிரதிபலிப்பாக வாழ்ந்து காட்டினீர்கள் என்றால், இஸ்லாத்தைப் பற்றிய நல்லெண்ணம் கொள்வார்கள். நீங்கள் இஸ்லாத்திற்குச் செயல்பூர்வமாகச் சான்று வழங்குகின்றீர்கள் என்று பொருள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் குறிப்பாக அடுக்குமாடிக் கட்டிடங்களில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் வாழ்கின்றனர். அவர்கள் மரணம் அடைந்தால்கூட தெரியாது. ஆனால் கிராமங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலை குறைவு. அண்டை வீட்டுக்காரன் கடன், வறுமை, பசி, நோய் என எப்படி இருக்கிறான் என்று பார்த்து உதவ வேண்டும்.
இஸ்லாத்தில் ஏன் அண்டை வீட்டினருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். நாம் அனைவரும் ஆதமுடைய வழித்தோன்றல்கள். அந்த அடிப்படையில் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் இறைவனின் குடும்பமாகும். நாம் எல்லோருமே ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் என்ற உணர்வு வர வேண்டும். இவர்களிடத்தில் நாம் நல்ல முறையில் நடந்து கொள்வதன் மூலமாகத்தான் நாம் நாளை மறுமையில் இறைவனின் திருப்தியைப் பெற முடியும். அண்டை வீட்டுக்காரர் யாராக இருந்தாலும் எம்மொழி பேசுபவராக இருந்தõலும் சரியே!
அழகிய முன்மாதிரி
நல்ல வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி, அங்கு வாழக்கூடிய ஒரு முஸ்லிமல்லாத பெண்மணியின் கணவர் இறந்துவிட்டார். முஸ்லிம் பெண்களெல்லாம் சேர்ந்து அந்த வீட்டிற்குச் சென்று கணவன் இறந்த பெண்ணைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லி அவருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கின்றனர். உறவுகள் வருவதற்குத் தாமதமாகிறது. வீட்டிற்கு முன் சாமியானா அமைத்தல், நாற்காலிகள் ஏற்பாடு செய்தல், தேநீர், உணவு, பிற ஏற்பாடுகள் அனைத்தையும் முஸ்லிம் ஆண்கள் ஏற்பாடு செய்கின்றனர். தொடர்ந்து மூன்று நாள்கள் இறப்பு நடைபெற்ற வீட்டினருக்கு உணவு ஏற்பாடு செய்தனர். இது அவர்களுடைய உள்ளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
சில நாள்களுக்குப் பிறகு முஸ்லிம் பெண்களிடம் இதைக் குறித்து கேட்ட பொழுது அவர்கள் இறைத்தூதர் முஹம்மத் நபிகளார்(ஸல்) அவர்கள் அண்டை வீட்டில் யாராவது இறந்துவிட்டால் மூன்று நாள்களுக்கு அவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களுடைய துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வலியுறுத்தியுள்ளார்கள். அதன்படித்தான் நாங்கள் செயல்பட்டோம் என்று விளக்கினார்கள். பின்னர் அந்தப் பெண்மணி தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த நிகழ்வை மிகவும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். இதுதான் மிகப் பெரிய சான்றாக அமையும். இது நம் கடமை. இறைவனின் படைப்புகளுக்குச் செய்யும் கடமை இறைவனுக்குச் செய்த கடமையைப் போன்றதாகும்.
அண்டை வீட்டாரின் கடமைகள்
‘இஹ்யாவுல் உலூமுத்தீன்’ என்ற நூலில் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அண்டை வீட்டுக்காரரின் கடமைகளை வரையறுத்து இருக்கிறார்கள்:
அவருக்கு ஸலாம் கூற வேண்டும்.
அவருக்கு வெறுப்பு வராத வண்ணம் பேச வேண்டும்.
அடிக்கடி நலம் விசாரியுங்கள்.
மகிழ்ச்சியான தருணத்தில் வாழ்த்து கூறுங்கள்.
மரணம் ஏற்பட்டால் ஜனாஸாவில் கலந்து கொள்ளுங்கள்.
தவறுகளை மன்னியுங்கள்.
கழிவுநீரை அவர்களின் வீட்டின் முன் விடாதீர்கள்.
வீட்டின் பாதையை நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள்.
அவர்கள் வீட்டிற்கு வாங்கிச் செல்லும் பொருட்களைக் கூர்ந்து கவனிக்காதீர்கள்.
பலவீனங்களை மறையுங்கள்.
தேவையான சந்தர்ப்பத்தில் உதவுங்கள்.
அவர் இல்லாத போது அவருடைய வீட்டைப் பாதுகாக்க வேண்டும்.
அவருக்கு எதிராகப் புறம் பேசாதீர்கள்.
கோள் சொல்வதைத் தவிருங்கள்.
அண்டை வீட்டுக்காரருக்கு ஆதரவாக இருங்கள்.
அவருடைய கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும்.
அவருடைய குழந்தைகளைச் சிரிக்க வைக்க வேண்டும்.
பணிப்பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது.
தக்வாவை நிர்ணயிப்பது பக்கத்து வீட்டுக்காரர் மூலம்தான்.
குப்பைகளை அவர் வீட்டின் முன் கொட்டாதீர்கள்.
மார்க்க அறிவு இல்லாதவராக இருந்தால் அவருக்கு வழிகாட்ட வேண்டும்.
நம்மிடம் ஆற்றல்கள், திறமைகள், பணம் அதிகமாக இருக்கிறது. ஸாலிஹியத் நற்பண்புகள் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அண்டை வீட்டுக்காரர் நமக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர் நமக்கு எதிராகச் சாட்சி சொல்வாரேயானால் நாம் மிகப் பெரும் இழப்புக்கு உரியவராகிவிடுவோம். நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘யார் தன்னுடைய நண்பர்களிடத்தில் நல்லமுறையில் நடந்துகொள்கிறானோ அவனே இறைவனின் நல்ல நண்பன். யார் தன் அண்டை வீட்டாருடன் நல்லமுறையில் நடந்து கொள்கிறானோ அவனே அல்லாஹ்வின் அண்டை வீட்டுக்காரர்களில் சிறந்தவன்’ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி))
இமாம் கஸ்ஸாலி(ரஹ்) கூறிய விஷயத்தில் மிக முக்கியமான விஷயம் அண்டை வீட்டுக்காரர் மார்க்க விஷயம் தெரியாதவராக இருந்தால் அவருக்கு மார்க்க விஷயத்தைக் கற்றுக் கொடுங்கள். நாம் இறையச்சமுடையவராக இருப்பது மட்டும் போதாது. நாம் அவரையும் இறையச்சமுடையவராக மாற்ற வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. பசியோடு இருக்கும்போது உணவளிப்பது மட்டுமல்ல அவருக்கு இறையச்சத்திற்கான பாதையைக் காட்டும் பொறுப்பும் நம்மிடம் உள்ளது.
இறைவன் கூறுகிறான்: ‘நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி யாளராக இருங்கள். தீமையிலும் தவறான செயல்களிலும் நீங்கள் உதவி செய்யாதீர்கள்’ என்ற அடிப்படையில் நம் அண்டை வீட்டுக்காரருடன் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களாக இருந்தால் இஸ்லாமிய முறைப்படி வாழவும், முஸ்லிம் அல்லாதவராக இருந்தால் அவருக்கு இறைச் செய்தியைக் கூறவும் வேண்டும்.