நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘(எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு) விரைவாக நற்செயல் களைச் செய்து விடுங்கள். கரிய இருளின் துண்டு போல இருக்கும் அந்தக் குழப்பம் வருவதற்கு முன்பு! மனிதன் காலையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பான்; மாலையில் இறைநிராகரிப்பாளனாக ஆகி விடுவான். அல்லது மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பான்; காலையில் இறைமறுப்பாளனாக ஆகி விடுவான்.1 அற்பமான உலக சொகுசுகளுக்காக, இலாபங்களுக்காக அவன் தன்னுடைய மார்க்கத்தை விற்று விடுவான்.’2
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம்
1. இந்தக் குழப்பம் ஒளியை விழுங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஒரு மனிதர் காலையில் இறைநம்பிக்கையாளராக இருப்பார். ஆனால் அவர் மாலை வரையிலும் நம்பிக்கையாளராகவே இருப்பாரா, மாட்டாரா என்று சொல்ல முடியாது.
ஒரு மனிதர் மாலையில் இறைநம்பிக்கையாளராக இருப்பார். ஆனால் அடுத்த நாள் காலை வரை அவர் நம்பிக்கையாளராக இருப்பார் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இருக்காது.
எத்தகைய மாற்றம் உருவாகும் எனில் ஒருவர் காலையில் இறைநம்பிக்கையாளராகவும் மாலையில் இறைமறுப்பாளராகவும் இருப்பார். அல்லது மாலையில் இறைநம்பிக்கையாளராக இருப்பவரின் விடியல் இறைமறுப்புச் செய்தியுடன் விடியும். இறைநம்பிக்கையில் நிலைத்து நிற்கும் பண்பு இருக்காது. உயர் ஒழுக்கத்துடன், உயர்வான நடத்தையுடன் கூடிய மக்கள் இருக்க மாட்டார்கள்.
2. உலக மோகமும் அற்ப உலக இலாபங்களின் மீதான ஆசையும் எந்த அளவுக்கு மிகைத்தோங்கி இருக்கும் எனில், மக்களுடைய மனங்களில் மார்க்கத்துக்கு எவ்விதமான மதிப்பும் மரியாதையும் இருக்காது. உலக நலன்களுக்காக மக்கள் தமது மார்க்கத்தையும் நம்பிக்கையையும்கூட விலை பேசுவார்கள். உலக இலாபங்களை அடைவதற்காக தங்களின் மார்க்கத்தை விற்று விடுவதிலும் அவர்களுக்குத் தயக்கமோ அவமானமோ இருக்காது.