
ஓர் இறைவிசுவாசி அவரது ஆன்மிக வாழ்க்கையிலே எதிர்கொள்கின்ற ஒரு முக்கியமான பிரச்னை தான் அவரை அவ்வப்போது பீடிக்கின்ற சோர்வு நிலை.
ரமளான் காலத்தில் நற்செயல்கள், வழிபாடுகளில் ஊக்கத்தோடும் உற்சாகத் தோடும் ஈடுபட்டவருக்கு இப்போது அவ்வாறு இருக்க முடியவில்லை. உம்ராவின் போது இருந்த சுறுசுறுப்பு ஊருக்குத் திரும்பியதும் குறைந்து விட்டது. ஹஜ்ஜுக்குச் சென்ற போது காணப்பட்ட உத்வேகம் நாட்டுக்கு வந்ததும் மறைந்து விட்டது. இது பலரும் அனுபவிக்கின்ற ஒரு பொதுவான பிரச்னை. இதனைத் தான் நாம் சோர்வு நிலை என்கின்றோம். இது இயல்பானது, ஆனால் ஆன்மிக வாழ்க்கைக்கு ஆரோக்கியமானது அல்ல. என்றும் எப்போதும் ஓர் இறை நம்பிக்கையாளர் ஊக்கத்தோடும் உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும் நற்செயல், வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தொய்வு இல்லாமல் நன்மையான காரியங்களைத் தொடர வேண்டும். இதுவே வெற்றிக்கான வழி!
சோர்வடையாமல், சோம்பல் இல்லாமல் நமது ஆன்மிக வாழ்க்கையை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகளைக் கீழே சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.
எப்போதும் நாம் நமது ஈமானைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் ஈமான் என்பது கூடிக் குறையக் கூடியதாகும். இதனால் தான் நபித்தோழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ‘வாருங்கள் நாம் நமது ஈமானைப் புதுப்பித்துக் கொள்வோம்’ என்று சொல்பவர்களாக இருந்தார்கள்.
இந்தப் பின்னணியில்தான் திருக்குர்ஆனும் இறைநம்பிக்கையாளர்களை விளித்து ‘ஈமான் கொண்டவர்களே நீங்கள் ஈமான் கொள்ளுங்கள்’ எனப் பணிக்கின்றது.
சோர்வைக் களைந்து ஆர்வத்தோடு நற்செயல்களில் ஈடுபடத் துணை புரியும் ஓர் அம்சம்தான் அறிவு. குறிப்பாக நற்செயல்களின் சிறப்புகளைப் பார்க்க வேண்டும்.
படிக்க வேண்டும். அறிவுசார் சபைகளிலே போய் அமர வேண்டும். கெட்ட சகவாசத்தைத் தவிர்த்து; நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். மரணத்தையும் மறுமையையும் அடிக்கடி நினைக்க வேண்டும். சொர்க்கத்தையும் நரகையும் அவ்வப்போது நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
சோம்பலை விரட்டி, சோர்வைப் போக்கி நற்செயல்களில் முனைப்போடு ஈடுபடுவதற்கு இவையெல்லாம் நமக்கு உதவும். இவற்றோடு நமது ஆன்மிக வாழ்க்கையிலே எப்போதும் நடுநிலையைக் கைக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் மார்க்க விஷயங்களில் கடும் போக்கை கைக் கொள்வது காலப்போக்கிலே மார்க்க விவகாரங்களில், நற்செயல், வழிபாடுகளிலே தொய்வையும், சோர்வையும் ஏற்படுத்தும் என்பது மிகப்பெரிய உண்மை.
மேலும் ‘முஹாசபத்துன் நஃப்ஸ்’ என்கிற சுய விசாரணையிலே அடிக்கடி நாம் ஈடுபட வேண்டும். அதனூடாக நமது குற்றங்களை, குறைகளை அடையாளம் கண்டு உடனுக்குடன் அவற்றைக் களைய முயற்சி செய்ய வேண்டும். நமது சுவனம் நோக்கிய இலட்சியப் பயணத்தை முழு வீச்சுடன் தொடர்வதற்கு இவைதான் சிறந்த வழிகள்.
சோர்வின்றி, சோம்பலின்றி ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் நற்செயல், வழிபாடுகளையும் பிற நற்காரியங்களையும் தொடர்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!