மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

என்ன நடக்கிறது அண்ணா பல்கலைக் கழகத்தில்?
  ரியாஸ் மொய்தீன், 2025 ஜனவரி 16 - 31


 

 

 

 நடந்தது என்ன?

சென்னையில் உள்ள தலைசிறந்த பொறியியல் பல்கலைக்கழகங்களில் முதன்மையான அண்ணா பல்கலைக்கழகத்தில் 2024 டிசம்பர் 23, இரவு  8 மணி அளவில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்திற்குப் பின்புறத்தில்  தனிமையில் இருந்தபோது அங்கு வந்த நபர் ஒருவர் இதை அனைத்தையும் வீடியோ எடுத்ததாகக் கூறி  இவர்களை மிரட்டி உள்ளான். மன்னிப்புக் கேட்டு எங்களை விட்டு விடுங்கள் என மாணவியும் அவரின் நண்பரும் கேட்டும் கூட அவர்களை விடாத அந்த நபர் இதை உங்கள் ஆசிரியரிடம் காட்டி உங்களுக்கு நான் TC வாங்கித் தந்து விடுவேன் என மிரட்டி உள்ளான். அந்த ஆண் நண்பரை மிரட்டி அடித்துத் துரத்தியுள்ளான். மீண்டும் அந்தப் பெண்ணிடம் சென்று அவனை ஆசிரியர்கள் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனக் கூறிவிட்டு அவனுடன் வந்தால் அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதாகக் கூறி ஆள் நடமாட்டமின்றி  இருட்டாக இருக்கும் HIGHWAY LAB செல்லும் வழியில் வைத்து மிரட்டத் தொடங்கியுள்ளான். 

‘நான் உனக்கு மூன்று வாய்ப்பு தருகிறேன் அதில் எதையாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். முதலாவதாக  வீடியோவை வெளியிடுவதாகும், இரண்டாவதாக அவனுடன் தனிமையில் இருக்குமாறும், மூன்றாவதாக அலைப்பேசியில் பேசிய ஆசிரியருடன்  தனிமையில் இருக்க வேண்டும்’ எனக்கூறி இது மூன்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என மிரட்டி உள்ளான். அவன் மிரட்டத் தொடங்குவதற்கு முன்னால் அவனுக்கு அலைப்பேசியிலிருந்து ஓர் அழைப்பு வந்ததாக FIRஇல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அவன் கூறிய நிபந்தனைகளுக்குப் பதில் அளிக்க மறுத்த அந்தப் பெண்ணிடம் 40 நிமிடங்களுக்கு மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கியுள்ளான். அதையும் வீடியோ எடுத்தது மட்டுமின்றி  அந்தப்  பெண்ணின்  ஐடி கார்டை புகைப்படங்கள் எடுத்து மாணவியின் அலைப்பேசியிலிருந்து தந்தையின் அலைப்பேசி  எண்ணையும்  எடுத்துக் கொண்டு  மீண்டும்  இரண்டு  நாள்கள் கழித்து உன்னைக் கூப்பிடுவேன் எனக் கூறி விட்டுச் சென்றுள்ளான். இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளே பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை பெருநகர காவல்துறையினரால் டிசம்பர் 25 அன்று குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட  ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டான். 

ஏற்கனவே ஞானசேகரன் மீது IPC 457, 380 உள்ளிட்ட 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு  இருப்பதாகவும் இன்னும் ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். தற்பொழுது 8 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவனை அனுமதித்தது யார்? அந்த நேரத்தில் யாரும் ரோந்துப்  பணியில் அவன் மீது BNS  63(ச்), 63(1), 75(1)(ii), 75(1)(iii) ஆகிய வழக்குகளில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட FIR, குற்றவியல், குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பு (CCTNS) வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்போது சமூக வலைதளங்களில் கசிந்தது. ‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் அடையாளங்களை வெளியிடக் கூடாது’ எனச் சட்டம் இருக்கும் போது, மாணவி தொடர்பான விவரங்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவர்  மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

யார் இந்த ஞானசேகரன்?

 இந்தச் சம்பவத்தில்  அனைவரும் எழுப்பக்கூடிய கேள்வி ஏற்கனவே குற்றப் பின்னணி உடைய ஒரு நபர் பல்கலைக்கழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் எனவும் யார் அவனை அனுமதித்தது என்பதும் தான். குற்றவாளியான ஞானசேகரன்  கோட்டூர்புரத்தில் ரோட்டோரத்தில் பிரியாணி கடை வைத்திருப்பவன் எனவும் அவனது மனைவி பல்கலைக்கழகத்தில் தூய்மைப் பணியாளராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவன்  பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து செல்பவனாகவும் அங்குள்ள பாதுகாவலர்கள், தொழிலாளர்களுடன் நெருங்கிய பழக்கம்  வைத்துள்ளவன் என்பதும் தெரிய வருகிறது. குற்றப் பின்னணி உடையவன் இரவு 8 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவனை அனுமதித்தது யார்? அந்த நேரத்தில் யாரும் ரோந்துப்  பணியில் இருக்கவில்லையா?

 

யார் அந்தச் சார்?

பாதிக்கப்பட்ட மாணவி தன் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததாகக் கூறப்படும் இடத்தில் பொதுவாகவே மாணவ மாணவிகள் பேசிக் கொண்டும் தனிமையிலும் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே இதைத் தெரிந்து கொண்ட  ஞானசேகரன்  திட்டமிட்டு இதைச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஞானசேகரன் நடந்து கொண்ட விதம் முதல் தடவை இந்தக் குற்றத்தைச் செய்யக்கூடிய ஒரு நபர் நடந்து கொண்டதைப்  போல இல்லையென FIR மூலம் தெரிய வருகிறது. மட்டுமின்றி இவன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதற்கு முன்னால் அலைப்பேசியில் ஒரு சாரிடம் பேசிய தாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறி உள்ளார்.

 FIR நகல் சமூக வலைதளங்களில் வெளியானதை பல அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வன்மையாகக் கண்டிக்கத் தொடங்கினர். இதன் பின்னரே ஞானசேகரன் ஆளுங்கட்சியான திமுகவில் உள்ள பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கின. பின்னரே ‘யார் அந்தச் சார்?’ என்னும் கேள்வி பலராலும் எழுப்பப்படத் தொடங்கியது. அனைத்தையும் பார்க்கும்போது இது

தான் முதன்முறையாக இவன் இந்தக் குற்றத்தைச் செய்கிறானா அல்லது ஏற்கனவே இதைப் போல் பல மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளானா? இவன் இதைத் தனியாகத் தான் செய்கிறானா?  அல்லது  பல்கலைக்கழகத்தில்  உள்ள பேராசிரியர் யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? அல்லது ஏதாவது அரசியல்  பிரமுகர் களின் ஆதரவு இவனுக்கு உள்ளதா என்னும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

FIR எடுக்கப்பட்டதா? வெளியிடப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பும் அரசியல் கட்சிகள் இதைப் போல் வேறு எந்தப் பெண்ணும் புகார் அளித்து விடக்கூடாது என்பதற்காக ஊஐகீஐக் கசிய விட்டிருக்கலாம் தேசிய மகளிர் ஆணைய விசாரணைக் குழு எனவும் யாரோ ஒரு நபரையோ அல்லது பலரையோ காப்பாற்றுவதற்கான செயலாக இது இருக்கலாம் எனவும் குற்றம் சாட்டினர்.

 

தேசிய மகளிர் ஆணையம்(NCW) வைக்கும் குற்றச்சாட்டுகள் 

தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துக்கொண்ட NCW, டிசம்பர் 30 செய்தியாளர்கள் சந்திப்பின் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் இதற்கு முன் பல குற்றங்கள் செய்திருந்தும் தமிழக காவல்துறை அவன் மீது நடவடிக்கை  எடுக்கவில்லையென  NCWவின் தலைவி விஜய ரஹத்கர் குற்றம்  சாட்டியது மட்டுமன்றி இதுகுறித்து விசாரிக்க இரண்டு நபர்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதில் Nஇஙி உறுப்பினர் மம்தா குமரி, மகாராஷ்டிராவின் முன்னாள் டிஜிபி பிரவீன் தீட்சீத்  ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

சென்னை வந்தடைந்த இந்தக் குழு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு இதுகுறித்து மேலும் தகவல்களைப் பெறுவதற்காகப் பாதிக்கப்பட்ட மாணவி, அவரது குடும்பத்தினர், நண்பர்களைச் சந்தித்து விவரங்களைக் கேட்டுக் கொண்டனர்.

விசாரணைகளை முடித்துக் கொண்டு டெல்லி புறப்படும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் NCW உறுப்பினர் மம்தா குமரி விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் அவனைக் காவல்துறையினர் ஏன் கைது செய்யவில்லையெனக் கேள்வி எழுப்பினார் இதுவே அவன் இந்தக் குற்றத்தைச் செய்யக் காரணமாக இருந்ததாகவும் கூறினார்.

 

 காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு

டிசம்பர் 28, FIR கசிந்தது குறித்து விளக்கம் அளிக்கச் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அருண். டிசம்பர் 25, குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். FIRஐக் கசிய விட்டவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்கப்படும். ‘பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை எந்த மாற்றமுமின்றி பதிவு செய்வதே FIR பதிவு செய்யும் முறையாகும்’  என்றார்.

‘யார் அந்தச் சார்’ என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஆணையர் இதுவரை நடந்த புலன் விசாரணையில் இவன் ஒருவன் தான் குற்றவாளி. மாணவியை மிரட்டு வதற்காகவே சாருடன் பேசுவதாகப் பொய்யாகக் கூறியுள்ளான். குற்றம் நடந்த  நேரத்தில் அவனுடைய அலைப்பேசி AEROPLANE MODEஇல் இருந்ததாகக் கூறினார்.

தேசிய மகளிர் ஆணையத்தின் குற்றச் சாட்டிற்குப் பதிலளித்த காவல் ஆணையர் அருண் ‘கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 20 வழக்குகள் உள்ளது. அதில் அனைத்துமே திருட்டு, கொள்ளை ஆகிய குற்ற வழக்குகள் தான். இதுவும் 2019க்கு முன் பதிவு செய்யப்பட்டது தான், அவன் மீது ரவுடித்தனம் செய்ததாகவோ, பாலியல் குற்றங்கள் செய்ததாகவோ எந்த ஒரு  வழக்கும் இல்லை. அவன் மீது உள்ள குற்ற வழக்குகளில் ஆறு வழக்குகளில் அவன் குற்றவாளியென  நிரூபிக்கப்பட்டுள்ளது. 

மற்ற வழக்குகளில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக   விளக்கம்   அளித்தார். பாலியல் வழக்குகளில் FIR வெளிவரக் கூடாது எனவும் CCTNS வலைதளத்தில் IPCயிலிருந்து BNSக்கு மாற்றப்பட்டதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் FIR தடை செய்யப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தினால் FIR கசிந்து இருக்கலாமெனத் தெரிவித்தார். இது போன்று இவன் வேறு ஏதாவது பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு இருக்கிறானா  என்ற  கோணத்திலும்  விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார். காவல் ஆணையர் அருண் இது போன்ற குற்றங்கள் இதற்குப் பின் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.

 

 இடித்துரைக்கும் நீதிமன்றம்

இந்த வழக்கைக் கையாண்ட விதம் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் அருணை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து விசாரணையின் ஆரம்ப கட்டங்களில் அவரது நடவடிக்கை குறித்த கேள்விகளை எழுப்பியது. மாணவர் மீதான தாக்குதல், பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட விவரங்களை அம்பலப்படுத்திய முதல் தகவல் அறிக்கை(FIR) கசிந்ததைக் கண்டித்ததுடன் அதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை(SIT) அமைத்தது நீதிமன்றம்.

நீதிபதிகள்   எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச், IPS அதிகாரிகளான புக்யா சினேக பிரியா, அய்மன் ஜமால், எஸ்.பிருந்தா ஆகியோர் அடங்கிய SITயை அமைத்தது. மத்திய புலனாய்வுப் பிரிவு(CBI) விசாரணை கோரிய பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த முடிவை தமிழ்நாடு அரசு வரவேற்று, SITக்கு முழு ஒப்புதலை வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். FIR கசிவு காரணமாக மாணவிக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக 25 இலட்சம் ரூபாய் வழங்கவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டணம் அல்லது அதனுடன் தொடர்புடைய செலவுகள் ஏதுமின்றி தொடர்ந்து படிப்பதை உறுதி செய்யவும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் தனியாகச் செயல்பட்டதாகக்  கூறி செய்தியாளர் சந்திப்பை நடத்தியதால்,  சென்னை பெருநகர காவல்துறை மீது நீதி மன்றம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியது. ‘விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே காவல்துறை ஆணையர் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்? ஓர் உயர் அதிகாரி இவ்வாறாக ஒரு முன் முடிவுடன் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டால், விசாரணை அதிகாரி எப்படி சுதந்திரமாக விசாரிக்க முடியும்? குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விசாரிக்க முடியும்? என்று  நீதிபதி சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார். அருண் மீது தேவைப்பட்டால், உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில  அரசுக்கு பெஞ்ச் அறிவுறுத்தியது. எதிர் காலத்தில் முக்கியமான FIRகள் கசிவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையையும் கோரியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் கூட பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது துறை ரீதியான தோல்விகளை எடுத்துக் காட்டுகின்றன என்று நீதிபதி சுப்பிரமணியம் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட அனைவரும் தைரியமாக வெளியே வந்து புகார் செய்ய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மாநில உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன், அண்ணா பல்கலைக்கழகம், பிற நிறுவனங்களில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  சிறந்த சிசிடிவி கவரேஜ், படர்ந்துள்ள புதர்களை அகற்றுதல், கடுமையான பார்வையாளர் நெறிமுறைகள் போன்ற நடவடிக்கைகளை அறிவித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் உறுதியளித்தார். 

 

என்னதான் தீர்வு?

குற்றம் புரிந்த நபருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அனைத்து பாலியல் குற்றங்களிலும் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். இதையும் கடந்து இதைத் தடுப்பதற்கான கண்காணிப்புக் கருவிகளை அதிகப்படுத்துவது, காவலர்களை அதிகப்படுத்துவது, வெளி நபர்கள் உள்ளே வருவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஒரு குற்றத்திற்குக் கடுமையான தண்டனை வழங்குவதற்கு முன்னால் அந்தக் குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றம் நடைபெறுவதற்கு வேராகவும், மையப் புள்ளியாகவும் இருப்பவற்றைத் தடுக்காமல் குற்றத்தைத் தடுக்க இயலாது.

இரவு நேரத்தில் அந்த மாணவி தன் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை அவரது தனிப்பட்ட உரிமையாகவும் முடிவாகவும் நீதிமன்றம் முதல் பலரும் கூறுகின்றனர். ஆனால் அதே நபர்கள் ஒரு பெண் இந்த வயதில் திருமணம் செய்வதைத் தடை செய்துள்ளனர். அதேபோல் அந்த மாணவி இரவு நேரத்தில் அங்கு இருந்ததைச் சரி எனச் சொல்பவர்கள் அந்த மாணவி தைரியமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததைப் பாராட்டுகின்றனர். குற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வு இருப்பதை  நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

சட்டங்களில் மட்டும் திருத்தங்கள் ஏற்படுவதைக் கடந்து மக்கள் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்ணுரிமை என போலியான உரிமைகளைக் கூறி பெண்களைப் பயன்படுத்திக் கொண்டும் அவர்களை ஆண்வர்க்கம் வேட்டையாடிக் கொண்டும் இருக்கின்றது. இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிப்புக்கு உள்ளாவது பெண்கள் தாம்.  பெண்களுக்கு இங்கு முழுமையான பாதுகாப்பு இல்லை. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு தம்மைப் பாதுகாப்பதும், அதற்கான சூழலை உருவாக்குவதும் ஒவ்வொரு வருடைய கடமையாக இருக்கிறது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்