இஸ்லாமிய வெறுப்புக்
குற்றங்கள்
இதுவா துரோகம்?

பீகாரின் அர்வல் மாவட்டத்தில் நடந்த பேரணியின்போது முஸ்லிம்களைக் குறிவைத்து பெகுசராய் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பியான ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவரிடம் ‘ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை உள்ளதா?’ எனக் கேட்டுப் ‘பாஜகவிற்கு வாக்களித்தீர்களா?’ என்று கேட்டதாகச் சிங் கூறினார். வாக்களித்ததாகக் கூறி, கடவுளின் மீது சத்தியம் செய்ய மறுத்தபோது, சிங் அத்தகைய நபர்களை ‘நமக் ஹராம்கள்’ (துரோகிகள்) என்றும், பாஜகவின் பணிகளை ஒப்புக் கொள்ளாத மக்களிட மிருந்து வாக்குகளை விரும்பவில்லை என்றும் கூறினார்.
வேலையின்மை, பணவீக்கம், மோசமான கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அழுத்தமான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப பாஜக தலைவர்கள் இந்து முஸ்லிம் சொல்லாட்சியைப் பயன்படுத்துவதாகவும், சிங்கின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்த ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் திவாரி குற்றம் சாட்டினார்.
வெறுப்புச் சொல்லாடல்

எழுத்தாளர் ரோஷன் கேரி பிக் பாஸ் 19 போட்டியாளரான ஃபர்ஹானா பட்டை ‘பயங்கரவாதி’ என்று அழைத்தது ஆன்லைனில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக ஃபர்ஹானாவின் காஷ்மீர் பின்னணியைக் குறிவைத்து நடந்ததாகவும் மேலும் இது வளர்ந்து வரும் சகிப்பின்மையைப் பிரதிபலிப்பதாகவும் கூறினர்.
குழப்பவாதிகள்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், அக்டோபர் 17 அன்று, ஙஏக, பஜ்ரங் தள உறுப்பினர்கள் ஒரு தனியார் வில்லாவுக்குள் நுழைந்து அங்கு நடந்து கொண்டிருந்த தீபாவளி விருந்தைச் சீர்குலைத்து அங்கு லவ் ஜிஹாதுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக் கூட்டம் ஆபாசத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினர்.
மாட்டிறைச்சி அரசியல்

மகாராஷ்டிராவின் அகோலா நகரின் பைஸ்பூர் பகுதியில் பஜ்ரங் தள உறுப்பினர்கள் உள்ளூர் இறைச்சிக் கடையில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாகக் கூறி சோதனை நடத்தியதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர் முஸ்லிம் குடியிருப்பாளர்கள் அந்தக் குழுவை எதிர்கொண்டு அவர்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டிய போது நிலைமை மோசமானது.
பஜ்ரங் தள உறுப்பினர்கள் எந்த அதிகாரமும் இல்லாமல் கடைக்குள் நுழைந்து கடைக்காரர் மாட்டிறைச்சி விற்றதாகக் குற்றம் சாட்டத் தொடங்கினர். ‘அவர்கள் முழக்கங்களை எழுப்பி கடை உரிமையாளரைத் துன்புறுத்தவும் தொடங்கினர்’ என்று உள்ளூர்வாசி முகம்மது சலீம் கூறினார். ‘நாங்கள் அவர்களைத் தடுக்க முயன்றபோது, அவர்கள் மக்களைத் தூண்டிவிடத் தொடங்கினர். அது திட்டமிட்டதாகத் தோன்றியது’ என நேரில் கண்ட சாட்சிகள் கூறின.
மறுக்கப்படும் வழிபாட்டுரிமை

1736ஆம் ஆண்டு பேஷ்வாக்களால் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சனிவார் வாடாவில் முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்துவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து புனேவில் இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. இந்தச் சம்பவம் பாஜக ராஜ்யசபா MP மேதா குல்கர்னி உட்பட வலது சாரி குழுக்கள், அரசியல் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைப் பெற்றது.
இந்த வீடியோவை X தளத்தில் பகிர்ந்த குல்கர்னி, அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரினார். ‘இது வாய்ப்புக்கேடானது’ என்றும் சனிவார் வாடாத் தொழுகை நடத்த ஏற்ற இடம் அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாகத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என்று அவர் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கும்போது கூறினார்.
பட்டித் பவன் சங்கத்னா, இந்து சகல் சமாஜ் உட்பட பல இந்துக் குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன. போராட்டக்காரர்கள் அந்த இடத்தில் பசுவின் சிறுநீரைத் தெளித்து ‘சிவ வந்தனம்’ (ஒரு இந்துப் பிரார்த்தனை) செய்தனர், அங்கு தொழுகை நடத்தப்பட்ட பிறகு அந்த இடத்தை சுத்திகரிப்பதாகக் கூறினர்.
வன்முறை முழக்கங்கள்

சத்தீஸ்கரின் துர்க்கில் அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு முன்னதாக ‘அப்னா தியோஹர், அப்னா வியாபார்’ என்னும் பரப்புரையின் கீழ் இந்து விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே பொருட்கள் வாங்குமாறு மக்களை வலியுறுத்தி VHP, பஜ்ரங் தளம் ஒரு பேரணியை நடத்தியது. இதில் கலந்து கொண்டவர்கள் ‘இந்து நலன்களுக்குத் தீங்கு விளைவித்தால் தெருக்களில் இரத்தம் ஓடும்’ என்னும் வன்முறை முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
தொடரும் வெறுப்புச் செயல்

அயோத்தியில், மௌலானா ஷாஹென்ஷா என்ற மாற்றுத்திறனாளி இஸ்லாமிய மார்க்க அறிஞரை ஒரு கும்பல் துன்புறுத்தி பயங்கரவாதி என்று அழைத்து அவரது தாடியை இழுத்தனர். மேலும் துப்பாக்கி முனையில் அவரை உடல் ரீதியாகத் தாக்கி அவரது பணத்தையும் பறித்தனர்.
முதல்வரின் வெறுப்புத் திட்டங்கள்

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது அரசாங்கம் நில ஜிஹாதிகளிடமிருந்து 9,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை மீட்டெடுத்ததாகக் கூறினார். ரூர்க்கியில் ஒரு புதிய பாஜக அலுவலகத்தைத் திறந்து வைத்த அவர் மாநிலத்தில் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள், மத மாற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
‘9,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் நில ஜிஹாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன, 250 சட்டவிரோத மதரஸாக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன, மேலும் 500க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டமைப்புகள் இடிக்கப்பட்டுள்ளன. பணிகள் இன்னும் தொடர்கின்றன’ என்று தாமி கூறினார்.
இந்து மதத் துறவிகள் போல் நடித்து சனாதன நம்பிக்கையை அவமதிக்கும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தனது அரசாங்கம் ‘ஆபரேஷன் காலனேமியைத் தொடங்கி யுள்ளதாக முதல்வர் கூறினார். சிறுபான்மை கல்விச் சட்டத்தின் மூலம் மதரஸா வாரியத்தை ஒழிக்க மாநில அரசு அண்மையில் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். 2026 ஜூலை 1 முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் அனைத்து மதரஸாக்களும் மாநிலக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றும்’ எனக் கூறினார்.
மாநிலத்தின் மக்கள்தொகை மாறாமல் இருப்பதையும், அமைதியும் சட்டமும் கண்டிப்பாகப் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்வதில் தனது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக தாமி கூறினார்.
மறுக்கப்படும் மதச் சுதந்திரம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், சத்பாவ்னா மேளாவில் நடந்த நகைக் கண்காட்சியின் போது பர்தா அணிந்ததற்காக இஸ்மாயீல் பெண்கள் பட்டப்படிப்புக் கல்லூரியில் இரண்டு முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்குக் கல்லூரி நிர்வாகம் பாதுகாப்பு விதிகளை மேற்கோள் காட்டியது, அதே நேரத்தில் இந்த நடவடிக்கை அவர்களின் மத சுதந்திரத்தை மீறுவதாக மாணவர்கள் கூறினர்.
வெறுப்பச்சம்

பாஜக MLA கோபிசந்த் படால்கர், இந்துக் கல்லூரி மாணவிகள் ஜிம்களுக்குச் செல்வதற்குப் பதிலாக வீட்டிலேயே யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களைக் குறிவைத்து ஒரு பெரிய சதி இருப்பதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய படால்கர் யாரையும் பெயரிடாமல் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நம் பெண்களைக் கவர்ந்திழுக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.
‘பயிற்சியாளர் யார் என்று தெரியாத ஜிம்களுக்குச் செல்ல வேண்டாம் என்பது இந்துப் பெண்களிடம் எனது மனமார்ந்த வேண்டுகோள். வீட்டிலேயே யோகா செய்வது நல்லது. இந்தச் சதி எவ்வளவு பெரியது என்று உங்களுக்குத் தெரியாது’ என்று அவர் கூறினார். ஜிம்களுக்குச் செல்வதற்குப் பதிலாக வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யுமாறு அவர் சிறுமிகளுக்கு அறிவுறுத்தினார்.
கல்லூரிகளுக்குச் செல்லும் இளைஞர்களைக் கடுமையாகக் கண்காணிக்கவும் படால்கர் பரிந்துரைத்தார். ‘அடையாள விவரங்கள் இல்லாமல் கல்லூரிகளுக்குச் செல்லும் இளைஞர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளே நுழைவதைத் தடுக்க வேண்டும். நாம் ஒரு வலுவான தடுப்பை உருவாக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.
வெறுப்பை உமிழும் அமித்ஷா

அக்டோபர் 18 அன்று பாட்னா, பீகாரில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழு ஏற்பாடு செய்திருந்த ஹிந்துஸ்தான் பீகார் சமகம் 2025இல் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் அரசாங்கத்தை ஊடுருவுபவர்கள் தீர்மானிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்துவதில் தேர்தல் ஆணையத்தைப் பாஜக ஆதரிக்கிறது என்றும் கூறினார். முஸ்லிம் ஊடுருவல்காரர்களைத் தங்க அனுமதிப்பதன் மூலம் காங்கிரசும் ஆர்ஜேடியும் பிளவுகளை வளர்ப்பதாக அமித் ஷா குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வந்த இந்து, பௌத்த, சீக்கிய அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதில் தனது கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பொய்ப் பரப்புரை

செப்டம்பர் 24 மத்தியப்பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்திலுள்ள நல்ச்சாவில் இளம் பெண்களுக்கான நவராத்திரி பயிற்சி முகாமின் போது இந்து தேசியவாதியும் தற்காப்பு பயிற்சியாளருமான பல்வந்த் சிங் தேவ்தா இந்துப் பெண்களைச் சிக்க வைக்க முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள் என்று கூறி லவ் ஜிஹாத் என்னும் இஸ்லாமிய வெறுப்புக் கோட்பாட்டைப் பரப்பினர். சல்மான், ஷாருக், ஆமிர் கான் போன்ற நடிகர்கள் இந்துப் பெண்களுக்கு எதிராக நடிப்பதன் மூலம் இந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்தனர் என்றும் முஸ்லிம் ஆண்கள் இப்போது இந்துப் பெண்களைக் குறிவைக்க தங்கள் அடையாளங்களை மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வெறுப்புப் பேச்சு
![13].jpeg](http://samarasam.net/images/uploads/upload-1762936991895.jpeg)
போபாலின் முன்னாள் MP பிரக்யா சிங் தாக்கூர், ‘உங்கள் மகள்கள் இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்குச் சென்றால் அவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்’ என்று பெற்றோரை வலியுறுத்தினார்.
இந்த மாதத் தொடக்கத்தில் போபாலில் நடந்த ஒரு மத நிகழ்வில் பேசிய தாக்கூர், கீழ்ப்படியாத மகள்களை ஒழுங்குபடுத்துவதில் பெற்றோர்கள் எந்தவொரு முயற்சியையும் விட்டுவிடக்கூடாது என்றும், கீழ்ப்படிதலைச் செயல்படுத்த அவர்கள் கால்களை உடைக்கலாம் என்றும் கூறினார்.
மேலும் கீழ்ப்படியாமல் இருக்கும் அல்லது வீட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் மகள்கள் மீது விழிப்புடன் இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தினார். ஒழுக்கத்தை அமல்படுத்த திட்டுதல், அன்பான வழிகாட்டுதல், உடல் ரீதியான தண்டனை போன்ற முறைகளைப் பரிந்துரைத்தார். இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்குப் பெயர்போன இவரது இந்த வெறுப்புப் பேச்சும் பலரால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு வருகிறது.
தொடரும் தாக்குதல்

பீகார் மாநிலம் வைசாலியில் உள்ள ராம்பூர் கிராமத்தில் அக்டோபர் 20ஆம் தேதி ஒரு கும்பல் ஒரு பள்ளிவாசலுக்குள் நுழைந்து சேதப்படுத்தி அங்கு இருந்த குர்ஆன் உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்தினர்.