இஸ்ரேல் ஃபலஸ்தீன் பிரச்னையின் தொடக்கத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?
இஸ்ரேல் ஃபலஸ்தீன பிரச்னைகளைக் குறித்து எந்த மதம், பக்கச் சார்பும் இல்லாமல் நடுநிலையாகக் கூற விரும்புகிறேன். திறந்த மனதுடன் இந்தப் பிரச்னையை அணுகினால் மட்டுமே அதன் உண்மையை அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும். இப்பிரச்னை ஏதோ 10 - 20 ஆண்டுகளாக நடக்கும் பிரச்னை அல்ல. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கின்ற போது முதலில் இறைத்தூதர் மூஸா (மோசஸ்) அவர்கள் தான் எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை (யூதர்களை) கி.மு 1200க்கு முன்னர் ஃபலஸ்தீனத்திற்கு அழைத்து வந்தார்.
தொடர்ந்து கி.மு 1000த்தில் சாலமன் மன்னர் அங்கு ஓர் வழிபாட்டுத் தலத்தை எழுப்பினார். கி.மு 86இல் பாபிலோனியர்களால் நெபுக்கத் நேசர் என்பவர் தலைமையில் அப்பகுதியை வென்று அங்கிருந்த யூதர்களை விரட்டியடித்தார். பின் கி.பி 70இல் மீண்டும் ரோமர்கள் யூதர்களை விரட்டியடித்தனர்.
கி.பி 610இல் நபிகள் நாயகம் இஸ்லாமியப் பரப்புரையைத் தொடங்கிய பிறகு அவர்களது தோழர் உமர் கி.பி 638 இல் ஜெருசலத்தை வெற்றி கண்டார். ஆனால் அப்பொழுது அங்கிருந்து ஒரு யூதர் கூட விரட்டியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 1090களில் நடைபெற்ற சிலுவை யுத்தங்களில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றனர். அக்காலத்தில் சலாஹுதீன் அய்யூபி தலைமையில் ஜெருசலம் கைப்பற்றப்பட்டது. அப்போதும் அங்கிருந்து யூதர்கள் வெளியேற்றப்படவில்லை. கிறித்தவர்களும் வெளியேற்றப்படவில்லை. அவர்கள் வெளியேற்றியது ஐரோப்பாவிலிருந்து படை எடுத்து வந்த மக்களை மட்டும் தான்.
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அந்நிய யூதர்கள் ரஷ்யா, போலந்து, ஜெர்மனி, ஐரோப்பா, உள்ளிட்ட நாடுகளில் குடியேறினர். அவர்களுக்கு எந்த மனித உரிமையும் வழங்கப்படவில்லை. இயேசுவைக் கொன்றவர் ஒரு யூதர் என்ற காரணத்தால் பொதுவாகக் கிறித்தவர்களுக்கு யூதர்கள் மீது ஒரு வெறுப்பு உண்டு. அதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் நாடற்று அலைந்தார்கள். பல கொடுமைகளுக்கு ஆளானார்கள்.
அப்போது யூதர்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். அவர்கள் சேரிப் பகுதிகளில் தான் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதுதான் கெட்டோ (getto) எனும் சொற்பதம் பிறந்தது. அவர்கள் விபச்சாரிகள் அணிந்து கொள்ளும் சின்னத்தைத் தான் அணிந்து கொள்ள வேண்டும். அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது தான் போகிராம் (pogrom) எனும் சொல் பிறந்தது. அச்சொல் பிற்காலத்தில் ஆங்கிலச் சொல்லாகவே மாறிவிட்டது. இப்படிப் பல நாடுகளில் அவர்கள் குடியேறினார்கள். பின்னர் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். ஆரம்பமாக அவர்கள் எகிப்து, மத்திய ஆசியா, உகாண்டாவில் தம்மைக் குடியேற்றுமாறு கேட்டனர்.
1892இல் தியோடர் ஹெசில் தலைமையில் சியோனிசம் எனும் இயக்கம் உருவானது. அப்போது ‘தமக்கு ஃபலஸ்தீனில் தான் இடம் வேண்டும். வேறு எங்கும் செல்ல மாட்டோம்’ என்ற கோரிக்கை எழுந்தது. யூதர்களில் இரண்டு வகையினர் இருக்கின்றனர். யூதர்கள் அனைவரும் இஸ்ரேலை ஆதரிக்கவில்லை. அமெரிக்கா உட்படப் பல நாடுகளிலும் யூதர்களே முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் போராடி வருகின்றனர். மற்றொரு பிரிவினர் இந்த சியோனிச யூதர்கள். சியோனிசம் என்பது ஓர் இயக்கம்; அதில் கிறித்தவர்களும் இருக்கின்றனர்.
பின் முதல் உலகப்போர் தொடங்கியது. அப்போது ஃபலஸ்தீனத்தைத் துருக்கியர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். அங்கு அரபுகளுக்கும் துருக்கியர்களுக்கும் பிரச்னையான சூழல் நிலவிவந்தது. அப்போது பிரிட்டிஷ் காரர்கள் ஃபலஸ்தீனத்தைக் கைப்பற்றி உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று அரபிகள், யூதர்கள் இருவரிடமுமே கூறினார்கள். இவ்வாறு இரண்டாவது உலகப் போர் நடந்து முடிந்ததுமே இந்த ஃபலஸ்தீன இஸ்ரேல் பிரச்னை ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. ஐநாவில் 1948 மே 15இல் இரண்டு சமூக மக்களுக்குமே தனி நாடு வழங்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருவருக்குமான பகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் சியோனிஸ்டுகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 1948இல் அவர்களுக்குத் தனி நாடு வழங்கப்பட்டது. ஆனால் சியோனிஸ்டுகள் தமக்கு வழங்கப்பட்ட எல்லையயும் தாண்டி தமது நாட்டை விரிவுபடுத்திக் கொண்டே சென்றனர்.
இரு நாட்டுக் கொள்கையின் போது இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
இந்தியாவின் நிலைப்பாடு கிட்டத்தட்ட 1991 வரை ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தான் இருந்தது. அதாவது கிட்டத்தட்ட நேருவின் காலத்தில் தொடங்கி நரசிம்மராவ் காலம் வரை. நரசிம்மராவின் காலத்தில் தான் அந்நிலைப்பாடு சற்று மாற ஆரம்பித்தது. மேலும் இஸ்ரேலுடன் ராஜியத் தொடர்புகள் ஏற்பட்டது. மகாத்மா காந்தி கூட ‘ஆங்கிலேயர்களுக்கு எப்படி இங்கிலாந்து சொந்தமோ, பிரெஞ்சுக்காரர்களுக்கு எப்படி ஃபிரான்ஸ் சொந்தமோ, அதைப் போலவே ஃபலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது’ என்றும் அங்கு யூதர்களைக் குடியேற்றுவது மனிதாபிமானமற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1948க்கு பிறகு இஸ்ரேல் ஃபலஸ்தீனத்தின் வரைபடத்தைப் பார்த்தாலே இஸ்ரேல் எவ்வாறு நிலப்பரப்பை விரிவுபடுத்திக் கொண்டு சென்றுள்ளது என்பது புலப்படும்.
1967இல் பெரும் யுத்தம் வெடித்தது. இதனை 6 நாள் யுத்தம் (Six Day War) என்று அழைப்பார்கள். அதில் அனைத்து அரபு நாடுகளையும் துவம்சம் செய்து இஸ்ரேல் தனது எல்லையை மிகப்பெரியதாக விரித்துக் கொண்டது. எகிப்தின் சில பகுதிகள், ஜோர்டானின் மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலம், சிரியாவின் கோலன் குன்றுகள் உள்ளிட்ட பல பகுதிகளை இஸ்ரேல் கையகப்படுத்தியது. அந்த விரிவுபடுத்தலைத் தடை செய்து ஐநா தீர்மானம் நிறைவேற்றியது. அதனைத் தீர்மானம் 242 என அழைப்பர். இந்தத் தீர்மானம் இஸ்ரேலியர்கள் தொடக்கத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் எனச் சொல்லியது.
பின்னர் 1973இல் ஒரு யுத்தம் நடைபெற்றது. அதனை யோம் கிப்பூர் போர் (Yom Kippur War) என அழைப்பார்கள். அதில் யூதர்களின் புனித நாளில் ஃபலஸ்தீன், எகிப்து இணைந்து இஸ்ரேலின் மீது தாக்குதல் நிகழ்த்தின. அந்தப் போரில் தொடக்கத்தில் இஸ்ரேல் தோற்கடிக்கப்பட்டு, பின் அமெரிக்காவின் உதவியால் வெற்றி கண்டது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் 338ஐ நிறைவேற்றியது. அது தீர்மானம் 242இல் சொல்லப்பட்டதையே மீண்டும் வலியுறுத்தியது.
அமெரிக்கா தொடக்கத்தில் இஸ்ரேலை ஆதரிக்கவில்லை. பின்னர் இஸ்ரேல் எனும் நாடு உருவாக அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியது. இஸ்ரேல் உருவான முதலே முஸ்லிம்களிடம் பறிக்கப்பட்டு வந்த நில உரிமைகளுடன் தற்போது அவர்களின் கல்வி உரிமை, வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கான உரிமை, ஜீவாதார உரிமைகள் போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்க ஆரம்பித்தது. பின் ஜோர்டான் நதியையே முழுமையாக இஸ்ரேலின் பக்கம் திருப்பி விட்டார்கள். இவ்வாறு ஃபலஸ்தீனம் என்கிற நாடே அழிக்கப்பட்டு முழுமையாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. அங்கு இஸ்ரேலியர்களின் அனுமதி இன்றி ஒரு சிறிய துரும்பும் அசைய முடியாது. இவ்வாறு மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஃபலஸ்தீனர்கள் ஆளாயினர்.
1987இல் இன்திஃபாதா எனும் பெயரில் ஒரு பேரெழுச்சி ஏற்பட்டது. அப்போது தான் ஹமாஸ் என்கிற அமைப்பு பிறந்தது. 1993இல் நார்வேயில் ஓஸ்லோ ஒப்பந்தம் எனும் சமாதான ஒப்பந்தம் போடப்பட்டது. ‘இஸ்ரேலியர்கள் தங்களது பழைய பகுதிக்குச் சென்றுவிட வேண்டும்’ என்கிற ஒப்பந்தத்தில் அன்றைய இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபினால் (Yitzhak Rabin) கையெழுத்து இடப்பட்டது. இதற்கு அன்றைய அமெரிக்கப் பிரதமர் பில் கிளிண்டன் முக்கியப் பங்காற்றினார். இந்நிகழ்வினால் யாசர் அரபாத்துக்கும் இட்சாக் ராபினுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அந்த சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட காரணத்திற்காகவே இட்சாக் ராபின் இஸ்ரேலிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதிலிருந்து சியோனிசவாதிகளுக்கு ஆக்கிரமித்த பகுதியைக் காலி செய்து திரும்பிச் செல்ல மனமே இல்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இஸ்ரேல் எங்களுடைய நாடு. முஸ்லிம்கள் அங்கு வந்து வேண்டுமானால் குடியிருந்து கொள்ளட்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. அப்போது அவர்கள் ஆக்கிரமித்த பகுதியில் வாழ்ந்த 7 இலட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, சொந்த நாட்டிலே அகதிகளாக்கப்பட்டனர்.
1922இல் அங்கு வெறும் 84,000 இருந்த யூதர்களின் எண்ணிக்கை 1949இல் ஆறு இலட்சமாகப் பெருகியது. அதனையடுத்து சியோனிச யூதர்கள் உலகம் முழுக்கப் பரவிக் கிடந்த அனைத்து யூதர்களையும் இஸ்ரேலுக்கு வரும்படி கட்டாயப்படுத்தினர். அதனால் இஸ்ரேல் எனும் நாடு உருவாவதற்கு முன்னர் 3%ஆக இருந்த யூதர்களின் எண்ணிக்கை 84% ஆக உயர்ந்தது. அங்கு முழுக்க முழுக்க இனவெறிக் கொள்கையே பின்பற்றப்படுகிறது. முதலில் யூதர்கள் காஸாவையும் கைப்பற்றித் தான் வைத்திருந்தனர். ஆனால் 2004இல் காஸாவை மட்டும் காலி செய்துவிட்டனர்.
காஸா என்பது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. 2004இல் இருந்து அங்கு ஒரு துரும்பு கூட இஸ்ரேலின் அனுமதியின்றி நகர முடியாது. தண்ணீர், மின்சாரம், எரிபொருள் அனைத்திற்குமே ஃபலஸ்தீனியர்கள் இஸ்ரேலைச் சார்ந்திருக்கும் நிலைதான். அவர்கள் இஸ்ரேலின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குப் படிப்பதற்கு, மருத்துவத்திற்காகக் கூடச் செல்ல முடியாது. பெயருக்கு மட்டும் தான் ஃபலஸ்தீன் ஒரு நாடு. சிறிய மருந்தும் இஸ்ரேலின் அனுமதியின்றி உள்ளே வரமுடியாது. காஸாவைச் சுற்றியுள்ள எல்லா வாசல்களையும் அடைத்துள்ளனர். எகிப்துக்குச் செல்லும் ரஃபா எனும் எல்லைப் பகுதியை மட்டுமே விட்டு வைத்திருந்தனர். ஆனால் கேம்ப் டேவிட் (Camp David) எனும் உடன்படிக்கையின் மூலம் எகிப்தியர்களையும் சியோனிசவாதிகள் தம்பக்கம் இழுத்துக்கொண்டனர். இவ்வாறே ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவற்ற நிலை ஏற்பட்டது.
இன்று அனைத்து அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் துடிக்கின்றன. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் ராஜியத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். தற்போது சவூதி அதற்கு முயன்று கொண்டிருக்கிறது. ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பது மிகச் சொற்ப நாடுகளே! ஈரான், சிரியா, பொருளாதார ரீதியாக கத்தார் ஆகிய நாடுகள் மட்டுமே அவர்களுக்கு உதவிகளைச் செய்கின்றன. ஃபலஸ்தீனர்கள் தனித்து விடப்பட்ட மக்களாக எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது, மரணம் எந்த நொடியிலும் நிகழலாம்.
இந்த யுத்தத்தைக் கூட நீங்கள் பார்க்கலாம். முதலில் தாக்குதல் நடத்தியது ஃபலஸ்தீனர்கள் என்றாலும் அதற்கு இஸ்ரேலின் பதில் தாக்குதல் எப்படி இருந்தது? பொதுவாகப் போரில் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் உள்ளன. எதிரிகள் எந்த அளவிற்குத் தாக்கினார்களோ அந்த அளவிற்குத் தான் திருப்பித் தாக்க வேண்டும். ஃபலஸ்தீனர்கள் ஆயிரம் பேரைக் கொன்றால் யூதர்கள் 3000 பேரைக் கொன்றாகிவிட்டது. ஃபலஸ்தீனத்தின் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் உட்படப் பல முக்கியமான இடங்களைத் தகர்த்துள்ளனர். இப்போது காலி செய்து வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்குச் செல்லுங்கள் எனச் சொல்கின்றனர். இத்தகைய கொடுமைகளை எதிர்த்து உலகில் எந்த நாடும் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.
ஹமாஸ் உருவானது எப்போது?
1987ஆம் ஆண்டில் ஹமாஸ் எனும் அமைப்பு ஓர் அரசியல் இயக்கமாக உருவானது. இஸ்ரேல் எந்தச் சலுகையும் ஃபலஸ்தீனுக்கு வழங்காதது. ஃபலஸ்தீன் மீது அளவு கடந்த தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டது ஆகிய காரணங்களால் ஹமாஸ் அமைப்பு ராணுவக் குழுவாக மாறியது. யாசர் அரபாத் உருவாக்கிய PLO எனும் ஃபலஸ்தீன் லிபரல் ஆர்கனைசேஷன் சக்தி வாய்ந்த இயக்கமாக இருந்தது. ஆனால் அவருடைய காலத்திற்குப் பிறகு அது வலுவிழந்தது. அந்த அமைப்பின் தற்போதைய தலைவராக மஹ்மூது அப்பாஸ் இருக்கிறார். இந்த யுத்தத்தில் அவருடைய பெயரை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
இன்று ஹமாஸ் நடத்தும் இத்தகைய போராட்டத்தின் விளைவாகத்தான் ஃபலஸ்தீன் எனும் ஒரு நாடு இருக்கிறது, அங்குள்ள மக்கள் தமது பூமியை இழந்து தவிக்கின்றார்கள் என்பன போன்ற செய்திகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஹமாஸ் அமைப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தற்போது ஃபலஸ்தீன் எனும் ஒரு நாடு இருந்ததற்கான அடையாளமே இருந்திருக்காது.
உலக நாடுகள் ஹமாஸின் காரணத்தால் தான் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு வருகின்றார்கள் என்ற சூழல் வந்து விட்டதா? உலகம் முழுவதும் ஹமாஸ் என்பது ஓர் ஆயுதம் ஏந்திய இயக்கம் என்கிற பார்வை தானே இருக்கின்றது?
முதலாவதாக வரலாற்றைத் தெரிந்து கொண்டு பேச வேண்டும். நீங்கள் முதல்வினை செய்தவர்களைக் கண்டிப்பீர்களா அல்லது எதிர்வினை செய்தவர்களைக் கண்டிப்பீர்களா? ஹமாஸ் ஆற்றுவது எதிர்வினை. ஒரு நாடு சுரண்டப்பட்டு, அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுக் கொதித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வேறு எதற்கும் வழியில்லாத காரணத்தால் தான் ஆயுதம் ஏந்துகின்றனர்.
ஹமாஸிற்கு எதிராக இவ்வளவு வாதங்கள் வைக்கப்படுகின்றதே! யாராவது ஐநாவின் தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார்களா? அந்தத் தீர்மானம் 1948களிலிருந்து இருக்கின்றதே! அந்த இரு தேசத் தீர்வினைக் குறித்து யாராவது பேசுகிறார்களா? இந்த யுத்தத்திலாவது பேசியிருக்கிறார்களா? அனைவரும் ஹமாஸைத் திட்டுகிறார்களே தவிர இந்தப் பிரச்னையின் வேர், தீர்வு போன்றவற்றை யாரும் பேசுவதில்லை, சிந்திப்பதில்லை.
(அடுத்த இதழில் முடியும்)
விகடன் TVக்கு Dr. K.V.S. ஹபீப் முஹம்மது அளித்த நேர்காணல்
சந்திப்பு: ஜீவபாரதி
எழுத்தாக்கம் : ஷே.ஹபிபுர் ரஹ்மான்