மத, இன, மொழிச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான நினைவூட்டலாக சிறுபான்மையினர் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், புரிதலை ஊக்குவிக்கவும், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையையும் (Preamble) சிறுபான்மைச் சமூகத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள உரிமைகளையும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையானது, 1976ஆம் ஆண்டு 42ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம், ‘சமதர்ம, மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு’ என்ற அற்புதமான சொற்களை உள்ளடக்கியது.
‘இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஓர் இறையாண்மை வாய்ந்த சோஷலிச நெறியைச் சார்ந்த, மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசாக நிறுவ உளமார உறுதி கூறுகின்றோம். சமூக, பொருளாதார அரசியல் நீதியையும் சிந்தனையில், சிந்தனை வெளிப்பாட்டில், நம்பிக்கையில் பற்றார்வத்தில், வழிபாட்டில் முழு உரிமையையும், வாழ்க்கை நிலையிலும், வாய்ப்புகளிலும், சமத்துவத்தையும், தனிமனித உயர் தகுதிக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், உறுதுணையாக இருக்கவும், சகோதரத்துவத்தை வளர்க்கவும் உளமார உறுதிபூண்டு அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்’ என்ற அரசியலமைப்பின் முகவுரையைப் படிக்கும் போது, நமது முன்னோர்கள் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை எவ்வளவு தூரநோக்குச் சிந்தனையோடு கட்டமைத்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து, இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உணர்ந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை, மதம், மொழி, இனம் என்னும் அடிப்படையில் அங்கு வாழும் மக்கள் பெரும்பான்மை, சிறுபான்மை என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். இந்தியா ஒரு பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்ட ஜனநாயக நாடு. ஏராளமான மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் என பன்மைத்துவ அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், மத, இன, மொழி ஆகியவற்றைக் கடந்து, இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என தனிச்சிறப்புடன் திகழ்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளைத் தெளிவாக வரையறுத்துள்ளது. ஐக்கியநாடுகள் சபையின் கூற்றுப்படி, சிறுபான்மை சமூகம் என்பது சமூக, அரசியல், பொருளாதார ஆதிக்கம் இல்லாத குறிப்பிட்ட நாட்டிற்குள் எண்ணிக்கையில் குறைந்த சமூகமாக வரையறுக்கப்படுகிறது.
இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் ஆகியோர் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டார்கள். 2014 ஜனவரி 27ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி ஜைனர்களும் மதச் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டனர். பொதுவாக மதம், மொழிச் சிறுபான்மையினர்தான் அதிகக் கவனம் பெறுகின்றனர்.
சிறுபான்மையினர் உரிமைகள் தினம் 1992 டிசம்பர் 18 அன்று ஐ.நா சபையின் பிரகடனத்தோடு தொடங்கப்பட்டது. ஐ.நா சபையின் இந்தப் பிரகடனம் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்கள் தங்களின் கலாச்சாரத்தை அழுத்தங்கள் இல்லாமல் பின்பற்றவும், தங்களின் மதங்களைச் சுதந்திரமாகப் பின்பற்றவும், பாகுபாடுகள் இல்லாமல் தங்கள் மொழிகளைப் பயன்படுத்தவும் உள்ள உரிமைகளை வலியுறுத்துகிறது. இதன் காரணமாக இந்தியா, தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம்(1992), இதன் கீழ் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தை (NCM - National commission forminorties) ஏற்படுத்தி ஒரு சிறப்பான முயற்சியை முன் னெடுத்தது. நாட்டிற்குள் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்து முன்னேற்றுவதே ஆணையத்தின் முதன்மைப் பொறுப்பாகும்.
ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினர் தொடர்பான அறிவிப்பை அனைத்து ஜனநாயக நாடுகளும் ஏற்றுக் கொண்டன. எந்த ஒரு நாட்டிலும் மதம், இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் பெரும்பான்மை மக்களிடமிருந்து வேறுபட்டு சிறுபான்மையாக வாழும் மக்களுக்கு அவர்களின் தனித்துவமான அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. அந்த உரிமையை அந்தந்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது ஐ.நா சபை அறிவிப்பின் சாரமாகும்.
சிறுபான்மையினர் உயிர்களையும், உடமை களையும் பாதுகாக்க வேண்டும். அவர்களுடைய பண்பாடு, மதம், மொழி ஆகியவற்றைப் பிறர் மதித்து நடக்க வேண்டும். அதைப் பரப்புவதற்கான உரிமைகள் அவர்களுக்கு இருக்க வேண்டும். சமூகங்களுடனான அவர்களுடைய பரஸ்பர நட்பும், மரியாதையும் பேணப்பட வேண்டும். இவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்க வேண்டும். இவை எல்லாம் ஐ.நா சபை அறிவித்த சிறுபான்மையினருக்கான அடிப்படையான செய்திகளாகும்.
இது ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளுக்கான விதிமுறைகள் ஆகும். இந்த விதிமுறைகள் மீறப்பட்டு, அவற்றால் எந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டாலும் , அதுகுறித்து அந்த மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் முறையிடவும், அந்த அமைப்புகள் அதனை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டவும் ஐ.நா சபையின் அறிவிப்பு வழி செய்கிறது.
இந்த ஐ.நா பிரகடனத்திற்கு முன்பே, சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த விவாதங்கள் எல்லா நாடுகளிலும் நடந் துள்ளன. இதைக் கருத்தில் கொண்டே இந்திய அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகள், மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறு பான்மையினர், கலாச்சாரச் சிறுபான்மையினர் என்று அங்கீகரிக்கின்றன. இந்திய அரசியல் சட்டத்தின் பாகம் IV-A, குடிமக்கள் அனைவரின் அடிப்படைக் கடமை களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் பிரிவு 51அ, சிறுபான்மையினர் குறித்த சிறப்புப் பிரிவாகும். மதம், மொழி, பிராந்தியப் பிரிவு, வேற்றுமைகளைக் கடந்து இந்தியாவின் அனைத்து மக்களிடையேயும், ஒத்திசைவு, பொதுவான சகோதரத்துவ உணர்வை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும், நமது கலவையான கலாச்சõரத்தின் பாரம்பர்யத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அந்தப் பிரிவு கூறுகிறது.
அரசியல் ஆசான் டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் கூறும்போது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு வகையான வெறித்தனத்தை வளர்த்துக் கொண்டுள்ள கடும்போக்கினருக்கு இரண்டு செய்திகளைக் கூறினார். சிறுபான்மை மக்கள் கிளர்ந்தெழும் சக்தியாக இருக்கிறார்கள். அந்தச் சக்தி கிளர்ந்தெழுமானால், அரசின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் சீர் குலைந்து விடலாம். இதற்கு ஐரோப்பிய வரலாறு போதுமான சாட்சியங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மை மக்கள் எந்த பெரும்பான்மையினரின் ஆட்சியையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடுகள் காட்டக்கூடாது என்பதை பெரும்பான்மையினர் உணர வேண்டியது பெரும்பான்மையினரின் கடமையாகும்.
சிறுபான்மையினர்களுக்கு தனி அமைச்சகம், ஆணையம் செயல்பட்டாலும் இந்தியாவில் மதச் சிறுபான்மையினரான குறிப்பாக முஸ்லிம்களைத் தாக்கு வது, அச்சுறுத்துவது, அவர்களின் சொத்து களைச் சூறையாடுவது, கொலை செய்வது, பாலி யல் தொல்லை தருவது என வன்முறைகள் தொடர்ந்தாலும், அதற்கான நீதியும் நியாயமும், நிவாரணமும் கிடைக்காதபோது இந்த அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை. அரசு சிறுபான்மையினர் நலன் குறித்துப் பேசினாலும், அரசின் அமைப்புக்கள், காவல்துறை போன்றவை சிறுபான்மையினரை அணுகும் விதத்தில் பாரபட்சம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்பதும் எதார்த்தமாகும்.
சிறுபான்மையினர் தினத்தை கொண்டாடுவதன் மூலம், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், முன்னேற்றவும், ஆர்வத்தைத் தூண்டவும், விழிப்பு உணர்வை அதிகரிக்கவும், அரசியல் உறுதியை வளர்ப்பதற்கும் இது ஒரு தூண்டுகோலாக அமையும். நாட்டின் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்துவது சமூகத்தின் விரிவான முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. ஆனால் இன்றைய நிலையில், சிறுபான்மையினர் உரிமைகள் இந்தியாவில் பாதுகாக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தங்களுடைய உரிமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் சிறுபான்மையினர் குரல் எழுப்பினால், அவர்களை அச்சப்படுத்தி ஒடுக்கும் ஒடுக்குமுறைச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. அடிப்படை உரிமைகளைக் கோரி சிறுபான்மையினர் நடத்தும் போராட்டங்கள் ஈவுஇரக்கம் இல்லாமல் ஒடுக்கப்படுகின்றன.
சிறுபான்மையினரின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய ஆளும் அரசே அவர்களை அச்சப்படுத்தி ஒடுக்குவது ஜனநாயக நாட்டின் மாண்பைச் சீர்குலைப்பதாகும். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் ஆட்சி புரிவது மட்டுமல்ல, சிறுபான்மையினரும் சேர்ந்தால்தான் ஜனநாயகம் என்று வரையறுக்கப்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு முழுச் சுதந்திரமும், அவர்களின் கருத்துகளை எழுதுவதற்கும், பேசுவதற்கும், பரப்புவதற்கும் முழு வாய்ப்பும் அளிக்கப்பட்டால்தான் அது ஜனநாயகம். இல்லையெனில் அது எதேச்சதி காரமாகும்.
இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்குக் கலாச்சாரம், கல்வி மத உரிமைகளை வழங்குகிறது. இந்த உரிமைகளில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிப்பதும் மதவழிபாட்டிற்கான பள்ளிவாசல்களை, சர்ச்சுகளை மற்ற சிறுபான்மை மக்களின் வணக்கத்தலங்களைக் கட்டி, பராமரித்து சுதந்திரமாக வழிபட அரசியல் அமைப்புச்சட்டம் உரிமைகளை வழங்குகிறது. அனைத்து குடிமக்களும் அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 25(1)ன்படி தங்களின் மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமைகளை வழங்குகிறது. சிறு பான்மையினர் இனம், மதம், மொழி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்.
பா.ஜ.க ஒன்றிய அரசு கடந்த 11 ஆண்டுகளாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒவ்வொரு சட்டங்களாகத் தனது பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நிறைவேற்றி வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA 2019), தேசிய குடியுரிமைப் பதிவேடு(NRC), தேசிய மக்கள் பதிவேடு (NPR) போன்ற இந்திய குடியுரிமையைக் கேள்வி எழுப்பும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தாலும், ஃபாசிஸ ஆட்சியாளர்களின் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பா.ஜ.க ஆளும் பல மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஹலால் உணவுத்தடை, மாட்டிறைச்சிக்கு தடை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் பர்தா அணியத் தடை என சிறுபான்மை மக்களின் உரிமைகள் நசுக்கப்படுகிறது.
வஃக்ப் வாரியச் சட்டத் திருத்த மசோதா (Waqf Amendment Bil) இஸ்லாமியர்களின் சொத்துகளை அபகரிக்க முயலும் ஒரு வெளிப்படையான முயற்சி என்றே குற்றம் சாட்டப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25, 26 ஆகியவை மதச்சுதந்திரத்தையும், சிறுபான்மை நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமையையும் வழங்குகிறது. வஃக்ப் வாரிய சட்டத்திருத்தம் சிறுபான்மையினரின் இந்த உரிமைகளை அப்பட்டமாகப் பறிக்கிறது. மேலும் முஸ்லிம் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வழங்கப்பட்டு வந்த பல உதவித்தொகைகள் (Scholarships)நிறுத்தப்பட்டு விட்டது. இது முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்திருக்கிறது. IIT, IIM போன்ற பல உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களின் சேர்க்கையே இல்லாத அளவிற்குத் தடுக்கப்படுகிறது. சிறுபான்மையினரில், முஸ்லிம்களை மட்டுமே முதல் குறியாக வைத்து பா.ஜ.க அரசு செயல்படுவதை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர்.
பா.ஜ.க ஒன்றிய அரசு பதவியேற்ற பிறகு ஏதாவது ஒரு காரணத்தை வைத்து மதச் சிறுபான்மையினர் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெறுவது இயல்பாகிக் கொண்டு வருகிறது. பிரிட் டிஷ் ஆட்சியிலிருந்த அளவிற்குக்கூட இல்லாத அளவிற்கு முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி யில் வேலைவாய்ப்பில் 35% இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை இன்று 3.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது. 15 விழுக்காடாக இருந்த கிறித்தவர்களின் எண்ணிக்கை 1 விழுக்காடாகக் குறைந்துள்ளது. உயர்கல்வியில் முஸ்லிம்களின் நிலை மிகப் பரிதாபமாக உள்ளது. கல்வி நிலையங்களில் இடைநிற்றலின் (Dropouts) எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
சிறுபான்மை மக்கள் உணவுப் பழக்கத்திற்காகக் கொல்லப்படுகிறார்கள். உயர் கல்வி நிலையங்களில் பயிலும் சிலரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி வெறுப்பு உமிழப்படுகிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசுவோர் மீது வெறுப்பு விதைக்கப்படுகிறது. சிறுபான்மையினர் மீது நடத்தப் படும் தாக்குதல்களால் அவர்கள் பெரும் அச்சத் துடனும் பதற்றத்துடனுமே வாழ் கின்றனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இந்திய அரசு மதச் சிறுபான் மையினருக்கு எதிராகப் பாகுபாடுகள் காட்டு வதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த அமைப்பு நூறு நாடுகளில் மனித உரிமைகள் சார்ந்த நிகழ்வுகளைக் கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பின் ஆசிய துணை இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறுகையில், ‘பா.ஜ.க அரசின் பாரபட்சமான, பிரித்தாளும் கொள்கைகளால் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. அரசாங்க இயந்திரம் வன்முறையாளர்களைக் கேள்வி கேட்காமல், பாதிக்கப்பட்டவர்களையே தண்டித்து, கேள்வி எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது கவலையளிக்கும் விஷயம்’ என்றார்.
தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பேணிப் பாதுகாத்திட அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் 1989 டிசம்பர் 13 அன்று அமைக்கப்பட்டது. அதற்குப்பிறகு 2010ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் (2010) இயற்றப்பட்டதின்படி, இந்த ஆணையம், சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ் மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருத்தி அமைத்து 28.06.2021 முதல் செயல்பட்டுவருகிறது.
இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்குப் பல்வேறு உரி மைகளை வழங்கியுள்ளது. சிறுபான்மை ஆணையங்கள் மூலமாக சிறுபான்மையினர் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது போன்ற சிறுபான்மையினர் தினங்களை மக்களிடையே பரவலாகக் கொண்டு சென்று கடைப்பிடிக்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பையும், உரிமைகளையும் அறிந்து கொள்ள முடியும்.
அரசு செயல்படுத்துகிற திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வழிகள் ஏற்படும். சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் பொதுச்சமூகத்திற்கு அடையாளப்படுத்த முடியும். சிறுபான்மை மக்கள் இந்தியாவின் உயர்விற்கும், வலிமைக்கும் எப்போதும் துணையாகவே இருப்பார்கள் என்ற செய்தியை சிறுபான்மையினர் எதிர் மனோநிலையில் செயல்படும் பா.ஜ.க ஒன்றிய அரசிற்கு உரக்கத் தெரிவிக்கும் நாளாக இது அமையட்டும்!