நிராகரிக்கப்படும் பிரார்த்தனை
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறைவன் தூய்மையானவன். தூய்மையான பொருள்களைத் தான் அவன் ஏற்றுக்கொள்கின்றான். இறைவன் தன்னுடைய தூதர்களுக்கு அளித்த அதே சட்டத்தைத் தான் நம்பிக்கையாளர்களுக்கும் அளித்துள்ளான். ‘தூதர்களே! உண்ணுங்கள் தூய்மையானவற்றை! செய்யுங்கள் நன்மைகளை’ (திருக்குர்ஆன் 23:51) என்றும் ‘இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வுக்கு மட்டுமே பணிந்து வாழ்பவர்களாய்இருப்பின் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் தூய்மையானவற்றைத் தாராளமாகப் புசியுங்கள்’ (திருக்குர்ஆன் 2:172) என்றும் தாம் அருளியிருக்கின்றான்.
அதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் குறித்துச் சொன்னார்கள். அந்த மனிதர் ‘நீண்ட நெடுந் தொலைவு பயணம் செய்து வருகின்றார். அவருடைய தலை முடி கலைந்துள்ளது. தூசு படிந்த தன்னுடைய கைகளை வானத்தை நோக்கி உயர்த்துகின்றார் ‘இறைவனே! இறைவனே! என்று திரும்பத் திரும்ப அரற்றுகின்றார். இத்தனைக்கும் அவருடைய உணவு ஹராமானது. அவருடைய ஆடைகளும் ஹராமான வழியில் ஈட்டப்பட்டவை. ஹராமான பொருள்களைத் தின்றே அவர் வளர்ந்துள்ளார். அதன் பிறகு அவருடைய முறையீடு மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?’
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி) நூல் : முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்லி இந்தக் கருத்தை விளக்கியிருக்கின்றார்கள். ஒரு மனிதர் மிகவும் சிரமப்பட்டு எல்லாவற்றையும் பொறுமையாகச் சகித்துக்கொண்டு புனிதத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றார். நீண்ட நெடுந்தொலைவு பயணம் செய்ததால் அவருடைய தலைமுடி கலைந்திருக்கின்றது. அவருடைய உடல் முழுவதும் புழுதியும் தூசும் அடர்த்தியாகப் படிந்துள்ளது. அவர் மிகவும் உருக்கமாகவும் நெஞ்சம் நெகிழ வைக்கின்ற வகையிலும் இறைவனே! இறைவனே! என்று அழுது அரற்றி மன்றாடுகின்றார். ஆனால் அவருடைய பிரார்த்தனைகள் அனைத்தும் முற்றாக நிராகரிக்கப்பட்டுவிடும். திண்ணமாக அவற்றில் யாதொன்றும் ஏற்றுக் கொள்ளப்படாது.
ஏனெனில் அவர் ஹராமான சம்பாத்தியத்திலிருந்தும் பொருளிலிருந்தும் விலகி இருக்கவில்லை. அவர் சாப்பிடுவதும் ஹராமானவற்றை! அவர் அணிவதும் ஹராமானவற்றை! அவருøடய உடலும் கொழுத்து வளர்ந்து இருக்கின்றதெனில் ஹராமானவற்றைச் சாப்பிட்டே வளர்ந்திருக்கின்றது. இறைவனின் உவப்பைப் பெற வேண்டுமெனில் ஹலாலான முறையில் ஈட்டப்பட்ட உணவைத்தான் சாப்பிட வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நபிமொழியிலிருந்து நமக்குக் கிடைக்கின்ற செய்தியாகும். வெறுமனே இறைவனிடம் பிரார்த்தனை புரிவதால் மட்டுமே எந்தவொரு மனிதருக்கும் இறைவனின் அருளும் கொடைகளும் கிடைத்துவிடாது. பணம் சம்பாதிக்கின்ற விஷயத்தில் ஹலால் எது ஹராம் எது என்பதைக் குறித்தெல்லாம் அதிகமாக அலட்டிக் கொள்ளாத மனிதர் இறைவனுடைய பார்வையில் உலகமோகியாக, பணிய மறுக்கின்றவராகத்தான் கருத்தில் கொள்ளப்படுவார்.
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா