வாழ்க்கைப் பாடங்கள் 82
திருக்குர்ஆன் பேசும் பொருள்களில் இம்மை வாழ்வு, மறுமை வாழ்வு தொடர்பான அதன் விளக்கம் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
மறுமையுடன் ஒப்பிடும் போது உலக வாழ்வு எத்தகையது என்பது குறித்தும் உலக வாழ்வுடன் ஒப்பிடும்போது மறுமை வாழ்வு எப்படிப்பட்டது என்பது குறித்தும் உதாரணங்கள் மூலமும் உவமைகள் மூலமும் திருக்குர்ஆன் விளக்கும் விதம் அற்புதமானது.
மறுமை வாழ்வுக்கு முன்னால் உலக வாழ்வு எவ்வளவு அற்பமானது என்பதை விளக்கும் திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்று பின்வருமாறு:
‘உலக வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தும் மறுமைக்கு முன் மிக அற்பமானவையாகவே இருக்கும்.’ (திருக்குர்ஆன் 9:38)
இந்த வசனம் சொல்லும் செய்தி என்ன?
உலக சுகபோகங்களைப் பெற்றவர் அவற்றை எவ்வளவு பெற்றிருந்தாலும் அவை சொற்பமானவையே. அவற்றை இழந்தவர் எவ்வளவுதான் இழந்தாலும் அவை சொற்பமானவையே.
மறுபக்கம் மறுமையின் ஓர் அருளைப் பெற்றவர் அது சொற்பமானதாக இருந்தாலும் அது மிகப்பெரிய அருளாகவே இருக்கும். அவ்வாறே மறுமையில் பெறத்தக்க ஒன்றை இழந்தவர் அது அற்பமானதாக இருந்தாலும் அது பேரிழப்பாகவே இருக்கும்.
‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு (ஒரு சிறிய) இடமானது இவ்வுலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்பது நபி வாக்கு. (புகாரி)
உலக வளங்கள் எவ்வளவு பெரியவையாகத் தோன்றினாலும் அவை அற்பமானவை என்று கருதப்படுவதற்கு முக்கியக் காரணம், அவை தற்காலிகமானவை, நிலையற்றவை, மறுமையின் முடிவில்லாத வாழ்வுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானவை என்பது தான்.
உலகம் பெறுமதியற்றது என்பதை நபி(ஸல்) அவர்களும் பலமுறை விளக்கியுள்ளார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இதனை அவர்கள் ஓர் நடைமுறை உதாரணத்தின் மூலம் அற்புதமாக விளக்கினார்கள்:
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் ஓர் இறந்து கிடக்கும் ஆட்டைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதன் உரிமையாளர்கள் அதைத் தூக்கி வீசியிருந்தனர். இதனை அவதானித்த நபிகளார், ‘எனது ஆத்மா யார் கையில் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக இது(இந்த ஆடு) அதன் உரிமையாளருக்குப் பெறுமானமற்றதாக இருப்பதை விட அல்லாஹ்வுடைய பார்வை யில் இந்த உலகம் பெறுமானமற்றதாகும்.’ என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)
மற்றுமொரு நபிமொழியும் மிகவும் பிரபலமானது: ‘இவ்வுலகம் அல்லாஹ்விடத்தில் ஈயின் இறக்கை அளவாவது பெறுமதியானதாக இருக்குமென்றால் அவனை நிராகரிக்கும் மனிதனுக்கு அவன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டான்’. (திர்மிதி)
இவ்வுலகில் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்தவர்களும் மறுமைக்கு முன்னால் தாம் இவ்வுலகில் சொற்ப காலமே வாழ்ந்ததாக உணர்வார்கள் என்பதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது:
‘இவர்கள் அதனைக் கண்டு கொள்ளும் நாளில், ஒரு பிற்பகல் அல்லது முற்பகல் வரையில் மட்டுமே (இவ்வுலகில் அல்லது மரண நிலையில்) தாங்கள் தங்கியிருந்தது போன்றுஅவர்களுக்குத் தோன்றும்’ (திருக்குர்ஆன் 79:46)
‘ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?’ என்று இறைவன் கேட்பான். ‘ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!’ என்று அவர்கள் கூறுவார்கள்.
‘பிறகு, அல்லாஹ் (அவர்களிடம்) ‘நீங்கள் பூமியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தீர்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், ‘ஒரு நாள் அல்லது ஒரு நாளின் கொஞ்ச நேரம் அங்கு நாங்கள் தங்கியிருந்தோம்; கணக்கிடுவோரிடம் கேட்பாயாக!’ என்று கூறுவார்கள்.அல்லாஹ் கூறுவான்: ‘நீங்கள் சிறிது காலமே தங்கியிருந்தீர்கள்! (இதனை அப்போது) நீங்கள் அறிந்திருந்தால் எத்தனை நன்றாய் இருந்திருக்கும்!’ (திருக்குர்ஆன் 23:112-114).
எனவே புத்திசாலி யாரெனில் இவ்வுலகினதும் இதன் சுகபோகங்களினதும் யதார்த்தத்தைப் புரிந்து நிலையான நாளை மறுமையின் வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்படுபவரே!