மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

மிக உயர்ந்த படிநிலை
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, 1-15 அக்டோபர் 2025



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சிவந்த நிறத்தைக் கொண்டிருப்பதால் நீங்கள் மற்றவரை விடச் சிறப்புக்குரியவர் ஆக மாட்டீர்கள். கருத்த நிறத்தாலும் நீங்கள் மற்றவரை விடச் சிறந்தவர் ஆக மாட்டீர்கள். அதற்கு மாறாக, இறையச்சத்துடன் இருப்பதுதான் உங்களில் ஒவ்வொருவருக்கும் அவசியம் ஆகும்!’

அறிவிப்பாளர் : அபூதர்(ரலி)
நூல் : அஹ்மத்


ஒருவரின் சிறப்பும் மேன்மையும் அவருடைய தோற்றத்தைச் சார்ந்தோ, நிறத்தைச் சார்ந்தோ நிர்ணயம் ஆவதில்லை. அதற்கு மாறாக உண்மையில் ஒருவர் எந்த அளவுக்குச் சிறப்பானவர், நல்லவர் என்பதைத் தீர்மானிப்பது இறையச்சம்தான். அதாவது அவர் தம்முடைய வாழ்வில் எந்த அளவுக்கு இறைவனை அஞ்சி நடக்கின்றார், உண்மை, வாய்மை போன்றவற்றைப் பேணி நடப்பதில் அவர் எந்த அளவுக்குக் கவனமும் அக்கறையும் செலுத்துகின்றார் என்பதோடு தொடர்புடையதுதான் அவருடைய சிறப்பும் மேன்மையும். ஒருவரிடம் எத்தகைய படிநிலையில் இறையச்சம் இருக்கின்றதோ அதைப் பொருத்தே இறைவனிடமும் அவருடைய அந்தஸ்தும் தகுதிநிலையும் அமையும்.

இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதிலும், அவனுக்கு மட்டுமே அடிபணிந்து வாழ்வதிலும் வாழ்வின் பிற விவகாரங்களில் கவனக்குறைவாக நடந்து கொண்டாலும் நேரடியான, வெளிப்படையான இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக்கூடிய விவகாரங்களிலிருந்து மட்டும் தம்மை விலக்கிக் கொள்வதில் முழுமையான ஈடுபாடும் கவனமும் செலுத்துகின்றார் எனில் அது இறையச்சத்தின் படிநிலைகளில் ஒன்றாகும்.

ஒருவர் வெளிப்படையான, நேரடியான இணைவைப்பில் தள்ளிவிடுகின்ற விவகாரங்களிலிருந்து மட்டுமல்லாமல் இணைவைப்பிற்கு இட்டுச் செல்கின்ற மறைமுகமான செயல்பாடுகளிலிருந்தும் அதாவது பெருமை, புகழாசை, விளம்பர மோகம் போன்றவற்றிலிருந்தும் தம்மைக் காத்துக்கொள்கின்றார் எனில் அதுவும் இறையச்சத்தின் படிநிலைகளில் ஒன்றாகும். ஆனால் இறையச்சத்தின் படிநிலைகளிலேயே மிக உயர்ந்த படிநிலை என்ன தெரியுமா? எந்நேரமும் எல்லா இடங்களிலும் இறைவனின் இருப்பை இதயத்தில் உணர்ந்துகொண்டே அவனுடைய நினைவிலேயே வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பதும் எந்த நிலையிலும் எத்தகையச் சூழலிலும் இறைவனை மறக்காமல் இருப்பதும்தாம் இறையச்சத்தின் மிக மிக உயர்ந்த படிநிலை ஆகும்.

இத்தகைய உயர்ந்த படிநிலையைக்கொண்ட இறையச்சத்தைப் பெற்றிருப்பவர்கள் இறைவனின் மகத்துவம் பற்றிய மலைப்பாலும் எண்ணத்தாலும் தம்முடைய இதயத்தை நிறைத்து வைத்திருப்பார்கள். இவர்கள் சிந்திக்க நினைக்கின்ற போதெல்லாம் இறைவனை மையப்படுத்தியே சிந்திப்பார்கள். இவர்கள் இறைவனை மட்டுமே எல்லா நிலைமைகளிலும் சார்ந்து இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்களின் உள்ளங்களில் நிம்மதி எனும் பூ பூக்கின்றது எனில் அதற்கு ஒரே காரணம் இறைவனைப் பற்றிய நினைவாகத்தான் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அசத்தியத்தின் பக்கம் ஒருவரைக் கொண்டு போய்த் தள்ளிவிடக்கூடிய எல்லா வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் இவர்களின் இதயங்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்