1995-2000 ஆண்டில் நடந்த உண்மை நிகழ்வு. சாதி, மத, பேதம் தலை விரித்தாடினாலும் தமிழ் மண்ணில் அப்படியொரு பாகுபாடு ஏதும் இல்லாமல் வாழும் மக்களும் இருக்கின்றார்கள். நான் முஸ்லிம், இந்து, கிறித்தவர் என்றோ, உயர் சாதி, தாழ்ந்த சாதி, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் வாழும் பொற்காலமும் இங்கு இல்லாமல் இல்லை.
மதுரை விளாங்குடி என்ற பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம். அங்கு இரண்டு வீடுதான் முஸ்லிம்களின் வீடு. அன்றைய காலத்தில் அலைப்பேசி எல்லாம் இல்லை. ஒரு சிலரது வீட்டில் மட்டும் தொலைப்பேசி இருக்கும். அப்படி எங்கள் பகுதியில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரி வேணி என்பவர் வீட்டில் தொலைப்பேசி இருந்தது. எங்கள் குடும்பமும் அவரது குடும்பமும் நெருங்கிய நட்புடன் வாழ்ந்து வந்தோம். ஒரே குடும்பத்தினர் போல் அந்நியோன்யமாகப் பழகினோம்.
என் கணவர் வெளிநாடு சென்ற பிறகு எங்களைத் தொடர்பு கொள்ள அவர்கள் வீட்டிற்குத்தான் தொலைப்பேசியில் அழைப்பு வரும். எங்கள் வீட்டிற்கும் அவர்கள் வீட்டிற்குமான தூரம் இரண்டு தெருக்கள். இருந்த போதிலும் அவர்கள் வீட்டிலிருந்து வந்து எங்களை அழைப்பார்கள். நாங்கள் குடும்பத்தோடு அவர்கள் வீட்டில் காத்திருந்து என் கணவருடன் பேசிவிட்டு வருவோம்.
வெயில் காலமாக இருந்தாலும் கடுமையான மழைக் காலமாக இருந்தாலும் அவர்கள் எங்களை வந்து அழைப்பார்கள். ‘ஏன் அக்கா மழை கடுமையாக இருக்கு. அப்புறம் பேசுங்கள் என்று சொல்லலாமே’ எனக் கேட்கும் போது, செல்லமாக, ‘என் தம்பி ஜலால் கடல் கடந்து குடும்பத்தின் சுமையைக் குறைக்க அனைவரையும் பிரிந்து இருக்கும் போது அவனின் குரலைக் கேட்க நீங்களெல்லாம் எப்படிக் காத்திருப்பீர்கள். அதனாலென்ன ஒன்றும் கஷ்டமில்லை’ என்று கூறுவார்கள்.
அவரது மாமனார் தாசில்தார். கணவரும் பெரிய நிறுவனத்தில் ஆடிட்டராக இருந்தார். அவர்கள் கூட சில நேரம் வந்து அழைப்பார்கள். இன்றைக்கு நினைத்தாலும் இந்தச் சம்பவம் எங்களைப் புல்லரிக்கச் செய்து விடும். அண்டை வீட்டுக் காரர் யாராக இருந்தாலும் அன்பும் நேசமும் அவசியம் என்பதை இச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. இன்றும் எங்கள் நட்பு தொடர்கிறது.
சென்னையிலும் சில பகுதிகளில் நாங்கள் வசித்துள்ளோம். அதில் ஒன்று சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை. அங்கு கிராமப்புறச் சூழல் போலவே அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர்.அந்தப் பகுதியில் 1985 முதல் 2000 வரை வசித்து வந்தோம். ஒரே ஊரைச் சேர்ந்த மக்கள் அங்கு இருக்கின்றனர்.
தாய், பிள்ளையைப் போல் உறவு கூறி வாழ்ந்தோம். என்னுடைய தம்பியின் இறப்பு நேரத்தில் நாங்கள் அனைவரும் நிலைகுலைந்து இருந்த நேரத்தில் ஒரு ஜனாஸா வீட்டிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அந்த ஊர் மக்கள் முன்னின்று செய்தனர். பந்தல் போடுவது, உறவு களுக்குச் சொல்லி அனுப்புவது, குழி வெட்டுவது, கபன் செய்யத் தேவையான பொருள்கள் வாங்குவது, உணவு, தேநீர் என எல்லாவற்றையும் முன்னின்று செய்தனர்.
இந்த இரு நிகழ்வுகளும் நல்ல அண்டை வீட்டாருக்கான அழகிய முன்மாதிரிகள். எங்கள் வாழ்வில் மறக்க இயலாத அண்டை வீட்டார்கள் இவர்கள்.