மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இந்தத் தலைமுறையை எப்படி மீட்டெடுக்கப் போகிறோம்?
வி.எஸ். முஹம்மத் அமீன், அக்டோபர் 16-31, 2025


2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெறப் பிரார்த்திக்கின்றோம். தமிழ்நாட்டு வரலாற்றில் நீங்காத வடுவாக கரூர் துயர நிகழ்வு நடந்திருக்கின்றது. இதற்கான காரணங்களை ஆய்ந்து இனி இதுபோன்ற துயர நிகழ்வு நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வது அரசின் கடமை மட்டுமல்ல. நம் அனைவரின் கடமையும் கூட!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து அக்கட்சியின் தொண்டர்கள் மீது பொதுவெளிகளில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் விஜயின் ரசிகர்கள் தொண்டர்களாக உருப்பெறவில்லை. அவ்வாறான பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும் கட்சித் தலைமையிலிருந்து அவர்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாகத் தொடர்ந்து அவர்களின் ரசிக கொண்டாட்ட மனோநிலையைத் தக்கவைக்கும் அனைத்து முயற்சிகளையும் விஜய் மேற்கொண்டு வருகிறார். விஜயைப் பார்க்க முண்டியடித்து ஓடிவருவதும், தடுப்புகளைத் தகர்ப்பதும், மரங்களிலும், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், கட்டிடங்கள் மீது ஏறுவதும், தாவுவதும், குதிப்பதும், வாகனங்களில் முறையற்று வருவதுமாக எவ்வித ஒழுங்கையும் பேணாத கட்டுப்பாடற்ற கும்பலாகவே அவர்கள் தக்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

வெறித்தனமான ரசிக மனப்பாங்கும், கண்மூடித்தனமான தனிமனித வழிபாடும் கொண்ட இந்த இளைஞர்கள் கரூர் நிகழ்விற்கு மிகப்பெரும் காரணம் என்பதை எவரும் மறுக்க இயலாது. நிகழ்ந்த தவறை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களிடம் இல்லை. மாறாக, மண்டையை உடைப்போம், காவல் நிலையத்திற்குத் தீவைப்போம் என்று வலைதளங்களில் அவர்கள் வெளியிடும் வீடியோக்கள் நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்துகின்றன. இந்த இளைஞர்கள் கைகளில் ஆட்சியும், அதிகாரமும் சென்றால் என்னவாகும்? என்ற அச்சம் நம்மை ஆட்கொள்கிறது.

இந்த எஞுண த் தலைமுறையைக் கொண்டு இலங்கை, நேபாளம் போல இங்கும் புரட்சியை ஏற்படுத்த விரும்புகிறார் தவெகவின் ஆதவ் அர்ஜுனா. அவர்கள் இந்த மகத்தான இளைய சக்தியை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள்? என்ற கேள்வியே நம்முன் மீண்டும் மீண்டும் எழுகிறது. தவெகவினரில் பெரும்பாலோர் மாணவ இளைஞர்கள். சுருக்கமாகச் சொன்னால் வருங்கால தமிழ்நாட்டின், இந்தியாவின் ஒரு பகுதி அவர்கள். இவர்கள் அனைவரையும் ‘தற்குறி’ என்று சொல்லி விமர்சிப்பதால் எந்த நன்மையும் விளையப்போவது இல்லை. வளர்ச்சியடைந்த ஒரு மாநிலத்தின் வருங்காலத் தலைமுறையில் கணிசமானோர் தற்குறிகளாக இருந்தால் தமிழ்நாடு தற்குறிகள் நிறைந்த மாநிலம் என்றாகி விடாதா?

கல்வி அறிவு, நாகரிகம் வளர்ந்த இக்காலத்திலும் ரசிக மனம் பலமடங்கு பெருகி வெறிகொண்டு அலைகிறது என்று சொன்னால் இந்தத் தலைமுறையை நாம் எப்படி மீட்டெடுக்கப் போகிறோம்? இவர்களை வழிநடத்துபவர்கள் இதுகுறித்து யோசிப்பார்களா? இந்தியாவின் எதிர்காலத்தை எழுதும் திறன்மிக்க இளைய சக்தியை நாம் எப்படி வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லப் போகிறோம்? அதற்கான பொறுப்பு ஒவ்வொரு தலைவருக்கு மட்டுமல்ல ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. இதைத்தான் கரூர் நமக்கு உரத்துச் சொல்கிறது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்