மதியச்சாப்பாட்டிற்குப் பின் முன் அறையில் அனைவரும் அமர்ந்திருந்தனர். அலைப்பேசி அழைத்தது.
சாலிஹா எடுத்தாள். புது எண்ணாக இருந்தது. கட் பண்ணிவிட்டு ஆமினா அக்கா பக்கத்தில் படுத்தாள். மீண்டும் விடாது அடித்தது. ‘போனை எடுத்து தான் பேசேன்’ என்று ஆமினா எரிச்சல் பட்டாள்.
‘யாருன்னே தெரியலக்கா..!’
‘பேசினாத்தானே தெரியும்’
மீண்டும் அழைப்பு வந்தபோது எடுத்துப் பேசினாள்.
‘ஹலோ ஆண்ட்டி! நல்லா இருக்கீங்களா?’ முபீனின் கணீர்க்குரல்.
‘நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா?’
‘போங்க ஆண்ட்டி, போய் ஒரு போனும் போட்டீங்க இல்ல..!’
‘ஏண்டி! வந்து 10 நாள் தான் ஆயிருக்கு. அதுக்குள்ள என்ன அவசரம்?’
‘உங்கள ரொம்பத் தேடுது ஆண்ட்டி’
‘சரி! சரி! வை பிறகு பேசுகிறேன்’
‘யாரு சாலிஹா? தெரியாத நம்பர்னு சொன்னே. இப்போ உரிமையோடு பேசுறே?’
‘அக்கா! அங்க ஹாஸ்டலில் ஒரு பிள்ளை. பேரு முபீன். பாவம் யாரும் கிடையாது. எனக்கு நல்ல உதவி செய்வாள். நான் வந்து போன் போடலையேன்னு உரிமையோட கேக்குறா’
‘அங்க எத்தன பிள்ளைக படிக்குது?’
‘40 பிள்ளைங்க இருக்கும்’
‘அத்தனை பிள்ளைக்குமா நீ வடிக்கணும். தாளிக்கணும்?’
சாலிஹா சிரித்தாள்.
‘அக்கா! அக்கா! சமைக்க வேறுஆளு! கூட்ட கழுவ வேற ஆளு! மேற்பார்வை மட்டும்தான் நான்’
‘நம்ப முடியாது. நீ கைய்ய வச்சிக்கிட்டு இருக்க மாட்டியே! பரபரன்னு வருவியே! எப்படி அங்க இருக்க முடியுது சாலிஹா?’
‘கஷ்டம்தாக்கா! ஆனாலும் சமாளிச்சி வந்துட்டேன். இங்க வந்தாச்சில.. இனி கவலையில்லை’
பீவியம்மா தொண்டையைச் செருமினாள். ‘நீ போகலனா ஆளே கெடக்காது பாரு. நா வாரேன் தண்ணி எடுக்க. எங்க அக்கா வாரா புள்ள
தூக்கன்னு கெடக்கு ஒலகம்’
‘அல்லாஹ் ஒரு பாதையை காமிச்சா நாம தான் அதைப் பற்றிப் பிடிக்கணும். பொறவு காலங்கடந்த ஞானம் வந்து பிரயோசனமில்லை’
சாலிஹாவின் முகம் சட்டென்று வாடியது. அம்மா என்னை நிஜமாகவே வேலைக்குப் போகச் சொல்லுதா? நான் என்ன இவர்களுக்குப் பாரமாகவா இருக்கப்போகிறேன்? என் கணவர் வீடு கெடக்கு. போய் இருப்பேன். அக்காவைப் பார்த்தாள் சாலிஹா. தனக்கு ஆதரவாக ஏதும்
சொல்ல மாட்டாளா என்ற எதிர்பார்ப்புடன்!
‘சாலிஹா காலம் கெட்டுக்கெடக்கு. யாரையும் நம்ப முடியல. நான் மூணு புள்ளைய பெத்தேன். மூத்தவன் கல்யாணம் முடிச்ச கையோடு போனானே அவ்வளவுதான். நீ தூக்கிச் சொமந்தே! ஒரு நாளாவது ஒன்ன வந்து பாத்துருப்பானா? விசாரிச்சிருப்பானா? மத்த ரெண்டு பேரும் வர்ர வருத்து அப்பப்பா தாங்க முடியல! வீட்டுல வந்து இருந்தா ரெண்டு நாள்ல ஓடிருவே!’ என்றாள் ஆமினா.
‘அக்கா மவன்னு ஆசையா பாசமா தூக்கி வளர்த்தோம். என்னைக் காப்பாத்த என் ரப்பு இருக்கான். உன்னை அவங்க பார்த்தாப் போதும்’
‘அதான் சொல்றேன். தன் கையே தனக்கு உதவி. கொஞ்ச நாள் இரு. பிறகு நீ போகலாம்’
‘சரிக்கா’ என்று சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
சாலிஹாவின் மனதில் சல்மான் தோன்றினான்.
சல்மானை நினைக்கும் போதெல்லாம் பாவம் போல முழிக்கும் விதமும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் குசும்புத்தனமான குறும்புகளும் மொத்தமாக வந்து விடும். பிறர் முன்னால் நாகரிகமாகவும் அழகாகவும் பேசுவான் சல்மான். சாலிஹாவின் வீட்டு ஆட்கள் இடமும் கண்ணியமாக நடந்து கொள்வது போல், தன்னுடைய தங்கை வீட்டாரிடம் தங்கையின் கணவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வான்.
ஆனால் ஆமினா அக்காவின் கணவர் அப்படி அல்ல. எப்பொழுது பார்த்தாலும், எந்த வேலை செய்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார். வீட்டுக்கு அசன் மச்சான் வந்து விட்டார் என்றால் அம்மா வீடு ஒரே களேபரமாக ஆகிவிடும். சிரித் துக் கொண்டே இருப்பவர்கள் எல்லாம் வாயை இறுக்கமாக மூடிக் கொள்ள வேண்டும். ஒரு சத்தம் கேட்கக்கூடாது. அவர் கேட்கின்ற பொருள் எல்லாம் உடனே வாங்கிக் கொடுத்து விட வேண்டும்.
சில நேரங்களில் அசன் மச்சானுக்குத் தேவையான பொருள் கேட்டு இல்லை என்றால், இது கூடவா வீட்டில் வாங்கி வைக்கக் கூடாது. ஒரு பொருள் வாங்கி வைக்கத் துப்பில்லை என்பார். அவருக்காக அத்தா ஒரு மர்பி டிரான்ஸிஸ்டர் ரேடியோ வாங்கிக் கொடுத் திருந்தார். அதோடுதான் அவர்களுக்கு நேரம் கழியும்.
சாலிஹாவோ, தங்கை சபீனாவோ அவர் இருக்கும் பக்கம் கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள். அண்ணன் தான் அமிர்தாஞ்சன் எடுத்து கை காலெல்லாம் தேய்த்து விடுவான். அடிக்கடி கரண்ட் போகும் காலம். வீட்டில் கரண்ட் வசதி கிடையாது. பெரிய மருமகன் வந்தால் மட்டும் பக்கத்து வீட்டில் வயர் சொருகி ஒரு குண்டு பல்பும் ஓசிக்கு வாங்கிய ரேலிஃபேனும் ஓடும். அவர்களும் பயந்து பயந்தே கொடுப்பார்கள். கவர்மெண்டுகாரன் பார்த்தா பியூசைப் பிடுங்கிப் போயிருவான். பீவியம்மா உங்க குணத்துக் காகத்தான் தருகிறேன் என்பார்கள்.
கரண்ட் போய் விட்டால் ஓலை விசிறி வைத்து வீசிக்கொண்டே இருக்க வேண்டும். பாட்டிதான் வீசுவார்கள். மச்சானைச் சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். வீட்டில் கோபால் பல்பொடி எல்லோரும் தேய்ப்பார்கள். அத்தா மட்டும் பயோரியா பல்பொடி.
மச்சான் வந்தால் பேஸ்ட் தான் வேணும் என்பார்.
அண்ணன் போய்த்தான் கோல்கேட், பிரஸ் எல்லாம் வாங்கி வருவான். அம்மாவிடம் தனியாகப் போய் சண்டை போடுவான். ‘அஞ்சு பைசா கேட்டா தரமாட்டீங்க! பத்து ரூபாய்க்கு மச்சானுக்கு மட்டும் கரண்ட் வாங்கி, பேஸ்ட்டெல்லாம் வாங்கிக் கொடுக்கீங்க’ என்பான்.
பீவி அம்மாவும் முதன்முதலாக வீட்டுக்கு வந்த மருமகன்னு ரொம்ப இடமும் மரியாதையும் கொடுத்து வைத்திருந்தார். போகும்போது அவருக்குப் பிடித்த தேங்காய் பர்ஃபி டப்பா நிறையவும், குலோப்ஜாமூனை ஹார்லிக்ஸ் பாட்டிலில் அடைத்தும் கொடுத்தனுப்புவாள். மருமகன் வந்தால் பேனி என்றும், பூரியான் என்றும் வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போடுவாள். இதற்கும் பாதுஷா கணக்குப் பார்ப்பான்.
‘நாங்க படிக்கப்போக பழய கஞ்சி குடிச்சிட்டுப் போறோம். இந்த மச்சான் வந்தா மட்டும் இட்லி, தோசை, ஆப்பம்னு என்னவெல்லாம் செய்றீங்கம்மா! நான் பெரியவனாகி நிறைய சம்பாதித்து..’
‘சத்தம் போடாதேடா! அக்காவைக் கூப்பிட்டுட்டு வந்திருக்கார். காதில் விழுந்தால் கூட்டிட்டு ஓடிருவார். நான் உனக்கு அம்பது பைசா தாரேன் போ!’ வந்தவங்
களைச் சமாளிச்சிடலாம். இருப்பவனைச் சமாளிப்பது எவ்வளவு கஷ்டம்னு முணங்குவாள் பீவியம்மா!
பீவியம்மாவின் இன்னொரு குணம் போகும்போது பேஸ்டையும் பிரஸ்ஸையும் கொடுத்தனுப்பி விடுவாள். அதற்கும் பாதுஷாவிடம் போராட வேண்டியிருக்கும்.
‘ஏம்மா! நாங்க தேய்ப்போமே? நாம காசு போட்டு வாங்கி அத அப்படியே கொடுத்து அனுப்புறீங்க!’ பீவியம்மா மகனைக் கெஞ்சுவாள். அது இங்க இருந்தா பழசாயிடும். நமக்கு எதுக்கு ராஜா பேசுட்டு கீசுட்டெல்லாம்... பல்பொடி வச்சி விரலால தேய்ங்க. அதான் நலம். நீ படிச்சி பெரியவனாவு அல்லாஹ் உனக்கு எல்லாம் தருவான்’
வீட்டில் பேப்பர் வாங்கும் பழக்கமெல்லாம் கிடையாது. சாலிஹாவும் பாதுஷாவும் பக்கத்து வீட்டில் போய் தினத்தந்தியில் சிந்துபாத்தும், ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் என்பதையும் படித்து வந்து விடுவார்கள். வீட்டுக்காரம்மா வீட்டுக்கு ராணி வரும். அதிலும் அட்டைப்படக் கதையைப் படித்து அண்ணனும் தங்கையும் டிஸ்கஸ் பண்ணுவாங்க. அதற்கும் பீவியம்மா, பாடம் படிக்கச் சொன்னா கதையா படிச்சிட்டு வந்து தைரியமா பேசுறீங்கன்னு நாலு சாத்து சாத்துவா!
இரண்டு வீடு தள்ளி பாப்புபாய் வீட்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில தினசரி வாங்குவார்கள். வீட்டில் மாவு சலிக்க ஒரு பேப்பர் கேட்டு வாங்கி வரச் சொல்வாள் பீவியம்மா. சாலிஹாவாவது, பாதுஷாவாவது போய்க் கேட்பார்கள். லேசில் தர மாட்டார்கள். ஆம்பிள்ளைங்க வரட்டும்பா கேட்டு வைக்கிறோம் என்று நாலு நாள் அலைய வச்சு இரண்டு நாள் பேப்பரைத் தருவார்கள்.
ஆனால், அசன் மச்சான் வந்துவிட்டால் முரசொலியும், தினகரனும் தினமும் வாங்க வேண்டும். விபரமறியா பாதுஷா ஒருமுறை, ‘மச்சான்! கொஞ்சம் கொஞ்சமா பேப்பர் படிங்க! அவ்வளவையும் படிச்சி முடிச்சுட்டா புதுப் பேப்பர் வாங்கணும்’ என்று சொல்லி விட்டான்.
ஆமினா அக்காவைக் கூப்பிட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு. ‘உங்க வீட்டுச் சொத்தா கொறஞ்சிருச்சி! ஒரு பேப்பருக்கு பொடிப்பய, நாங்காண பொறந்த பய என்னா கேள்வி கேட்டுட்டான்! இனி எங்க வீட்டுக்குக் கூட்டிப்போங்கன்னு சொல்லு! அப்பப் பாக்குறேன்’
அவரை அக்காவும், அம்மாவும் சமாதானப் படுத்தப் பட்டப்பாடு போதும் போதும் என்றாகிவிட்டது. அவர்கள் போகும் வரை பாதுஷாவைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள்.
சாலிஹாவுக்கு அண்ணனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அதனால்தான் சாலிஹாவின் திருமணத்திற்குப் பிறகு சல்மானின் குணம் எல்லோருக்கும் பிடித்துப் போனது. ஆமினா அக்கா புகழவும் அதுதான் காரணம்.
தொடரும்