மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

மொகலாயப் பேரரசு -சில வரலாற்றுச் செய்திகள்
சேயன் இப்ராகிம், October 1-15,2026


மொகலாயப் பேரரசு
-சில வரலாற்றுச் செய்திகள்
சேயன் இப்ராகிம்

1526ஆம் ஆண்டு இந்தியாவில் மொகலாய வம்சத்தினரின் ஆட்சி நிறுவப் பட்டது. அந்த ஆட்சி நிறுவப்பட்டு 500 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தியாவில் மொகலாய ஆட்சியை நிறுவியவர் சுல்தான் ஸஹீருத்தீன் பாபர்.

துருக்கியிலுள்ள ஃபர்கனா என்ற ஊரில் 14.2.1483 அன்று பாபர் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் உமர் ஷேக் மிஸ்ரா. இவர் ஃபர்கனாவின் சுல்தானாக இருந்தார். பாபருக்கு 11 வயதிருக்கும் போதே இவர் இறந்து விட்டார். எனவே 11 வயதே நிரம்பியிருந்த பாபர் சுல்தானாக முடிசூட்டிக் கொண்டார்.

பாபர் துருக்கி இனத்தைச் சார்ந்தவர். தாயார் மங்கோலிய இனத்தைச் சார்ந்தவர். இந்த இனக் கலப்பில் பிறந்தவரே பாபர். பாபரின் குடும்பப் பெயர் முகல். இந்தக் குடும்பப் பெயரைக் கொண்டே மொகலா யர்கள் என அழைக்கப்பட்டனர். எனினும் மங்கோலியர்கள் என்ற பெயரே திரிந்து மொகலாயர் என்று ஆனதாகவும் சில வர லாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

ஃபர்கனாவின் சுல்தானான பாபர் சாமர்கண்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையில் பல தடவை அந்த நாட்டின் மீது போர் தொடுத்து இறுதியில் வென்றார். எனினும் அவரால் நீண்ட காலம் அங்கு ஆட்சி செலுத்த முடியவில்லை. உஸ்பெக் என்னும் இனத்தார் பெரும் படை திரட்டிக் கொண்டு வந்து போர் புரிந்து பாபரைத் தோற்கடித்து சாமர்கண்டைக் கைப்பற்றினர். இதனால் பாபர் சில காலம் தனது இராணுவத்தினருடன் ஒரு நாடோடியைப் போல் அலைந்து திரிய வேண்டியதாயிற்று.

இப்போது அவரது கவனம் காபூல் பக்கம் திரும்பியது. ஒரு பெரிய படையைத் திரட்டிக் கொண்டு சென்று போர் புரிந்து அதனைக் கைப்பற்றினார். தனது ஆட்சியை அங்கு நிறுவினார். பின்னர் அவரது கவனம் இந்தியா பக்கம் திரும்பியது. 1519ஆம் ஆண்டிலிருந்து நான்கைந்து முறை படை நடத்தி பஞ்சாப்பை வென்றார். அப்போது டெல்லியில் லோடி வம்சத்து மன்னரான இப்ராகிம் லோடி ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் இவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பல பிரபுக்கள் இவருக்கு எதிராக இருந்தனர். எனவே இவர்கள் படை நடத்தி வந்து இப்ராகிம் லோடியுடன் போர் புரியுமாறு பாபரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர். உதய்பூர் மன்னர் ராணா சங்ராம் சிங் என்பவரும் பாபருக்கு உதவி செய்வதாக வாக்களித்தார்.

இதனால் பாபர் படை நடத்திக் கொண்டு டெல்லியை நோக்கி வந்தார். பானிபட் என்ற இடத்தில் (இந்த நகரம் தற்போது ஹரியானாவில் இருக்கிறது) 21.4.1526 அன்று பாபரின் படைகளும், இப்ராகிம் லோடியின் படைகளும் மோதின. எண்ணிக் கையில் பாபரின் படையை விட இப்ராகிம் லோடியின் படை பெரிதாக இருந்தது. எனினும் பாபர் போரில் வெற்றி பெற்றார். இந்தப் போரின் போது பாபர், தன்னிடமிருந்த சக்தி வாய்ந்த பீரங்கிகளைப் பயன்படுத்தினார். இந்தியாவில் நடைபெற்ற போர்களில் பீரங்கிகள் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது இந்த முதலாம் பானிபட் போரில்தான். இந்தப் பீரங்கிப் படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இப்ராகிம் லோடியின் படைகள் சிதறி ஓடின. பாபர் வெற்றி பெற்றார். டெல்லியில் அரியணை ஏறினார்.

பாபருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மொகலாய மன்னர்கள்
பாபர் 1526-1530
ஹுமாயூன் 1530-1540 
அக்பர் 1556-1605
ஜஹாங்கீர் 1605-1627
ஷாஜஹான் 1627-1658
ஔரங்கஜேப்  1658-1707
   ஔரங்கஜேப் இறப்பிற்குப் பின்னர், மொகலாயப் பேரரசு சரிவடைய ஆரம்பித்தது. பேரரசின் எல்லைகள் சுருங்க ஆரம்பித்தன. ஔரங்கஜேப்பிற்குப் பிறகு 11 மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்கள் பெயரளவுக்கே மன்னர்களாக இருந்தனர். இரண்டாம் பகதூர் ஷாவோடு கி.பி.1858இல் மொகலாயப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

பாபரின் ஆட்சிக் காலம் தொடங்கி ஔரங்கஜேப் ஆட்சிக் காலம் வரை சுமார் 181 ஆண்டுகள் இந்தியாவின் பெரும் பகுதி அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதே காலகட்டத்தில் துருக்கியில் உதுமானிப் பேரரசு உலகின் பெரும் பகுதியை தனது ஆளுமையின் கீழ் கொண்டு வந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்துப் பெருமக்கள் பெரும்-பான்மை-யின ராக இருக்கின்ற ஒரு நாட்டையே தான் ஆழப் போகிறோம் என்பதை உணர்ந்திருந்தார். எனவே அந்த மக்களின் சமய உணர்வுகளைப் புண்படுத்தாத வண்ணம் ஆட்சி புரிய வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்-தது. பாபர் நான்கே ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். 1530ஆம் ஆண்டு மரணமுற்றார். இறப்பதற்கு முன்னர் பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தாவது :

‘மகனே! இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்கிறார்கள். இந்த நாட்டில் அரசாங்கம் உன்னிடம் ஒப்படைக் கப்பட்டிருப்பதற்கு மன்னருக்கும் மன்னராக இருக்கும் இறைவனுக்கு நீ நன்றி செலுத்த வேண்டும். கீழ்வரும் கடமைகளை நீ நிறை வேற்ற வேண்டும். 1. மதுணர்வுக்கு மதிப்புக் கொடு; மாச்சர்யங்களுக்கு உனது மனம் உட்பட அனுமதிக்காதே. 2. சார்பற்ற நீதி வழங்கு 3. பசுக்களைக் கொல்வதைத் தவிர்த்திரு 4. எந்தவொரு வழிபாட்டுத்தலத் øதயும் நீ சிதைக்கக் கூடாது. எப்போதும் நீதியை நேசிப்பவனாக இரு. அது மன்ன ருக்கும் மக்களுக்குமிடையே நல்லுறவைப் பராமரிக்கும். அதன் மூலம் பூமியில் அமைதியும் திருப்தியும் நிலவும் 5. இஸ் லாத்தைப் பரப்பும் பணியில் கட்டாயம் வேண்டாம். 6. ஷியாக்களுக்கும் சன்னி களுக்குமிடையே இருக்கின்ற வேறுபாடு களைப் புறக்கணித்து விடு; அலட்சியம் செய்யாதே. இல்லையெனில் அது இஸ்லாத் திற்குப் பலவீனத்தை ஏற்படுத்தும். 7. உனது குடிமக்களிடம் காணப்படும் பல்வேறு தனித்தன்மைகளைப் பார். ஓராண்டில் வருகின்ற பல்வேறு பருவங்களைப் பார். அது அரசு நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தாது.' இந்தக் கடிதம் பாரசீக மொழியில் எழுதப்பட் டிருக்கிறது. இது போபால் அரசு நூலகத்தில் இன்றைக்கும் உள்ளது.

புகழ்பெற்ற ஆறு மொகலாய மன்னர் களுள் பாபரும் ஔரகங்ஜேப்புமே சில வர லாற்றாசிரியர்களாலும் தற்போது நாட்டை ஆளுகின்ற இந்துத்துவவாதிகளாலும் தூற்றப் படுகின்றனர். பாபர், அயோத்தியிலிருந்து இராமர் கோயிலை இடித்து விட்டு அங்கு பள்ளிவாசல் கட்டினார் என்றும் ஔரங்கஜேப் இந்து சமய மக்களைத் துன்புறுத்தினார். மதச் சகிப்புத்தன்மை இல்லாதவர் என்றும் பழிக்கப்படுகின்றனர்.

பாபர் மீதான குற்றச்சாட்டுகள்
1528-1529ஆம் ஆண்டுகளில் பாபரின் ஆட்சியின் போது அயோத்தியில் ஆளுந ராக இருந்த மீர்பாகி என்பவர் அங்கு ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். இதற்கான கல் வெட்டு அந்தப் பள்ளிவாசலில் இருந்தது. ஆனால் இந்தப் பள்ளிவாசல் ஏற்கனவே அங்கு இருந்த இராமர் கோயிலை இடித்து விட்டுக் கட்டப்பட்டதாக 232 ஆண்டுகள் கழித்து இந்து மதத்தைச் சார்ந்த சிலர் உரிமை கொண்டாடினர். நாடு விடுதலைக்குப் பிறகு இந்தப் பிரச்னை பெரிய அளவில் விவாதப் பொருளாகி இந்துத்துவ சக்திகளால் இறுதி யாக 6.12.1992 அன்று அந்தப் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது மிகப் பிரம்மாண்டமான இராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாறு நாம் அறிந்ததே!

பாபர், அயோத்தியிலிருந்த இராமர் கோயிலை இடித்து விட்டு அங்கு பள்ளிவாசல் கட்ட தனது ஆளுநருக்கு உத்தரவிட்டிருந் தாரா? பிற சமய வழிபாட்டுத் தலங்களைச் சிதைக்கக் கூடாது என்று இறப்பதற்கு முன்னர் தனது மகன் ஹுமாயூனுக்குக் கடிதம் எழுதிய பாபர் இத்தகைய ஒரு செயலைச் செய்திருப்பாரா? எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தனது சுயசரிதையான பாபர் நாமாவில் அவர் அயோத்தியில் பள்ளிவாசல் கட்டப் பட்ட பிறகு அதாவது 1529ஆம் ஆண்டு அங்கு சென்றதாக எழுதி வைத்துள்ளார். அதில் அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்: ‘அவுத் (அயோத்தியாவின் அப்போதைய பெயர்), அதன் அருகிலுள்ள பகுதிகளின் அரசியல் பிரச்னைகளைச் சரி செய்-வதற் காகச் சில நாள்கள் தங்கியிருந்தேன். சரயு நதிக்கரையில் அவுத்துக்கு ஏழு அல்லது எட்டு கோஸ் தூரமாக புகழ்பெற்ற ஒரு கோட்டை மைதானம் இருக்கிறது. கோக்ரா, சரயு நதிகளின் கடவுத்துறை எப்படி இருக்கிறது என்று பார்த்து வர பீர் முகம்மது ஆலோபனை நான் அனுப்பினேன். அவனும் அந்த இடங் களுக்குச் சென்று வந்தான். 12ஆம் தேதி நான் வேட்டையாடச் சென்றேன்.'

தன்னுடைய சுயசரிதையில் அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டிருக்கும் பாபர், கோயிலை இடித்துப் பள்ளிவாசல் அயோத்தி யில் கட்டப்பட்டுள்ளது என்பதைப் பதிவு செய் யாமல் விட்டிருப்பாரா? எனவே அப்படி எது வும் அங்கு நடக்கவில்லை என்றே கூறமுடியும்.

அயோத்தியில் பாபரி மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குள் அதாவது 1575-76ஆம் ஆண்டுகளில் துளசி தாசர் என்பவர் இராமாயணக் காப்பியத்தைத் தன் பாணியில் எழுதினார். அது துளசி இராமாயணம் என அழைக்கப்படுகிறது. அவர் பெரிதும் வர்ணாசிரம தர்மத்தைப் பேணியவர். அயோத்தியில் ஏற்கனவே இருந்த இராமர் கோயில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மஸ்ஜித் கட்டப்பட்டிருந்ததால், அந்தச் செய்தியை தனது நூலில் எங்காவது ஒரு பகுதியில் நிச்சயம் குறிப்பிட்டிருப்பார். ஆனால் துளசி இராமாயணத்தில் அத்தகைய எந்தக் குறிப்பும் இல்லை.

மேலும் அவர் தீர்த்தராஜ் அதாவது தீர்த்த யாத்திரை போவதற்கான முதன்மையான இடம் என்று அயோத்தி-யைக் குறிப்பிட வில்லை. மாறாக அவர் பிரயாகையைக் குறிப்பிடுகிறார். (அலகாபாத் நகர்) இராமர் பிறந்த இடம் இருந்து, அதில் கோயில் கட்டப் பட்டிருந்து மக்கள் அங்கு சென்று வழிபாடு நடத்தி வந்திருந்தால் அந்த ஊரைத் தானே அவர் தீர்த்தராஜ் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்? ஆனால் இல்லை!

மன்னர் அக்பர் ஆட்சிக் காலத்திலிருந்த அபுல் பசல் எழுதியுள்ள அயினி அக்பரி என்ற நூலிலும் இது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அயோத்திக்கு வந்த வெளிநாட்டுப் பிரமுகர்களும் இது சம்பந்தமாக எந்தப் பதிவும் செய்யவில்லை. 1608இல் அயோத்திக்கு வந்த வில்லியம் பிஞ்ச் அயோத்தியிலிருந்த புத்த மதக் கோயில்களையும், பிற வழிபாட்டுத் தலங்கள் பற்றியும் கூறியுள்ளார். ஆனால் பாபரி மஸ்ஜித் கோயிலை இடித்துத்தான் கட்டப்பட்டது என்று எதுவும் எழுதவில்லை. சுஜன் ராய் பந்தாரி என்பவர் எழுதியுள்ள (1695-96) குலசதுத் தவாரிக் என்ற நூலிலும், 1759-60களில் சதுல்மான் என்பவர் எழுதிய சகர் குல்ஷன் என்ற நூலிலும் அயோத்தி பற்றி வருகிறது. ஆனால் அங்கு இராமர் கோயில் இருந்ததாகவோ, அது இடிக்கப்பட்டு அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாகவோ எந்தக் குறிப்புகளும் இல்லை.

எனவே கி.பி. 1528 முதல் 1760 வரை 232 ஆண்டுகள் காலக்கட்டத்தில் இதற்கு எவ்வித சமகால வரலாற்று ஆதாரமும் இல்லை. அதற்குப் பிறகு தான் மெல்ல மெல்ல இந்த இடிப்புக் கதையைச் சொல்ல ஆரம்பித்தனர். பின்னர் வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்து - முஸ்லிம்களைப் பிரித்தாளுகின்ற வேலைகளில் ஈடுபட்டனர்.

எனவே பாபர் தனது ஆட்சிக் காலத்தில் அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து விட்டு அந்த இடத்தில் பள்ளிவாச கட்ட உத்தரவிட்டார் என்பதற்கு எந்தவிதமான வரலாற்று ஆதாரங்களும் இல்லை!

(தொடரும்)

 

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்