மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

தனித்திரு
- அஷ்ஷெய்க் A.C. அகார் முஹம்மது, 1-15 ஏப்ரல், 2024




ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, வளர்த்தெடுக்கத் துணை புரிகின்ற நான்கு வழிகள் பசித்திருத்தல், விழித்திருத்தல், தனித்திருத்தல், மௌனித்திருத்தல் ஆகும்.

மனிதன் ஒரு சமூகப் பிராணி. அவனது உலகியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவன் அடுத்தவர்களோடு கூடியும் சேர்ந்தும் வாழ வேண்டி இருக்கின்றது. உறவுகள் இல்லாமல் அவனால் வாழ முடியாது. ஆனாலும் அவனது ஆன்மாவின் மேம்பாட்டிற்கு அவனுக்குத் தனிமை தேவைப்படுகின்றது.

படைப்புகளுடனான உறவிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு படைத்தவனுடன் உறவாடுவதிலும் உரையாடுவதிலும் தான் ஆன்மாவுக்கு விடிவும் விமோசனமும் இருக்கின்றது.

‘இந்த ஒரு பின்னணியில் தான் தஸ்கியத்துன் நப்ஸுக்கான சிறந்ததொரு வழியாகத் தனித்திருத்தல் கருதப்படுகிறது. அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனையுடன் கூடிய ஒரு தனிமைப்படுதலைப் போல உள்ளத்துக்குப் பயனளிக்கும் மற்றுமொன்று இல்லை’ எனச் சொல்வார்கள் இப்னு அத்தாவுல்லாஹ் அஸ்தக்கந்தரி(ரஹ்) அவர்கள்.

தனித்திருத்தல் மூலம் ஆன்மிக வாழ்க்கைக்குக் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஆரம்பக் கால அறிஞர்கள் நிறையவே பேசி இருக்கிறார்கள்.

‘யார் அல்லாஹ் தனது உள்ளத்தைத் திறந்து விட வேண்டும், தனக்கு அறிவு ஞானம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் உணவைக் குறைத்து அறிவீனர்களுடனான உறவைத் துண்டித்து, தனிமையை கைக் கொள்ளட்டும்’ என்று சொல்கிறார்கள் இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள்.

‘புலன்களை அடக்கினால் தான் உள்ளம் சீர் பெரும். கண்கள், காதுகள், நாவு முதலான புலன்களைக் கட்டுப்படுத்தும் போதே உள்ளம் சீர் பெற முடியும். புலன்களைக் கட்டுப்படுத்த சிறந்த வழி உலக மோகங்களிலிருந்து விடுபட்டு தனிமையை நாடுவது’ என்று விளக்குகின்றார்கள் இமாம் அபூஹாமித் அல்கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள்.

கல்வத் எனும் தனித்திருத்தலினால் விளையும் பல நன்மைகளை இமாம் அபுல் ஹசன் அஸ்ஸாஹிரி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

‘திரை நீங்குதல், அருள் இறங்குதல், நாவினாலும் பார்வையாலும் விளைகின்ற விபரீதங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுதல், முகஸ்துதி முதலான பாவங்களிலிருந்து உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்ள, பற்றற்ற வாழ்வு, உள்ளதைக் கொண்டு திருப்தி அடையும் பக்குவம், கெட்டவர்களின் சக வாசத்தைத் தவிர்ப்பதற்கான சந்தர்ப்பம், வணக்க வழிபாடுகளிலும் திக்ரிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு, இபாதத்துகளின் சுவையை அனுபவிக்கின்ற சந்தர்ப்பம், உடலும் உள்ளமும் ஓய்வையும் சுகத்தையும் பெற்றுக்கொள்வது, வீணான சர்ச்சைகளில் இருந்தும் தீங்குகளில் இருந்தும் உள்ளம் பாதுகாக்கப்படுவது, சிந்தித்தல், படிப்பினை பெறல் என்ற இபாதத்துகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளிட்டவை அவர்கள் குறிப்பிடுகின்ற கல்வத் (தனிமை)யினால் விழையும் நன்மைகள்.

‘உண்மையான இன்பம், உற்சாகம், சுறுசுறுப்பு, பலம் ஆகியன கல்வத் (தனிமை)யினால் கிடைக்கும் நன்மைகள்’ என்று சொல்கிறார்கள் அபூதாலிப் அல் மக்கி(ரஹ்) அவர்கள்.

‘நான் அடைந்துள்ள ஆரோக்கியமான ஆன்மிக நிலைக்குத் தனது 30 ஆண்டு காலத் தனிமையே காரணம்’ என ஒரு சந்தர்ப்பத்திலே சொன்னார்கள் ஜூனைதுல் பஹ்தாதி(ரஹ்) அவர்கள். நபியவர்கள்
கடைப்பிடித்து வந்த இஃதிகாஃபின் அடிப் படையான நோக்கமே தனித்திருந்து அமல் களில் ஈடுபடுவதுதான்.

‘மனிதத் தொடர்பைத் துண்டித்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவனை திக்ரு செய்யுமாறு நபி(ஸல்) அவர்களைப் பார்த்துப் பணிக்கிறது’ திருக்குர்ஆன்.

‘மறுமையிலே மஹ்ஷரிலே நிழலே இல்லாத அந்த நாளிலே அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தாரிலே தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்த வரும் இருப்பார்’ என்ற நபிகளாரின் சுபச் செய்தியும் தனிமையின் முக்கியத்துவத்தை நமக்கு அற்புதமாக எடுத்துச் சொல்கின்றது.

நிலையான தனிமை வரவேற்கத்தக்கது அல்ல. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது தனிமை நாடுவதே பொருத்தமானது ஆகும். ரமளானில் இறுதிப் பத்தில் இஃதிகாஃபின் பத்து நாள்களும் முடிந்தவரை தனித்திருந்து, விழித்திருந்து அமல் - இபாதத்துகளில் ஈடுபட்டு தஸ்கியத்துன் நஃப்ஸைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்