மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் கார்த்திகை தீபம் வழக்கமாக ஏற்றப்பட்டது. ஆனால் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்ஹா அருகிலுள்ள நில அளவைத் தூணைக் குறிப்பிட்டு அந்தத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று முருகபக்தர் என்ற போர்வையில் வகுப்புவாதப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்து தமிழர் கட்சியின் நிறுவனரான ராம ரவிக்குமார் வழக்குத் தொடர்ந்தார்.
இதனை விசாரித்த மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘டிசம்பர் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்ஹா அருகிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும், தவறும் பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என உத்தரவிட்டார். ஆனால் வழக்கமான தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்ட பிறகும் இந்து முன்னணி, பாஜகவினர் இதனை மதப் பிரச்னையாக மாற்றி ‘தமிழ்நாட்டை மற்றொரு அயோத்தியாக மாற்றுவோம்’ என்ற பிரகடனத்துடன் தர்ஹா அருகிலுள்ள நில அளவைத் தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து போராட்டம் நடத்தியதுடன் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கியதுடன், அவர் தன்னுடன் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் அவர்களை காவல்துறை அனுமதிக்கவில்லை. திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் பிறப்பித்தார். தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையீடு செய்தார். அதனை உடனே விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ‘தனி நீதிபதியின் உத்தரவு சரியானதே’ எனத் தீர்ப்பளித்தனர்.
ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்படும் ஒரு மரபை மாற்றவேண்டிய அவசியம் இப்போது ஏன் எழுந்துள்ளது? இந்த விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதன் இவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டியது ஏன்? 6:05 வரைக்கும் அவகாசம் இருக்கும் போது 5.30 மணிக்கு ‘சம்பந்தப்பட்ட நபர்கள் ஆஜராகவில்லை என்றால் கடும் உத்தரவைப் பிறப்பிக்கத் தயங்க மாட்டேன்’ என முந்திக் கொண்டு நின்றது ஏன்? மாநில காவல்துறை இருக்கும் போது நீதிமன்ற பாதுகாப்புப் பணிக்கான CISF வீரர்களை இந்த விவகாரத்தில் அனுப்ப நீதிபதிக்கு எங்கிருந்து அதிகாரம் கிடைத்தது? உரிமை யியல் நீதிமன்ற நீதிபதிகளோ, வழக்கறிஞர் குழுவோ மேற்கொள்ளும் களப்பணியை உயர் நீதிமன்ற நீதிபதியான சுவாமிநாதன் மலைக்குச் சென்று பார்வையிட்டு நில அளவைத் தூணை தீபத் தூண் என்று கூறியது ஏன்?
இதேபோன்ற வழக்கை 2014ஆம் ஆண்டு சுப்ரமணியன் என்பவர் தொடுத்தபோது விசாரித்த மதுரை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் ஆகியோர், ‘பல பத்தாண்டுகளாக அமைதியான முறையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். தர்ஹா அருகில் உள்ள மலை உச்சியில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான ஆகம ஆதாரம் எதுவும் இல்லை. அமைதி, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கத் தேவையில்லை. எனவே வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத்தூணிலேயே கார்த்திகை தீபம் ஏற்றலாம்’ என 07.12.2017 அன்று தீர்ப்பளித்துள்ளனர். இருநபர் தீர்ப்பை தனிநபரால் ரத்து செய்ய இயலாத சூழலில் அதனை ரத்து செய்யாமல் இப்படி ஒரு தீர்ப்பை நீதிபதி சுவாமிநாதன் எப்படி வழங்கினார்?
இதுபோன்ற நியாயமான கேள்விகளை உள்ளடக்கி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை இந்தியா கூட்டணி நாடாளு மன்றத்தில் முன்வைத்தது. இதற்கு ஆதரவாக 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத் திட்டு மக்களவை சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர். நீதி, விசாரணை, சட்டம், சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஃபாசிஸ்டுகளின் ஆட்சியில் கூட்டு மனசாட்சி, பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்துதல், கடவுள் தன்னிடம் கூறியதாகச் சொல்லுதல், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர் தவறிழைக்க மாட்டார் என்ற நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கி இந்திய நீதியின் மாண்பைக் குழி தோண்டிப் புதைத்து வருகின்றனர்.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விவகாரத்தில் கடவுளிடம் கேட்டு தீர்ப்பு வழங்கியதாகச் சொன்னதைப் போல, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சனாதன தர்மத்தின் படி வாழ்கின்ற ஒருவர் தவறிழைக்க மாட்டார் என்று தான் வழக்கறிஞராக இருந்த போது கார் விபத்துக் கொலை வழக்கில் சனாதன சாஸ்திரியைக் காப்பாற்றியதாக 2025ஆம் ஆண்டு ஓம் சாரிட்டபிள் அறக்கட்டளை தேசிய அளவில் நடத்திய வேத திறமையாளர்கள் மாநாட்டில் (National Vedic Talent Meet) பேசி உள்ளார். இவரிடமிருந்து எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?
நீதி அமைப்பையும், சட்ட மாண்புகளையும் துளியும் மதிக்காமல் சனாதனச் சிந்தனையுடன் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் இந்த நாடு என்னவாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருப்பரங்குன்ற விவகாரத்தில் இந்துச் சகோதரர்கள் இந்துத்துவ வெறியர்களிடமிருந்து விலகி நின்று ஒற்றுமை காத்த வரலாற்றை மதுரை படைத்துள்ளது. வகுப்புவெறியர்களிடமிருந்து ஆன்மிகத்தைக் காப்பாற்ற வேண்டிய தருணம் இது. நீதிபதிகளின் போர்வையில் ஒளிந்துள்ள வகுப்புவாதிகள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கு ஆன்மிகப் போர்வையில் ஒளிந்துள்ள வகுப்புவாத ஆட்சி அகற்றப்பட வேண்டும்.