இஸ்லாமிய வெறுப்புக் குற்றங்கள்
முஸ்லிம் வெறுப்பு

30-10-2025 பீகாரின் மதுபனி மாவட்டத்தில் ஜன் சுராஜ் கட்சி (ஜேஎஸ்பி) நிறுவனர் பிரசாந்த் கிஷோரும் அவரது கட்சியின் முஸ்லிம் வேட்பாளர் பர்வேஸ் ஆலம் ஆகியோர் பெனிபட்டி சட்டமன்றத் தொகுதியில் பரப்புரையைத் தொடர்வதற்கு முன்பு கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்த சிறிது நேரத்திலேயே கபிலேஷ்வர் நாத் மகாதேவ் ÷காயிலின் பூசாரிகள் கோயிலைச் சுத்தம் செய்தனர்.
கிஷோருடன் ஒரு முஸ்லிம் வேட்பாளர் வந்திருப்பதைப் பின்னர் உணர்ந்ததாக பூசாரி குமார் ‘அவர் பாரம்பரிய மிதிலா உடை அணிந்திருந்ததால் முதலில் அவரை அடையாளம் காண முடியவில்லை’ என்று கூறினார்.
சில உள்ளூர்வாசிகள் கோயிலின் உள் கருவறைக்குள் ஒரு முஸ்லிம் நுழைவதை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. இது கோயில் பழக்கவழக்கங்களுக்கு எதிரானது என்று அவர்கள் கூறினர். கோயில் நிர்வாகிகள் இன்னும் எந்த முறையான அறிக்கையையும் வெளியிடவில்லை, அதே நேரத்தில் ஜன் சுராஜ் கட்சி இதுவரை சர்ச்சைக்குப் பதிலளிக்கவில்லை.
வெறுப்புத் திரைப்படம்

வரவிருக்கும் ‘தி தாஜ் ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஷகீல் அப்பாஸ் தாக்கல் செய்த மனுவில் ஒன்றிய அரசு, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் படத்தின் வெளியீட்டிற்கு முன் சான்றிதழை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளார். மேலும் இந்தப் படம் வரலாற்று உண்மைகளைத் திரிப்பதாகவும், சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
‘தி தாஜ் ஸ்டோரி’ தாஜ்மஹால் பற்றி தவறான பொய்த் தகவல்களைப் பரப்புவதாகவும், திரைப்படத் தயாரிப்பாளர்கள் பிளவுபடுத்தும் அரசியல் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தொடரும் தாக்குதல்

மகாராஷ்டிராவின் நாசிக்கில் செப்டம்பர் 6ஆம் தேதி பிராணியன் அறக்கட்டளை, பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ஒரு முஸ்லிம் நபரைக் கால்நடைகளை ஏற்றிச் சென்றதாகக் குற்றம் சாட்டி கட்டி வைத்துத் தாக்கினர். மேலும் அந்தக் கும்பல் அவரைத் தாக்கி விசாரித்து வீடியோ பதிவு செய்தனர்.
வகுப்பறையில் வெறுப்பு

மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் ஷாபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தியோஹரி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜபூர் தத்வி மாணவர்களை வகுப்பின் போது தொழுகை போன்ற ஆசனங்களைச் செய்ய வைத்ததாகக் குற்றம் சாட்டி இடைநீக்கம் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தால் உள்ளூர் குழுக்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
புகார்களைப் பெற்ற பிறகு பள்ளியின் பொறுப்பு முதல்வர் மாவட்ட கல்வி அதிகாரிக்குத் தகவல் தெரிவித்தார். அவர் விசாரணைக்காக ஒரு குழுவை அனுப்பினார். இந்த விவகாரம் ஆராயப்படும் வரை அமைதி, ஒழுங்கைப் பேணுவதற்காக விசாரணை நிலுவையில் உள்ள ஆசிரியரை இடைநீக்கம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத நடைமுறைகள் வகுப்பறை நடவடிக்கைகளுடன் கலக்கப்படுவதாகக் கூறி இந்து ஜாக்ரன் மஞ்ச் உறுப்பினர்களும் கிராமத்தில் போராட்டங்களை நடத்தினர்.
பதற்றத்திற்கான விதை

உத்தரப்பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள பவானி கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தன்கர்பூர் கிராமத்தில் அக்டோபர் 16ஆம் தேதி டோமரியா கஞ்சின் முன்னாள் பாஜக MLA ராகவேந்திர பிரதாப் சிங் பொதுக் கூட்டத்தில் இந்து ஆண்களிடம் ‘முஸ்லிம் பெண்களை அழைத்து வாருங்கள்’ என்று வற்புறுத்தியதாகவும், அவ்வாறு செய்பவர்களுக்கு உணவு, தங்குமிடம், வேலைகள் வெகுமதியாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பரவலான கண்டனங்கள் எழுந்த பின்பும் கூட சிங் தனது கருத்துகளுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. சட்ட நடவடிக்கை குறித்து சித்தார்த் நகர் காவல்துறை இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
வாடகை வீடு மறுப்பு

காஷ்மீர் இளைஞர்களின் குழுவான க்ளான்ஸ் காஷ்மீர் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கவிருந்த ஒரு கண்காட்சிக்காக 22ஆம் தேதி கான்பூருக்கு வந்திருந்தது. அவர்கள் தங்கி உணவைச் சமைத்துக் கொள்ள ஒரு சிறிய பிளாட் அல்லது தங்குவதற்கு ஓர் அறையைத் தேடினார்கள். ஆனால் அவர்களுக்குக் கிடைத் தது இஸ்லாமிய வெறுப்பும் ஏமாற்றமுமே!
‘இரண்டு நாள்கள், நான் தொடர்ந்து தேடினேன். ஆனால் எங்களுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை’ என்று குழுவின் உறுப்பினர் ஒரு பதிவில் எழுதினார். எனது தேடலின்போது, பல விரும்பத் தகாத கருத்துகளைக் கேட்டேன். ஒருவர் அவர்களிடம் வெளிப்படையாக ‘முஸ்லிம்கள், அஹிர்களுக்கு (அங்குள்ள ஒரு சாதியக் குழு) நாங்கள் வீட்டை வாடகைக்கு விடுவது ஒருபுறம் இருக்கட்டும் வீட்டைக் கூடக் காட்ட மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.
வெறுப்புப் படுகொலை

தீபாவளி இரவு அன்று டெல்லியின் நந்த் நாக்ரி பகுதியில் சல்மான் என்ற 22 வயது இளைஞர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ககன் சினிமா மேம்பாலம் அருகே சல்மானும் அவரது நண்பர்களும் ஒரு சிறிய வீடியோவைப் பதிவு செய்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.
இரண்டு குழுக்களுக்கு இடையேயான தகராறாக இந்தச் சண்டை தொடங்கியது. ஆனால் விரைவில் வன்முறையாக மாறியது என்று போலீசார் தெரிவித்தனர். ஸ்கிராப் வியாபாரியாகப் பணிபுரிந்த சல்மான் பலத்த காயமடைந்து ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாள்களுக்குப் பின் இறந்தார். அவரது மரணம் உள்ளூர் முஸ்லிம் சமுதாயத்தில் கோபத்தையும் பயத்தையும் தூண்டியுள்ளது.
பாங்கொலிக்குத் தடை

உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தின் கும்தால் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலின் இமாம் மௌலானா ரஃபீக் கான் மீது ஒலிபெருக்கியைப் பயன்படுத்தும் போது ஒலி வரம்புகளை மீறியதாகக் கூறி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, குடியிருப்பாளர்களிடமிருந்து புகார்களைப் பெற்ற பிறகு ஒலிபெருக்கியின் அளவை அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் வைத்திருக்குமாறு கானுக்கு பலமுறை எச்சரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கூறப்படும் மீறலின் குறிப்பிட்ட டெசிபல் அளவு குறிப்பிடப்படவில்லை.
வழக்கமான ரோந்துப் பணியின்போது பள்ளிவாசலின் ஒலிபெருக்கி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதைக் கண்டதாகக் கூறிய சப் இன்ஸ்பெக்டர் சோனு சவுத்ரியின் புகாரின் அடிப்படையில் FIR பதிவு செய்யப்பட்டது.
வெறுப்புச் சொல்லாடல்

அருணாச்சலப் பிரதேசத்தின் பபும் பரே மாவட்டத்தில் உள்ள டோய் முக் என்னும் ஊரில் ஒரு முஸ்லிம் பழ வியாபாரியைத் துன்புறுத்தி அவரது கடையை மூடும்படி தானா தாமர் தாராவும் அவரது கூட்டாளிகளும் கட்டாயப்படுத் தினர். அவரது பாஸில் (அனுமதி சீட்டு); தவறான பெயரைக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, ‘நீ வங்காள தேசியா? உன் NRC எங்கே?’ என்பன போன்ற வார்த்தைகளால் அவரைக் கேலி செய்தனர்.
குறிவைக்கப்படும் வழிபாட்டுத்தலங்கள்

வாரணாசியின் தால் மண்டி பகுதியில் ஆறு பள்ளிவாசல்களுக்கு மாநகராட்சி வரி அறிவிப்புகளை வெளியிட்டு 15 நாள் களுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தா விட்டால் அவை பறிமுதல் செய்யப்படலாம் என்று எச்சரித்துள்ளது. தண்ணீர், கழிவு நீர் வரிகளுக்கான மொத்த நிலு வைத் தொகை கிட்டத்தட்ட <1.78 கோடியை எட்டியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை நியாயமற்ற முறையில் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைப்பதாக உள்ளது.