கடந்த இதழ் தொடர்ச்சி...
அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஃபலஸ்தீனுக்குச் சென்று வந்ததைக் குறிப்பிட்டு இருந்தீர்கள். அதைக் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்?
அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஃபலஸ்தீனுக்குச் சென்று அம்மக்களைச் சந்தித்துள்ளார். அங்கிருந்த தனது அனுபவங்களைப் புத்தகமாகவே எழுதி இருக்கின்றார். அப்புத்தகத்தில் அவர் உண்மை வரலாற்றை எழுதி இருக்கிறார். அதிகமாகப் ஃபலஸ்தீனில் வாழும் கிறித்தவர்களைச் சந்தித்து, அவர்களின் கண்ணோட்டம் வழியாகவே அந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அங்குள்ள கிறித்தவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கவில்லை ஃபலஸ்தீனைத் தான் ஆதரிக்கின்றனர். இன்றைக்கும் இந்த பிரச்னையில் ஃபலஸ்தீனர்களுடன் கிறித்தவர்கள் துணை நிற்கின்றனர். PFLP (The Popular Front for the Liberation of Palestine) என்கிற அமைப்பு இருக்கின்றது. அதனுடைய தலைவராகத் திகழ்ந்தவர் ஜார்ஜ் ஹபஸ் எனும் கிறித்தவர். யாசர் அரபாத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவரும் ஒரு கிறித்தவர்.
இஸ்ரேல் என்கிற நாடு உருவாகும் வரை கிறித்தவர்களும் முஸ்லிம்களும் அங்கு ஒற்றுமையாகத் தான் இருந்தனர். கிறித்தவர்களின் பிரதான எதிரியாகத் திகழ்ந்தது யூதர்கள் தான். நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம் முஸ்லிம்கள் ஸ்பெயின் நாட்டை 700 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். 1492இல் முஸ்லிம்கள் தோற்கடிக்கப்பட்டு கிறித்தவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்கின்றனர். அப்போது அவர்கள் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மூன்று தேர்வுகளை வழங்கினர். ஒன்று கிறித்தவராக மாறி விடுவது, இந்த நாட்டை விட்டு ஓடிவிடுவது, அதற்கும் தயாராக இல்லையென்றால் கொல்லப்பட்டு விடுவது. அப்போது ஸ்பெயினிலிருந்து யூதர்களும் முஸ்லிம்களும் வெளியேறினர். யூதர்கள் அனைவரும் முஸ்லிம் நாடுகளில்தான் தஞ்சம் புகுந்தனர். யூதர்களுக்கு அடைக்கலம் வழங்கியது முஸ்லிம் நாடுகள் மட்டும் தான்.
இந்தியாவைப் பற்றிய ஃபிரீடம் அட் மிட் நைட் (Freedom at Midnight) என்கிற புத்தகத்தை எழுதிய டொமினிக் லேப்பர், லாரி காலின்ஸ் ஓ ஜெருசலம் (O Jerusalem) என்கிற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் ‘கொடுமை நிறைந்த அந்த இருண்ட கால கட்டத்தில் யூதர்கள் எங்காவது அமைதியாக வாழ்ந்தார்கள் என்றால் அது முஸ்லிம்கள் ஆண்ட ஸ்பெயினில் தான்’ என்று எழுதியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இப்படி அந்தக் காலத்தில் முழுமையாக யூதர்களைக் காப்பாற்றியது முஸ்லிம்கள் மட்டுமே.
பலர் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஜென்மப் பகை என்று கருதுகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. இயேசுவை யூதர்கள் கொன்றததாகக் கருதியதன் காரணத்தினால் யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் தான் ஜென்மப் பகை. ஆகவே தான் கிறித்தவர்களுக்கு இருந்த குற்ற உணர்வின் காரணத்தால் யூதர்களுக்கு ஒரு நாட்டை வழங்க வேண்டும் என நினைத்தனர். அந்த சமயத்தில்தான் ஐரோப்பியர்கள் ஃபலஸ்தீனில் அவர்களைக் குடியமர்த்தி பிரச்னையை அங்கு திருப்பி விட்டனர்.
மத்திய கிழக்கில் நம்முடைய நாடு ஒன்று இருக்க வேண்டும் என்பதும் அவர்களது மற்றொரு நோக்கம். சொல்லப்போனால் இஸ்ரேல் என்பதே அமெரிக்காவின் ஒரு மாநிலம் தான். இப்படி இஸ்ரேலின் மூலம் அவர்கள் அரபுகளைக் கட்டுப்படுத்துகின்றனர். அரபுகளிடம் ‘பார்! இஸ்ரேல் அடிப்பான் உன்னை நான் காப்பாற்றுகிறேன்’ என்று சொல்லி நாடகமாடுகிறார்கள்.
யூதர்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு எங்கிருந்து தொடங்குகிறது?
பொதுவாகவே யூதர்கள் கெட்டிக்காரர்கள், பெரும்பாலான விஞ்ஞானிகளும் அதிக நோபல் பரிசு பெற்றவர்களும் யூதர்கள் தான். அவர்கள் பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக யுத்த காலத்தில் பிரிட்டிஷுக்கு அதிகமாக உதவியவர்கள் யூதர்கள் தான். அதற்குக் கைமாறாகத் தான் ஃபலஸ்தீன் பகுதியில் இஸ்ரேல் என்கிற நாடு அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஊடகங்கள் யூதர்களின் கையில் தான். இன்றைக்கும் அமெரிக்காவின் ஊடகங்கள் இஸ்ரேலின் அட்டூழியங்களைச் சொல்லாது. இன்னும் சொல்லப் போனால் அமெரிக்க மக்களுக்குப் பல உண்மைச் செய்திகளே தெரியாது. அவர்கள் இஸ்ரேலை ஒரு புனிதமான நாடு எனக் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்ரேலுக்கு எதிராகவும் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாகவும் எழுதப்படும் கட்டுரைகளை அங்கே பிரசுரிக்க மாட்டார்கள். அவ்வாறு எழுதும் பத்திரிகையாளர்களை வெளியேற்றி விடுவார்கள். இந்நிலையில் இப்போது சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கர்களும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
ஊடகம் மட்டுமின்றி பெரும் பெரும் பணக்காரர்களாகவும் அவர்கள் தான் இருக்கின்றார்கள். திரைத்துறை, விஞ்ஞானம், ஆயுதங்கள் என அனைத்தும் அவர்களின் கையில்தான். உலகம் அமெரிக்காவின் கையில்! அமெரிக்காவோ யூதர்களின் பையில். யூதர்களைப் பகைத்துக் கொண்டு அமெரிக்காவில் யாரும் அரசியல் நடத்த முடியாது. அது ரிபப்ளிக்கன் பார்ட்டியாக (Republican Party) இருந்தாலும் சரி, டெமாக்ரடிக் பார்ட்டியாக (Democratic Party) இருந்தாலும் சரி. அவர்களைப் பகைத்துக் கொண்டு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
நீங்கள் வரலாற்று ரீதியான சம்பவங்களைச் சொன்னீர்கள். இதுபோன்றதொரு சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் நடைபெற்றது. தற்போது இந்தப் போர் தொடங்குவதற்கான காரணங்கள் என்ன?
ஃபலஸ்தீனர்களை உலகம் கண்டு கொள்ளவில்லை. அவர்களின் பிரச்னையைக் குறித்து யாரும் பேசவில்லை. எப்படி தென்னாப்பிரிக்காவில் உலக நாடுகள் தலையிட்டு அங்கிருந்த வெள்ளையர்களின் ஆட்சியை ஒழித்து, அந்தப் பூர்வ குடிகளுக்கே அவர்களின் நிலத்தை வழங்கினார்களோ அதே போல் ஃபலஸ்தீனிலும் செய்திருக்கலாம் அல்லவா? உலகம் தங்களைக் கண்டுகொள்ளாத போது, உலகத்தின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வேண்டி இருக்கின்றது.
இன்னொரு பக்கம் ஃபலஸ்தீன் மக்கள் கொதித்து நிற்கின்றார்கள். அவர்களைப் போல் கொடுமைகளுக்கு ஆளான யாரும் எதிர்க்கத்தான் செய்வார்கள். தன்னுடைய சொந்த மண்ணில் எவனோ ஒருவன் உட்கார்ந்து கொண்டு உனக்கு அது கிடையாது, இது கிடையாது; தண்ணீர் கிடையாது எனச் சொன்னால் எவரால் தான் சும்மா இருக்க முடியும். எனவேதான் ஒவ்வொரு ஃபலஸ்தீனரும் போராளியாக மாறுகின்றார்கள்.
சர்வதேசச் சமூகம் இந்தப் பிரச்னையை எப்படி அணுகுகிறது?
ஐக்கிய நாடுகள் சபை ஒரு ஜனநாயகமற்ற சபை. அதில் பாதுகாப்புக் குழு (United Nations Security Council) என்ற குழு இருக்கின்றது. அதன் உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா நிறைவேற்றுகின்ற எந்தத் தீர்மானத்தையும் நிராகரிக்கும் வீட்டோ(veto) என்கிற சிறப்பு அதிகாரம் உள்ளது. ஐ.நாவில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அமெரிக்கா இதனைப் பயன்படுத்தி நிராகரிப்பதையே வழக்கமாகிக் கொண்டது. அமெரிக்கா இதுவரை 40 முறை இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறது.
ஒருமுறை அல்ல, இஸ்ரேல் செய்யும் அநியாயங்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம் அது பாதுகாப்புக் குழுவுக்கு எடுத்துச் செல்லப்படும். அதனை அமெரிக்கா நிராகரிக்கும். இவ்வாறு இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தான் அவர்களின் நிலைப்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. இப்போது இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கிறது. இதையாவது கண்டித்து இருக்கின்றார்களா? மாறாக ஃபலஸ்தீனர்கள்தான் பிரச்னையை ஆரம்பித்தார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்டப்படுகிறது.
ஆனால் அதற்கான எதிர்த் தாக்குதல் எவ்வளவு கோரமாக இருக்கின்றது. ஃபலஸ்தீன் மக்கள் எந்த நேரமும் தமக்கு மரணம் நிகழலாம் எனும் அபாயத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேல் உலகின் நான்காவது ஆயுத வளம் கொண்ட நாடு. ஃபலஸ்தீனர்களிடம் ஒன்றும் இல்லை. வெறும் சாதாரண ராக்கெட்களை வைத்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
‘என்றுத் தணியும் இந்தச் சுதந்திரத் தாகம்’ என்று கூறினானே பாரதி. அதுபோலத்தான் அவர்களின் சுதந்திர தாகத்தை யாராலும் தணிக்க முடியாது. இந்தத் தலைமுறை இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையினர் இதனை நடத்தித் தான் தீருவார்கள்.
தற்போது காஸா எனும் பெயர் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டே வருகிறது. அதனைப் பற்றிக் கூறுங்களேன்?
காஸா என்பது 40 கிலோ மீட்டர் பரப்புடைய சிறிய நகரம். அதில் 23 இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள். எகிப்தின் எல்லைப் பகுதியில் இருக்கக்கூடிய இந்த நகரம் தான் உலகில் மக்கள் மிக அடர்த்தியாக வசிக்கக் கூடிய பகுதி. அம்மக்கள் மருத்துவமனைகள் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் திறந்த வெளிச் சிறையில் சிக்கி இருப்பதைப் போலத்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் சும்மா இருப்பார்களா? இந்தச் சூழ்நிலை காரணமாகத் தான் அவர்கள் இஸ்ரேலை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
அவர்களுக்காகக் குரல் கொடுக்காமல், உலகின் அனைத்து நாடுகளும் கள்ள மவுனம் காக்கின்றன. அவர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டிய அரபு நாடுகள் உட்பட யாரும் ஃபலஸ்தீனுக்கு ஆதரவு வழங்கவில்லை. மாறாக அவர்கள் இஸ்ரேலுடன் கைகோர்த்துக் கொள்கின்றார்கள்.
தற்போது சவூதி, அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. எதற்காக வென்றால் அவர்களிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாங்கவும் மேலும் தம்முடைய நாட்டில் அணு ஆயுதம் தயாரிக்க அனுமதியும், பாதுகாப்பும், நவீன ஆயுதங்களையும் வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளனர். அப்படிச் செய்தால் நாங்கள் இஸ்ரேலுடன் கைகோர்த்துக் கொள்கிறோம் என ஃபலஸ்தீன் மக்களை அடகு வைத்து ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்.
உலகில் நீதிக்குக் குரல் கொடுப்பவர்கள் யாரும் இல்லாத போது அங்கு அப்படித்தான் நடக்கும். ஃபலஸ்தீனர்களைப் பார்த்து, ஏன் நீங்கள் முதலில் தாக்குதல் நடத்தினீர்கள்? என்று கேட்கப்படுகிறது. பொதுமக்களைத் தாக்குவதை நான் சரி என்று சொல்ல மாட்டேன். ஆனால் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் வேளையில் தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களின் உள்ளம் துடிக்கின்றன.
ஹமாஸ் ஆயுதம் ஏந்திப் போரிடுவது மட்டும் இரட்டை அளவுகோல் கொண்டு பார்க்கப்படுகின்றது. அவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். தாய்நாட்டிற்காகப் போராடுபவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் தானே! பயங்கரவாதிகள் ஒன்றும் கிடையாதே. இன்று உக்ரைனில் போராடும் மக்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்வார்களா? அவர்களைப் போராளிகள் என்று தானே கூறுகின்றனர். நம் தமிழ் பத்திரிகைகள் உட்பட அனைத்து ஊடகங்களும் அவர்களைத் தீவிரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றன.
இதில் இந்தியாவின் நிலைப்பாடு முன்பு எப்படி இருந்தது. இப்போது எப்படி மாறியிருக்கிறது?
இஸ்ரேல் நாடு உருவாகையில் காந்தி அதனைக் கண்டித்தார். அதே கொள்கையைத்தான் நேருவும் பின்பற்றினார். நீண்ட காலமாக அதே நிலைதான் தொடர்ந்தது. இந்திரா காந்திக்கும் யாசர் அராபாத்திற்கும் நெருங்கிய உறவு இருந்து வந்தது. சகோதரனே, சகோதரியே என்று தான் இருவரும் அழைத்துக் கொள்வார்கள். அந்த நிலை நரசிம்மராவ் காலத்தில் மாறியது. அவருக்கு ஆர்எஸ்எஸ் சார்பு இருந்தது அனைவரும் அறிந்த செய்தியே! பாபரி மசூதி அவரது ஆட்சியில் தான் இடிக்கப்பட்டது. அப்போது தான் இஸ்ரேல் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கி யது. இன்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு முழு ஆதரவாளர்களாக மாறி விட்டார்கள்.
அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் காரணத்தால், இந்தியாவும் அதே நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றதா? இதனை அப்படிப் பார்க்கலாமா?
இவர்கள் இஸ்ரேலுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் காரணம், அவர்களால் இவர்களுக்கு இராணுவத் தளவாடங்கள் கிடைக்கின்றன. இஸ்ரேலின் தொழில்நுட்பம், அவர்களின் உளவுத்துறை மொஸாத் (Mossad)ன் உதவி போன்ற அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கின்றது. அதனுடன் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கொள்கையும் சேர்ந்து கொள்கிறது.
(அடுத்த இதழில் முடியும்)