ஓ ஃபலஸ்தீனே
உன் கருப்பைச் சுவரில்
வழியும் ரத்தம்
சிவப்பு எழுத்துகளால்
உன் பெயரை எழுதுகிறது
அந்த எழுத்துகளை வீழ்த்த
ஹம்ஸாவும் அலீயும் வரமாட்டார்கள்
உன் சொந்த விரல்களின்
போராட்டக் குணம்தான்
உன் இரத்தத்திலிருந்து தீயாய்
மீண்டும் மீண்டும் எழும்
உன் விலா எலும்புக் கூட்டை
கழுகுப் பறவைகள்
உடைக்க வந்தாலும்
உன் மந்திரக் கற்களே
அவற்றுக்கு முன் போராடும்
உன் நரம்புகளை அறுத்து
வீணை போல இசைக்க விரும்பும்
அந்த வெறியர்களின் கைகளை
உன் பசித்த கோபம்
இரத்தத்தால் மண்ணில் புதைத்து
நிலத்தை மீட்கும்
வலிக்கட்டும்
வலியோடு நீ போராடு
தகர்ந்து விழுந்தாலும்
மீண்டும் மீண்டும்
அபாபீல்களாய்
நீ பிறந்து கொண்டே இரு
நீதான் உமர்
நீதான் பிலால்
நீதான் இந்த நூற்றாண்டில் எழும்
அந்த தீர்க்கதரிசனக் குரல்
அரபு தேசங்களின் மௌனங்கள்
அப்படியே
அவர்கள் விரும்பிக் குடிக்கும்
கஹ்வா காப்பிக்குள் மறைந்து போகட்டும்
உன் உரிமைப் போராட்டம்
உன் கண்களின் நீர்த்துளிகள்
புதையுண்ட பிள்ளைகளின்
மண்ணறைகளுக்குள்
இன்னுமின்னும் அபாபீல்களை
உயிர்தெழச் செய்யும்.