மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

நட்சத்திர முற்றம்

அண்டை அயலவரை அரவணைப்போம்
அஷ்ஷெய்க் A.C. அகார் முஹம்மது, நவம்பர் 16-30, 2025


ஒரு கண்ணோட்டத்தில் மார்க்கம் என்பது நல்லுறவைப் பேணுவதைக் குறிக்கும்  எனலாம்.  ஒரு  பக்கம் படைப்பாளனுடன் நல்லுறவு பாராட்ட வேண்டும்; மறுபக்கம் படைப்புகளுடன் நல்லுறவு பாராட்ட வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொல்வ தõயின்  மார்க்கம்  என்பது  இரு பெரும் கடமைகளை உள்ளடக்கியது: ஹுகூகுல்லாஹ் (இறைவனுக்கு உரிய கடமைகள்) ஹுகூகுல் இபாத் (மனிதர்களுக்குரிய கடமைகள்). இவ்விரு வகையான கடமைகளும் நிறைவேற்றப்படும்போதே மார்க்கம் முழுமை பெறுகின்றது.

இந்த உண்மையை திருக்குர்ஆன் மற்றொரு விதமாக விளக்குகிறது:

‘எவர்கள் இறையச்சம் கொள்கின்றார்களோ மேலும், நன்னடத்தையை மேற்கொள்கின்றார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்.’ (திருக் குர்ஆன் 16:128)

இங்கு இறையச்சம்(தக்வா) என்பது இறைவனை அஞ்சிப் பயப்படுதல், அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பதைக் குறிக்கும். நன்னடத்தை (இஹ்ஸான்) என்பது படைப்புகளுக்கு உபகாரம் செய்தல், நன்மை செய்வதைக் குறிக்கும். இதுவே மார்க்கத்தின் இரு முகங்கள் ஆகும்.

ஆரம்ப கால அறிஞர்கள் இதே விஷயத்தைப் பின்வருமாறு அழகாக விளக்கியுள்ளனர்:

‘இறைவனுடன் உண்மையுடன் நடந்து கொள்ளுதல்; படைப்புகளுடன் நற்பண்புடன் பழகுதல். இதுவே மார்க்கமாகும்’

இவ்வாறு, இஸ்லாம் மனித உறவுகளைப் பேணுவதைப் பெரிதும் வலியுறுத்துகிறது என்பது தெளிவு. மனிதர்களுடனான உறவைப் பேணுவதில், அண்டை அயலவர் உறவைப் பேணுதல் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இது குறித்து இஸ்லாம் ‘அயலவர் உரிமைகள்’ எனும் தலைப்பில் விரிவாகப் பேசுகிறது.

நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் அண்டை அயலவர் உரிமையை வலியுறுத்தும் வகையில் கூறியுள்ள இரண்டு நபிமொழிகள் பிரபலமானவை:

‘ஜிப்ரீல் (அலை) என்னிடம் தொடர்ந்து அண்டை அயலவர் குறித்து அறிவுறுத்தி வந்தார்கள். அவர் அயலவரையும் வாரிசுச் சொத்தில் பங்குபெறச் செய்துவிடுவார் என்று கூட நான் நினைத்தேன்’ (புகாரி, முஸ்லிம்)

‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர் தன் அயலவரை மதிக்கட்டும்’ (புகாரி)

அண்டை அயலவரை இம்சிப்பவர்களை நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்:

‘ஒருவரின் தீமையிலிருந்து அவரது அயலவர் பாதுகாப்பாக இல்லாதபோது அவர் சுவனம் நுழையமாட்டார்’ (முஸ்லிம்)

இஸ்லாமிய நோக்கில் அயலவர் என்றால் நம்மைச் சுற்றியிருக்கும் எவரும் அடங்குவர். அவர்கள் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும், முஸ்லிம் ஆனாலும் அல்லாதவராக இருந்தாலும் அயலவராகவே கருதப்படுவர்.

ஆரம்ப கால அறிஞர்கள் சிலர் கருத்துப்படி, ஒருவரைச் சுற்றி நாற்பது வீடுகள் வரையிலான எல்லையில் வசிப்பவர்கள் அயலவராகக் கருதப்படலாம். மேலும், உங்கள் ‘அதான்’ அழைப்பைக் கேட்கும் தூரத்தில் உள்ளவர்களும், அல்லது ‘பஜ்ர்’ தொழுகையில் உங்களுடன் பங்கேற்பவர்களும் அயல வர்களாகக் கருதப்படலாம்.

இவர்களோடு பள்ளித் தோழர்கள், ஒரே வகுப்பில் படிப்பவர்கள், ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள் முதலானோரும் அயலவர்களாகப் பார்க்கப்பட வேண்டியவர்களே.

இஸ்லாமிய நோக்கில் மூன்று வகையான அயலவர்கள் உள்ளனர்.

1. முஸ்லிமாகவும் உறவினராகவும் இருக்கும் அயலவர்

இவருக்கு மூன்று உரிமைகள் உள்ளன: முஸ்லிம் என்ற அடிப்படையிலான உரிமை, உறவினர் என்ற அடிப்படையிலான உரிமை, அயலவர் என்ற அடிப்படையிலான உரிமை

2. முஸ்லிமாக இருக்கும் அயலவர்

இவருக்கு இரண்டு உரிமைகள் உள்ளன: முஸ்லிம் என்ற அடிப்படையிலான உரிமை, அயலவர் என்ற அடிப்படையிலான உரிமை

3. முஸ்லிம் அல்லாத அயலவர்

இவருக்கு அயலவர் என்ற அடிப்படையிலான உரிமைகள் உண்டு.

இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அயலவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அயலவருடன் மரியாதையுடனும் அன்புடனும் பழகுதல், அவர்களின் தேவைகள், நிலைமைகள் குறித்து கவனித்து உதவி செய்தல், பரிசளித்தல், துன்பத்தில் பங்கேற்றல், ஆறுதல் கூறுதல், அவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், அவர்களால் ஏற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் தாங்கிக்கொள்வது இவையெல்லாம் அயலவருடனான நல்லுற வைப் பேணுவதற்கான வழிகளாகும்.

எனவே, அண்டை அயலவரின் உரிமைகளை மதித்து நடப்பது மனிதநேயத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, அது ஆரோக்கியமான இறைநம்பிக்கையின் (ஈமானின்)அடையாளமும் ஆகும் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்