மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

மேடை

அக்கரைப் பச்சை 28
ஜரினா ஜமால், நவம்பர் 1-15, 2025


‘அக்கா! என்னுடன் வந்து விடுகிறார்களா?’ ஆமினா அக்காவிடம் சாலிஹா கேட்டாள்.

‘அந்த ஹாஸ்டலுக்கா?’

‘ஆமாக்கா!’

‘சாலிஹா! நீ ஒருத்தி குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது போதாதா? நானும் வந்தால் உலகம் என்ன சொல்லும். நான் இரண்டு தடவை மெட்ராஸ் போய் எல்லாவற்றையும் இழந்து வந்தேன். அதனால் அந்த ஊர் வரவே பயமா இருக்கு’

பீவியம்மா சொன்னது சாலிஹாவுக்கு நினைவில் ஓடியது. ‘தல மகதானே! அம்மாவைப் பாக்கப் போவோம். ரெண்டு நாள் இருந்து வருவோம்ன்னு நினைக்காளா? வந்தாலும் வீடு வீடுன்னு அடிச்சிக்கிறா. வீட்ட யாரும் தூக்கிக்கொண்டா போகப்போறாங்க!’

தானாகச் சிரித்தாள். ‘என்ன சாலிஹா சிரிக்கிறே?’

‘ஒன்னுமில்லைக்கா! நீங்க இப்படியே பழகிட்டீங்க! ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும். இனி வரும் காலத்திலாவது கொஞ்சம் நிம்மதியா கழிக்கலாமே?’

‘இல்ல சாலிஹா! பேரனை விட்டு வர முடியாது. நானில்லாவிட்டால் ரொம்பத் தேடுவான்’

‘இப்போ இருக்கலையா?’

‘இந்தப் பிரிவைத்தாங்க முடியும். நீண்ட நாள் பிரிவை எப்படித் தாங்க முடியும்?’

‘அக்கா! நீ உயிரையே வச்சிருந்த மச்சான் உன்னை விட்டுப் போய் எத்தனையோ வருசமாச்சு. உன் மீது பாசமாய் இருந்த உன் மகன் உன்னைப் பிரிஞ்சி போயாச்சி. இந்தப் பிரிவுகளையெல்லாம் தாங்காமலா போய்ட்ட? அவர்களை விடவா பேரன் பாசம் பெரிசு?’

‘சாலிஹா! அதெல்லாம் சொன்னால் உனக்குப் புரியாது!’

‘நான் பிள்ளை பெறாததால், உனக்கு அந்தக் கஷ்டம் புரியாது என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடுவீர்கள். எங்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். பிள்ளை இல்லாதவர்களுக்குத் தான் அதன் வேதனை அதிகம் புரியும்’

‘அதுக்குச் சொல்லல சாலிஹா!’ தன் தவறை உணர்ந்தாள் ஆமினா.

‘உன் மச்சான் போன பிறகு பேரன் தான் சகலமும் என்று ஆகிட்டேன்.அவனை ஒரு நாள் பார்க்கா விட்டாலும் உயிர் கிடந்து அடித்துக் கொள்கிறது. சில நேரங்களில் மருமகள் பேரப்பிள்ளையிடம் ஒட்ட விட மாட்டாள். ஆனாலும் அவனைப் பார்த்தாலே மனம் லேசாகி விடுகிறது.

மச்சான் பெயரை வேறு வைத்து விட்டேனா இன்னும் ஒருபடி நெருக்கம் அதிகமாயிட்டு’ சொல்லிவிட்டுச் சிரித்த அக்காவைப் பார்த்தாள் சாலிஹா.

‘பிள்ளையை ஒட்ட விடமாட்டேங்குறான்னு எப்படிக்கா சொல்லுறீங்க?’

‘பிள்ளை அழுவுறான்னு தொட்டிலை ஆட்டப் போனால், எனக்கு முன்னே அடுப்படியிலிருந்து வேகமாக வந்து ஆட்டுவா. நீ அடுப்பு வேலையப் பாரும்மா! நான் ஆட்டுறேன்னா, வேண்டாம் மாமி நா ஆட்டிக்கிறேம்பா, சோறு ஊட்டி விடுறேன்னு சொன்னால், அதையும் கொடுக்க விடமாட்டா! கொஞ்ச நேரம் புள்ள பக்கத் தில் வந்து விளையாடினாலும் தூங்க வைக்கனும்னு தூக்கிப் போயிடுவா’.

‘என் மகனிடம் என்னத்தத் தான் சொல்லுவாளோ? ‘அம்மா! அவ புள்ள, அவ ஆட்டுறா, ஊட்டுறா என்னமும் செய்யுறா நீங்க அந்த விசயத்திற்கு போகாதீங்க!’ ம்பான் மகன்.

‘அதாக்கா! ஒரே எடத்துல இருந்தா மதிப்புக் கம்மிதான். பெரியவன்ட்ட போய்க் கொஞ்ச நாள், சின்னவன்ட்ட கொஞ்ச நாள், பிறகு இங்க கொஞ்ச நாள்னு இருந்தா எல்லோரும் மதிப்பாங்க!’

‘அய்யோ! அங்க போறத விட அப்படி ஒரு ஒறவு இருக்குங்கறதையே நினைக்காம இருப்பதே நல்லது. ஆனால் பாழாப்போன மனசு கேக்குதா?’

‘போங்கக்கா! போனால் தான் கணவனைப் பெற்றவள் வந்திருக்கான்னு கொஞ்சம் பாசமாவது வரும்’

‘பாசமா?  அவகிட்ட  எதிர்பார்க்க முடியாது’

‘அப்ப, பயமாவது வரும்ல?’

‘பயமா? அவளுக்கா? என்னய பார்த்தாலே எகத்தாளமாக பேசுவா’

‘பேசுனா பேசிட்டு போகட்டுமே! அவ தோளில் உள்ள மலக்குதானே கணக்கெழுதுவாங்க. நமக்கா நஷ்டம்? அக்கா! போகாத உறவும் பாழ்! கேட்காத கடனும் பாழ்,’ என்பார்கள். நானும் வருகிறேன். போய் வருவோமா?’

சாலிஹாவின் குரலில் இருந்த குழைவு, அக்கா மகனைத் தேடுகிறாள் என்று சொல்லாமல் சொல்லியது. அண்ணனுக்கு முன்னால்  ஆமினாவுக்குத்தான்  முதன் முதலில் திருமணம் நடந்தது. அதன் பிறகுதான் அண்ணன் பாதுஷாவுக்குத் திருமணம். அதுபோலவே ஆமினாவுக்குத் தான் முதலில் குழந்தை பிறந்தது. அதுவும் தலைக் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறந்தது வீட்டில் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி.

சாலிஹாவுக்குச் சொல்லவே வேண்டாம். எப்பொழுது பார்த்தாலும் தொட்டிலை ஆட்டிக் கொண்டும், அக்காவின் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டும், அவனுக்கு எல்லா விதமான வேலைகளையும், கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.

குடும்பத்தில் எப்போதும் ஒரு வழக்கம். அக்காவிற்குக்  கல்யாணம்  ஆனால் தங்கைகள், அவர்களுக்கு வேலை செய்வதும், குழந்தைகள் பிறந்தால் மூத்த சகோதரியின் குழந்தைகளைத் தங்கைகள் தூக்கி வளர்ப்பதும், அவர்களுக்குப் பணிவிடை செய்வதும் வழக்கம். ஆனால் அந்தத் தங்கைகளுக்குத் திருமணம் முடிந்து குழந்தை பிறந்தால் அவர்கள் குழந்தையை வளர்க்கவும் அவர்களுக்கு வேலை செய்யவும் அக்காக்கள் இருக்க மாட்டார்கள். அவரவர் வீடுகளில் இருப்பார்கள். இது அநேகர் வீடுகளில் நடக்கும் விஷயம். அதற்கு சாலிஹாவும் விதிவிலக்கல்ல!

அவளுக்கும் திருமணம் முடிந்து பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருக்கவும், ஆமினாவின் தலைமகனை நன்றாகக் கொஞ்சி வளர்த்தாள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தான். சாச்சி இல்லாமல் இருக்க மாட்டான். அவளைப் பார்த்ததும் தூக்கச் சொல்லுவான். அவள்தான் சோறு ஊட்ட வேண்டும். சாலிஹா தான் அவனுக்கு ஆடை அணிவிக்க வேண்டும். தூங்க வைக்க வேண்டும். பிறகு சாலிஹாவும் திருமணம் முடிந்து மாமியார் வீடு போய் விட்டாள். ஆனாலும் அக்கா மகனின் நினைவு அவளை விட்டு அகலவே இல்லை. தனக்குக் குழந்தை இல்லாத குறையை ஆமினாக்கா மகன் தீர்த்து வைத்தான்.

சல்மான் ஊருக்கு வரும்போதெல்லாம், அம்மா வீட்டிற்கு அவனோடு வரும்போது ஆமினா அக்காவின் மகனுக்காக விளையாட்டுச் சாமான்கள், சட்டை துணிமணிகள் என்று வாங்கி வந்து அவனுக்குப் போட்டு அழகு பார்ப்பாள்.

சல்மானோடு வெளியில் செல்லும் போதும், கடைத்தெரு என்றும், உறவினர் வீடு என்றும் போகும்போது பிள்ளையைத் தூக்கிப் போவதற்கு மிகவும் ஆசைப்பட்டு அக்காவிடம் கேட்பாள். ஆனால் ஆமினா பிள்ளைகளை வெளியில் தூக்கிச் செல்ல அனுமதிக்க மாட்டாள். அதைவிட மச்சான் மிகவும் அதிகாரம் பண்ணுவார். ‘பிள்ளையை வெளியே கொண்டு போகாதீங்க..’ என்பார்.

பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இரண்டும் ஆண் குழந்தைகள்தான். சாலிஹாவுக்கு முதல் மகனின் மீது இருந்த பாசம் மற்றப் பிள்ளைகள் மீது இல்லை.
சாலிஹா, சென்னைக்கு சல்மானோடு போன பிறகு குடும்பத்தில் தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. எப்போதாவது விடுமுறை நாள்கள் அல்லாத நாள்களில் தான் வருவாள். ஆண்டுகள் உருண்டோடியது. ஆமினா அக்காவின் மூத்த மகன் வாலிபப் பருவத்தை அடைந்தான். ஒட்டுதலும் கொஞ்சம் குறைந்தது. கடிதங்கள் எல்லாம் எழுதுவான். சாச்சி உன்னைத் தேடுகிறது. இதை வாங்கி வா! அதை வாங்கி வா! என்றெல்லாம் எழுதுவான். பிறகு இன்னும் வயது கூடவும் அதுவும் குறைந்தது. நின்று போனது.

திடீரென்று அக்காவும் மச்சானும் வந்து அழைப்பிதழ் வைத்தார்கள். தலைமகனுக்குத் திருமணம் என்று. சாலிஹாவுக்கு வியப்பாக இருந்தது.

‘ஆமினாக்கா உன் பிள்ளை போலன்னு சொன்னீங்களே? நீதான் அவனுக்கு உனக்குப் பிடித்த மாதிரி பெண் பார்க்கவேண்டும் என்று சொன்னீங்களே? இப்போ கல்யாணக் கடுதாசி கொண்டு வந்துட்டீங்களா?’ என்று குரல் விம்மக் கேட்டாள்.

ஆமினா அக்கா ஒப்பாரி வைத்தாள். ‘என்ன செய்ய சாலிஹா என் தலையெழுத்து அவனுக்குப் படிப்பு ஒழுங்கா வரவில்லை. பிளஸ் 2 முடித்த உடனே அவனை வேலைக்கு அனுப்பி வைத்தேன். அங்கு வேலை செய்யற இடத்துல ஒரு மலையாளக்காரியத் தான் கட்டுவேன் என்று ஒத்தக்காலில் நின்று விட்டான். மச்சான் மனமுடைந்து விட்டாங்க. ஆனாலும் அவருடைய கோபம், ஆங்காரம் எல்லாம் போய்விட்டது. எல்லாருக்கும் புத்தி சொல்லக் கூடிய அவர்கள் வாழ்க்கையில் இப்படி ஆகிவிட்டது என்று நொந்து நூலாப் போய் இருக்கிறார்கள்.

நீ அவங்க முன்னாடி எதையும் கேட்டுராத சாலிஹா!’ ஆமினாக்கா மூக்கைச் சிந்தினாள்.பொங்கி வருகின்ற கண்ணீரை அடக்கிக் கொண்டாள் சாலிஹா. தனக்கு ஒரு பிள்ளை இருந்தால் இப்படிப் பிறர் பிள்ளை மேல் நாம் ஆதிக்கம் செலுத்த நினைப்போமா? என்ற உணர்வு அவளுக்கு மேலோங்கி நின்றது.

மனதைத் தேற்றிக்கொண்டு சல்மானுடன் சேர்ந்து கல்யாணத்திற்குப் போய் வந்தாள். கண்ணீர் கலங்கி நிற்கும் போதெல்லாம் சல்மான் ஆறுதல் கூறுவான். ‘உனக்கு நான் எனக்கு நீ என்பது முடிவாகி விட்ட ஒன்று. பிள்ளை இல்லையே என்று நீ அழுது நிற்பதைப் பார்க்கும் பொழுது எனக்குத்தான் மனம் சங்கடமாக இருக்கிறது சாலிஹா!’

ஒரு நாள் இருவரும் மகிழ்வாக இருக்கின்ற சூழ்நிலையில் சல்மான் கேட்டான். ‘நான் ஒன்று சொல்வேன்! நீ கோபப்பட மாட்டாயே?’

‘நீங்க கோபப்படுவது போல் எப்போது பேசி இருக்கீங்க? நீங்க என்ன சொன்னாலும் நான் கோபப்பட மாட்டேன் சொல்லுங்கள்’ என்றாள்.

‘சாலிஹா! நான் உனக்கு வார்த்தை சொல்லி விடுகிறேன். நீ சில மாதங்கள் கழித்து வேறொரு திருமணம் முடித்துக் கொள்.அப்பொழுது அல்லாஹ்வின் கிருபையினால் உனக்குக் குழந்தை பிறக்கலாம் ‘ என்றான்.

மண்டையில் அடித்தது போலிருந்தது சாலிஹாவுக்கு. அதன் பிறகு இரண்டு, மூன்று நாள்கள் சல்மானிடம் ஊடிக்கொண்டாள். அதன்பிறகு ஒருநாள் சல்மானிடம் அவளே கேட்டாள். ‘நான் ஒன்னு சொல்றேன் கேட்கிறீர்களா?’

‘சொல்லம்மா என் செல்லமே?’ பேச வாய் வரவில்லை சாலிஹாவுக்கு!

சல்மானைப் பற்றி சாலிஹா நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாள். கொஞ்சலும், கெஞ்சலும் அவனிடம் சாலிஹா கண்ட பாக்கியம். சொன்னால் சரி என்று சொல்ல மாட்டான் என்று தெரியும் ஆனாலும் சாலிஹாவுக்குப் பயமாக இருந்தது.

அவளைச் சுற்றிச் சுற்றி வந்து ‘மனதில் உள்ளதைச் சொல்லிவிடு! சொல்லிவிடு!’ என்று அவளைப் பாடாய் படுத்திய போது சாலிஹா தயங்கித் தயங்கிக் கூறினாள்.

‘உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணலாம் என்று நினைத்திருக்கிறேன். நீங்க சம்மதம் தந்தால் போதும். எனக்கு உங்களுடைய வாரிசு வேண்டும். நான் அதை மடியில் வைத்துக் கொள்ள வேண்டும்’

அவன் பதில் இப்படி இருக்கும் என்று சாலிஹா நினைத்துக்கூட பார்க்கவில்லை அதிர்ந்து விட்டாள் சாலிஹா!

தொடரும்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்