கரூரில் நடந்தது என்ன?
2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 11 குழந்தைகள் 17 பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். 110 பேர் காயமடைந்திருக்கின்றார்கள். இது குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதுடன் அன்றுஇரவே கரூருக்கு நேரில் வந்து இறந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தி மருத்துவமனையில் காயமடைந்து இருப்பவர்களைச் சென்று சந்தித்தார். அரசு தரப்பில் இறந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும் உடனே வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி உடனே கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரைத் தொடர்ந்து துபாய் பயணத்திலிருந்து திரும்பிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கரூருக்கு விரைந்த வண்ணம் இருந்தனர். ஆனால் தவெக தரப்பிலிருந்து யாரும் இறந்தவர்களின் குடும்பத்தினரையோ, காயமடைந்தவர்களையோ சந்திக்கவில்லை. இது மிகப்பெருமளவில் பேசுபொருளானது.
ஓடி ஒளிந்த தவெக
விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மக்கள் நெரிசலில் மூச்சுத் திணறி விழுந்தனர். விஜய்க்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டபோதும் அவர் தண்ணீர் பாட்டில்களை வீசிவிட்டு ஆம்புலன்ஸுக்கு வழிவிடச் சொல்லி காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்கச் சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தாரே தவிர அசம்பாவிதங்களைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர் அங்கிருக்கும்போதே உயிரிழப்புகள் ஏற் பட்ட போதும் சென்னை விரைவதிலேயே கவனம் செலுத்தினார். முதலமைச்சரும், அரசியல் தலைவர்களும் கரூர் நோக்கி விரையும்போது விஜயும், தவெக தலைவர்களும் கரூரிலிருந்து வெளியேறினார்கள்.
திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் தனி விமானத்தில் சென்னை வந்ததுடன் நான்கு மணி நேரம் கழித்தே அவரின் வலைதளப் பக்கத்தில் இரங்கலைப் பதிவு செய்தார். தவெக கரூர் மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தேடி வருகின்றனர். கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆதவ் அர்ஜுனா பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ்நாடே கொந்தளித்துக் கொண்டிருக்க விஜயோ, தவெகவோ எந்தச் சலனமும் இல்லாமல், ‘இரங்கல் செய்தியும், 20 இலட்சம் இழப்பீடு அறிவிப்புடனும்’ அடங்கி விட்டனர். சற்றேறக்குறைய மூன்று நாள்கள் கழித்து நான்கு நிமிட வீடியோ பதிவை விஜய் வெளியிட்டதும் அவர்மீது மக்கள் கொஞ்சம் வைத்திருந்த நம்பிக்கையும் தகர்ந்துபோனது. இத்தனை உயிர்ப் பலிக்கும் எந்தவிதப் பொறுப்பும் ஏற்காமல் ‘கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? இ.M. ஸார் பழிவாங்கறதா இருந்தா என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க.. நான் வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ தான் இருப்பேன்’ என்று வசனம் பேசி தன்னை அந்த நிகழ்விலிருந்து விடுவித்துக் கொள்ள முயற்
சித்தார்.
நீதிமன்றத் தலையீடு, விசாரணைக் குழு, விஜயைக் கைது செய்யக் கோரிய வாதங்கள் என தமிழ்நாடே பரபரப்பான போதும் விஜயின் பரப்புரை வாகனத்திற்கு ஆயுத பூஜை செய்தது தவிர தவெக, விஜய் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. பத்து நாள்களுக்குப் பிறகு இறந்தவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ கால் பேசி அதிரடி (தந்தி தொலைக்காட்சி அப்படித்தான் குறிப்பிட்டிருந்தது) காட்டினார்.
மனிதப் பேரழிவு
இந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ‘இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster)’ என்று குறிப்பிட்டதுடன் இந்த வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
தேர்தல் மேலாண்மைக் குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் ‘எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், Gen Z தலைமுறையும் ஒன்றாய்க் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ, அதுபோல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்’ எனப் பதிவிட்டுவிட்டு சில நிமிடங்களிலேயே பதிவை நீக்கினார். ஆனாலும் இந்தப் பதிவை நீதிபதியிடம் காட்டி நடவடிக்கை எடுக்கக் கோரியபோது அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனான செயல்பாடு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தவெக தரப்பு வழக்கறிஞர் ‘கூட்டத்திற்குள் கத்தியை எடுத்து வந்து கலவரத்தை ஏற்படுத்தியதாகவும், இறந்தவர்கள் இங்குதான் இறந்தார்களா அல்லது வேறு எங்கிருந்தாவது எடுத்து வந்தார்களா?’ என்றெல்லாம் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.
‘கட்சித் தொண்டர்களை, ரசிகர்களைப் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு ஓடிய தவெக தலைவர் விஜய் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் யாருக்கும் தலைமைப் பண்பு இல்லை. என்ன மாதிரியான கட்சி இது? 41 பேர் இறப்பிற்கு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. இது அக்கட்சித் தலைவரின் மனநிலையைக் காட்டுகிறது. விஜயின் பரப்புரை வாகனம் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக Hit and Run வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து அதிலுள்ள சிசிடிவி காட்சிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என்று நீதிபதி செந்தில்குமார் குறிப்பிட்டிருந்தார்.
விழுங்கத் துடிக்கும் பாஜக
கரூர் நிகழ்வைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகத் திசை திருப்ப பாஜக முனைப்புடன் செயல்பட்டது. பாஜக எம்.பி நடிகை ஹேமமாலினி தலைமையில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, ப்ரஜ் லால் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அறிக்கை அளிக்க விசாரணையை மேற்கொண்டது ஒன்றிய பாஜக. அண்ணாமலை, ஹெச்.ராஜா என பாஜகவினர் தங்களைக் கொள்கை எதிரியாகப் பிரகடனப் படுத்திய விஜயை வளைத்துப்போட தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கேள்விக்கென்ன பதில்?
கரூர் உயிர்ப் பலிக்கு யார் காரணம் என்ற வாத விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மக்கள் மன்றங்களிலும், ஊடக விவாதங்களிலும் தவெக, விஜய் குறித்து மிக முக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதுபோன்று விஜயை நோக்கி எழும் கேள்விகளைப் புறக்கணித்துவிட முடியாது. இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்வது விஜயின் கடமை மட்டுமல்ல. அவர் கொடுக்கும் விளக்கத்தில்தான் அவரின் நேர் மையும் அடங்கியிருக்கிறது.
அரசு காக்கத் தவறியது ஏன்?
கூட்ட நெரிசலில் செருப்பு வீசியும், தடியடி நடத்தியும், மின்சாரத்தைத் துண்டித்தும், ஆம்புலன்ஸ்களை வரவைத்தும் சதி நடந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மின்வாரியப் பொறியாளர் ராஜலட்சுமி, அஈஎக டேவிட்சன், ஈகுக, தமிழ்நாடு அரசுச் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஅகு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த வாத விவாதங்களைத் தாண்டி அரசுக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருக் கிறது என்பதே உண்மை. இது முதல் கூட்டம் அல்ல. இதற்கு முன்பு இதுபோன்று கடந்த வாரங்களில் ஐந்து மாவட்டங்களில் கூட்டங்கள் நடந்துள்ளன. இங்கும் என்ன நடக்கும் என்பது அரசுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் இப்படியெல்லாம் நிகழும் என்று கூறி கூட்டத்திற்கு அனுமதி மறுத்தாலோ, கூட்டம் நடக்கும்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் காவல்துறை ஈடுபட்டாலோ அது அரசுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்று அஞ்சியே அரசு அனைத்தையும் மௌனமாக அங்கீகரித்திருக்கிறது.
இங்கு அரசியலைத் தாண்டியும் மனித உயிர்களின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். காலையிலிருந்து மாலை வரை 27 ஆயிரம் பேர் நடுவீதியில் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும்போது அரசால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது ஏற்கத்தக்க பதில் அல்ல.
எல்லாருக்குமான பொறுப்பு
ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி பழி சொல்வதற்கான களம் இதுவல்ல. அதற்கான நேரமும் அல்ல. இது பொறுப்பேற்க வேண்டிய நேரம். இதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது.
இந்த நிகழ்வின் மூலம் விஜய் பாடம் படிக்க வேண்டும். கட்சியை சுய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தவறுகளை ஏற்றுக் கொண்டு பொறுப்பேற்க வேண்டும். தொண்டர்களை நெறிப்படுத்த வேண்டும்.விஜய், விஜய், விஜய் என்று தன்னை மட்டுமே முன் நிறுத்தாமல் கட்சியின் கொள்øககளை முன்னிறுத்தி அடுத்த கட்டத் தலைவர்களுக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதுடன் இரண்டாம் கட்டத் தலைவர்களை வலுவாக்க வேண்டும். எச்சூழலிலும் பாஜகவின் வலையில் சிக்கிவிடாமல் பிரச்னைகளை எதிர்கொண்டு களமாட வேண்டும். ஒரு நல்ல தலைவர் களத்திற்கு விரைய வேண்டும். களத்திலிருந்து ஓடிவிடக்கூடாது. சவால்களைச் சந்திக்க வேண்டுமே தவிர சவால் விடக் கூடாது. மக்களைக் காக்க வேண்டுமே தவிர காக்க வைக்கக் கூடாது. மக்களை நெறிப்படுத்த வேண்டுமே தவிர வெறிப்படுத்தக் கூடாது.
ரசிகர்கள் எனும் தொண்டர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. தலைவரைக் காண இப்படி முண்டியடித்துக் கொண்டிருந்தால் எப்படி தலைவருக்கும் மக்களுக்குமான உறவு ஏற்படும்? மக்களைச் சந்திக்க விடாமல் தடுப்புச் சுவராக நீங்களே நின்றால் அவர் பொதுக்களத்திற்கு எப்படி வருவார்? அரசியல் பயிலுங்கள். விளையாட்டுத்தனத்தை விட்டொழித்து பக்குவத்தைப் பெறுங்கள். மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் இறங்குங்கள். தலைவரே தவறு செய்தாலும் அதனைச் சுட்டிக்காட்டுங்கள். தட்டிக் கேளுங்கள். எல்லாவற்றையும் நியாயப்படுத்தாதீர்கள். ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்ற குறளு டன் ‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலனும் கெடும்’ என்ற குறளையும் ஒரு முறை படியுங்கள்.
பெற்றோர்களுக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவர்கள் நெறிகெட்டுப் போவதை அனுமதிக்காதீர்கள். பொதுமக்களும் வேடிக்கை மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும். ஊடகத்திற்கும் இதில் மிகப்பெரும் பொறுப்பு இருக்கிறது. எல்லாவற்றையும் பரபரப்பாக்கி ஒவ்வொன்றையும் செய்தியாக்குவதிலேயே குறியாக இருக்காதீர்கள். உங்களைச் சந்திக்க மறுக்கின்றவர்களின் பின்னால் எத்தனை காலம்தான் மைக்கை நீட்டி ஓடிக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்? ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளக்கூடியவர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். இங்கு எல்லாமே வணிகமாக்கப்படுகிறது. எல்லாவற்றையும் விட மனித உயிர்கள் முக்கியம். மனித உணர்வும், கண்ணியமும் முக்கியம் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். பிஞ்சுக் குழந்தைகளை மிதித்தே கொன்ற ஒரு கொடுங்காலத்தின் பெருந்துயரிலிருந்து நாம் பாடம் பெறவில்லை எனில் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.