மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

இதயத்தில் மட்டும்தான் இடமா?
வி.எஸ்.முஹம்மத் அமீன், ஏப்ரல் 16-30, 2024




இதயத்தில் மட்டும்தான் இடமா?

நடப்பு FPTP (First past the post voting) தேர்தல் முறையைக் கைவிட்டு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தும், குரலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மீண்டும் மிக வலுவாக எழுந்துள்ளது. காரணம் இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டு அளவிலும் சரி முஸ்லிம்களுக்கு வாய்ப்புகள் போதிய அளவில் வழங்கப்படவில்லை.

கடந்த எழுபது ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் இப்போது நடைமுறையில் இருக்கும் FPTP தேர்தல் முறையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் முஸ்லிம்கள் வகித்த பிரதிநிதித்துவ விவரங்களைப் பார்த்தாலே இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

நடப்புத் தேர்தல் முறை இருக்கும் வரை சிறிய கட்சிகள் கூட்டணி என்ற பெயரில் பல சகிப்புகளுடனும், விட்டுக் கொடுப்புகளுடனும் பெரிய கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. தனித்து நின்று வெல்ல இயலாது என்று ஒருபுறம் இருந்தாலும் வாக்குகளைப் பிரித்து பாஜக வெல்வதற்கு அதுவும் ஒரு காரணம் என்ற நிலையில் சிறிய கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களைத் தாங்களே ஒடுக்கிக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

இது ஒருபுறமென்றால் காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களுக்கான வாய்ப்பை மறுத்திருக்கின்றன. தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளிலும், திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் நேரடியாகக் களம் காண்கிறது. இதில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிமுக கூட்டணியில் குஈகஐ கட்சிக்கு அதிமுக சின்னத்தில் ஓர் இடமும், திமுக கூட்டணியில் முஸ்லிம் லீகிற்குத் தனிச் சின்னத்தில் ஓர் இடமும் ஒதுக்கியுள்ளது.

சிறுபான்மை மக்கள் இந்த மண்ணில் பல்வேறு நெருக்கடிகளுக்கும், உரிமை மறுப்புக்கும் ஆளாகிவரும் நேரத்தில் தங்கள் சமுதாய அடிப்படை முன்னேற்றத்திற்காகப் பேசுவதற்கும் செயல்படுவதற்குமான பிரதிநிதித்துவம் அவசியம் என்ற அளவில்தான் இந்தக் கோரிக்கை எழுகிறதே தவிர இது இனவாதம் சார்ந்த பிரச்னை அல்ல.

திராவிடக் கட்சிகள் தங்கள் கட்சியிலிருக்கும் முஸ்லிம்களுக்குக் கடந்த காலங்களில் வாய்ப்புகளை வழங்கினாலும் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தைப் பிரதிப்படுத்துவதற்குப் பதில் தங்களின் கட்சி சார்ந்து மட்டுமே செயல்பட்டார்கள். மட்டுமின்றி முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான நிலைப்பாட்டிலும் அவர்கள் பங்கேற்க நேர்ந்துள்ளது. இத்தகைய பிரதிநிதித்துவத்தால் சமுதாய முன்னேற்றம் சாத்தியமில்லை. எனவே சமுதாயத்தைப் பிரதிப்படுத்துகின்ற சிந்தனை கொண்டவர்களுக்குக் கட்சிகள் வாய்ப்பளிக்கும்போதுதான் இந்த நோக்கம் நிறைவேறும் என்பதையும் நாம் இணைத்துப் பேச வேண்டியுள்ளது.

அதிகாரத்தை நோக்கிய நகர்வு ஒரு சமுதாயத்தின் விடுதலைக்கான வழி என்பதை உறுதிப் படுத்தும் போதுதான் சமூக மறுமலர்ச்சி ஏற்படும். எல்லாருக்குமான வளர்ச்சி, சமூக நீதி என்பதெல்லாம் வெற்று முழக்கமாக இல்லாமல் செயல் வடிவம் பெற வேண்டும். இது தேர்தல் நேரக் கோரிக்கையாக இல்லாமல் முஸ்லிம் சமுதாயம் தங்களுடைய அரசியல் பங்களிப்பையும், செயல்பாட்டையும் இன்னும் வீரியமாக்கிக் கொள்வதன் மூலமே அதனை அடையமுடியும். இல்லையெனில் இது போன்ற வாத விவாதங்கள் தேர்தல் நேரப் பேச்சாக மட்டுமே முடிந்துவிடும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்