இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 2024 அக்டோபர் 21ஆம் நாள் புனேவில் ஒரு கூட்டத்தில் பேசும்போது ‘அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு மூன்று மாதங்களாக என் முன் விசாரணையில் இருந்தது. அப்போது கடவுளின் முன் அமர்ந்து இதற்குத் தீர்வு கிடைக்க வழி செய்யுமாறு வேண்டினேன். நான் தினமும் கடவுளை வழிபடுவேன். கடவுள் மீது நம்பிக்கைஉடையவர்களுக்கு அவர் சிறந்த தீர்வுகளைத் தருவார்’ என்று கூறியது அதிர்ச்சி அளித்தது.
2019 நவம்பர் 9ஆம் தேதி பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டிக் கொள்ளவும், மஸ்ஜிதுக்கு அருகில் இடம் அளிப்பதாகவும் அன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அடங்கி பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு சாட்சியங்கள், விசாரணை அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. மஸ்ஜித் இடிக்கப்பட்டது தவறு என ஒப்புக்கொண்டும்கூட கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட மிகத் தவறான தீர்ப்பாகும். இந்திய நீதிமன்ற வரலாற்றில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் கையெழுத்தில்லாமல் வந்த வரலாற்றுப் பிழையான தீர்ப்பு இது.
அந்தத் தீர்ப்பு குறித்துதான் சந்திரசூட் கடவுளிடம் கேட்டு தீர்ப்பெழுதியதாகக் கூறியுள்ளார். பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளில் ரன்ஞன் கோகய் பாஜகவின் ராஜ்யசபா எம்.பியானார். இருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஒருவர் ஆளுநராகவும், மற்றொருவர் சட்டத்துறைத் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றனர். நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையிலிருக்கும் சந்திரசூட் இப்படிப் பேசியிருப்பது ஓய்வுக்குப் பின் உயர் பொறுப்பிற்காகப் பேசிய பேச்சு என்று விமர்சிக்கப்பட்டாலும் இக்கூற்று இந்திய நீதி அமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சுக்கு நூறாகச் சிதறடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
செப்டம்பர் 11ஆம் தேதி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டபோதே நீதிபதி சந்திரசூட் மீதான நம்பிக்கை பலமான கேள்விக்கு உள்ளானது. பிரதமர் மோடியுடனான இச்சந்திப்பிற்குப் பிறகு தன்னை வழக்கமான மனிதப் பிறப்பாக அல்லாத அவதாரப் பிறவி என்று கூறிய பிரதமரைத்தான் கடவுள் என்று குறிப்பிட்டு அவருடைய விருப்பத்தின் பெயரில்தான் இத்தீர்ப்பு எழுதப்பட்டதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. கடவுள் நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அந்த நம்பிக்கை தீர்ப்பில் பிரதிபலித்தால் அது நீதியின் அடிப்படையிலான தீர்ப்பு அல்ல, அருள்வாக்கு போன்றது. முறையாகச் சட்டம் படித்து பல்வேறு பொறுப்புகள் வகித்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்மீது உறுதியேற்று பொறுப்புக்கு வந்த சந்திரசூட் நீதிஅமைப்பையும், அரசியல்சாசனத்தையுமே கேலிக்குரியதாக்கி இருக்கிறார்.
அவருடைய நீதிபதிக்கான அடிப்படைத் தகுதி கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில் அவர் இதுவரை வழங்கிய தீர்ப்புகள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளிடம் கேட்டு எழுதியதாகச் சொல்லப்படும் தீர்ப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும்.‘1947 ஆகஸ்ட் 15 அன்று நாட்டில் எங்கெல்லாம் வழிபாட்டுத் தலங்கள் யாருடைய கைகளில் உள்ளதோ அவர்களுடைய உரிமையின் கீழ் அவை தொடரும். எவ்விதத் தகராறுகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் அனுமதி இல்லை’ என்று 1991 ஏப்ரலில் வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாபரி மஸ்ஜித் மட்டுமே விதிவிலக்காக இருக்கும் என்று பாபரி மஸ்ஜித் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அதன்பிறகு ஞானவாபி மஸ்ஜிதின் பாதாள அறையில் பூஜை செய்யும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. தொடர்ந்து கிருஷ்ண ஜென்ம பூமி என்று பல பள்ளிவாசல்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் அன்று வழங்கிய தீர்ப்பின் அர்த்தம் என்ன? பாபர், ராமர் என்ற நில ஆக்கிரமிப்புப் பிரச்னையில் சந்திரசூட் அவர் வணங்கும் கடவுளிடம் கேட்டதைப்போல் ஓர் இஸ்லாமிய நீதிபதி அல்லாஹ்விடம் கேட்டு தீர்ப்பு வழங்கியிருந்தால் அத்தீர்ப்பு எப்படி அணுகப்பட்டிருக்கும்? சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க இயலவில்லை என்பதைப் பொறுப்பேற்பதற்குப் பதில் கடவுள்மீது பழி போட்டு பொறுப்புத் துறப்பு செய்வது நீதிபதிக்கு ஏற்புடையதுதானா? நீதிபதி பொறுப்பேற்றது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதுள்ள உறுதிப் பிரமாணத்திலா இல்லை அவர் வணங்கும் கடவுள் நம்பிக்கையின் பேரிலா?
என்பன போன்ற பல கேள்விகளை ஊடகவியலாளர் சித்தார்த் வரதராஜன் எழுப்பியுள்ளார்.
‘நான் ஓய்வு பெற்றபிறகு என்னைக் குறித்து வரலாறு என்ன நினைக்கும்?’ என்ற வினாவை அண்மையில் சந்திரசூட் மன உறுத்தலினால்தான் எழுப்பினாரா? எப்படியானாலும் வரலாற்றின் நீதியான பக்கங்களில் சந்திரசூட்டின் பெயர் ஒருபோதும் எழுதப்படப்போவதில்லை. வரலாறு உங்களை மன்னிக்காது நீதிபதி சந்திரசூட் அவர்களே! உலக அரங்கில் இந்திய நீதிக்கு நீங்கள் அவப்பெயரைத் தேடித் தந்து விட்டீர்கள்.