மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ட்ராஃபிக் சுல்தான் தாத்தா
K. ரியாஸ், 1-15 அக்டோபர் 2025


கோயம்புத்தூரின் பிரபல போக்குவரத்து தன்னார்வலரும் மக்களால் அன்புடன் ‘சுல்தான் தாத்தா’,‘ட்ராபிக் தாத்தா’ என அழைக்கப்படுபவருமான ஓ.உ. சுல்தான் 88 வயதில் இறைவனிடம் மீண்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். (நாம் இறைவனிடமிருந்தே வந்தோம். அவனிடமே மீளக்கூடியவர்களாய் இருக்கின்றோம்) கோயம்புத்தூரில் உள்ள திருச்சி சாலையில் வசித்து வந்த சுல்தான் தாத்தா பெரிய கடை வீதியில் உள்ள அத்தர் ஜமாஅத் மஸ்ஜிதில் தூய்மைப் பணியை மேற்கொண்டு வந்தார். அங்கு பணி முடிந்ததும் தினந்தோறும் அதிகாலை முதல் மாலை வரை அயராது உழைத்து, காந்திபுரத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை தனது நெகிழி சீழ்க்கை (plastic whistle) கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்கி போக்குவரத்துக் காவலர்களின் பணியை எளிதாக்கித் தந்தார் சுல்தான் தாத்தா. இதனால் போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அவரை ட்ராஃபிக் தாத்தா எனக் கொண்டாடினர். அந்தப் பகுதியில் பயணிக்கக்கூடிய மக்கள் ஒரு முறையாவது சுல்தான் தாத்தா வைக் கண்டிருக்கக்கூடும். எப்போதும் புன்னகையுடன் போக்குவரத்து நெரிசலை ஒழுங்கு செய்யும் சுல்தான் தாத்தா தன்னார்வத்துடன் தம் விருப்பப் பணியாகவே இந்தத் தொண்டைச் செய்துவந்தார். அண்மையில் குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் கடந்த சில நாள்களாகக் கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 2025 செப்டம்பர் 10ஆம் நாள் உயிரிழந்தார். அவரின் இறப்பு கோவை பொதுமக்கள், காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களும் துணை காவல் ஆணையர் (போக்குவரத்து) எஸ்.அசோக் குமார் தலைமையிலான போக்குவரத்துக் காவல் துறையினரும் சுல்தான் தாத்தாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர். வந்திருந்த அனைவரும் ட்ராஃபிக் தாத்தாவின் அரும்பணியைக் கண்ணீருடன் நினைவு கூர்ந்து அவருக்காகப் பிரார்த்தித்தனர். எல்லாம் வல்ல இறைவன் சுல்தான் தாத்தாவின் நற்செயலைப் பொருந்திக் கொள்வானாக! உயரிய சுவனத்தைப் பரிசாக வழங்குவானாக! சுல்தான் தாத்தா விட்டுச் சென்ற அழகிய முன்மாதிரியை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்