
கோவை மாநகரில் இயங்கி வரும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் 6-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 2026 ஜனவரி 26ஆ-ம்-நாள் நடைபெற்றது. ஹிதாயா மாணவி அஸ்மி-தா பர்வீன் திருமறை ஓதலுடன் நிகழ்வு தொடங்கியது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ தலைமை தாங்கினார்.
ஹிதாயா மாணவிகள் கல்வியின் சிறப்புகளைக் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினர்.ஆடம்பரத் திருமணம் குறித்த விழிப்பு உணர்வு நாடகம்,ஃபலஸ்தீன் குறித்த நாடகம் மாணவிகளின் அரபி மொழித் திறனை வெளிப்படுத்தும் வகையில் அரபியில் அரங்கேறியது.சரளமான உச்சரிப்பு,பொருள் நிறைந்த வசனங்கள்,அரபி மொழியில் மாணவிகள் பெற்றுள்ள தேர்ச்சியை வெளிப்படுத்தியது.மாணவிகளே இயக்கி,பாடி,அமைத்த ஹிதாயா பாடல் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சாதத்துல்லாஹ் ஹுஸைனி சிறப்புரையாற்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் S.N.சிக்கந்தர் மொழிபெயர்த்தார்.பெண்கள் அறிவிலும்,ஒழுக்கத்திலும்,சமூக சேவையிலும் முன்னிலை வகிக்க வேண்டிய அவசியத்தைத் தமது உரையில் வலியுறுத்தியதுடன் இது கல்வியின் முடிவு அல்ல தொடக்கம் என்பதை எடுத்துரைத்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய பொதுச்செயலாளர் ஆரிஃப் அலீ தமது வாழ்த்துரையில்,‘மனிதன் இறை வனின் பிரதிநிதி.மனிதன் பூவுலகிற்கு வருவதற்கு முன்பே உணவு, குடிநீர், காற்று போன்ற அனைத்து வசதிகளையும் இறைவன் ஏற்பாடு செய்து வைத்தான்.சில விஷயங்களை மட்டும் மனிதனிடமிருந்து மறைத்து வைத்தான். மனிதனை பூவுலகின் பிரதிநிதியாக நியமித்து,பகுத்தறிவை அளித்தான்.மனிதன் தனது அனுபவங்கள்,சிந்தனை,ஆராய்ச்சி மூலம் புதிய கலாச்சாரங்கள்,நாகரிகங்கள்,கண்டுபிடிப்புகளை உருவாக்கினான்.அதையே நாம் அறிவியல் என்றும்,அதன் பயன்பாட்டை தொழில்நுட்பம் என்றும் அழைக்கிறோம்.
ஆனால் சில கண்டுபிடிப்புகள் மனித சமுதாயத்திற்கு நன்மை அளிப்பதை விட அழிவை அதிகம் கொண்டு வந்துள்ளது.ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு,பல தலைமுறைகள் கடந்தும் மனிதர்களைப் பாதித்து வருவது இதற்குச் சான்று.இத்தகைய அழிவுகளிலிருந்து மனிதனைக் காக்க,இறைவன் தனது தூதர்களின் மூலம் வேதங்களை வழங்கினான்.அதில் இறுதி வேதமே திருக்குர்ஆன்.ஒருவர் அறிவியல் கண்ணோட்டத்துடன் குர்ஆனை வாசித்தால் அதற்கான வழிகளை அது காட்டும்.ஒருவர் ஏதேனும் ஒரு துறையைக் கற்றபின் குர்ஆனை வாசித்தால் அந்தத் துறைக்கான ஒழுங்கும்,சட்டவியலும்,வழிகாட்டலும் கிடைக்கும்.இதன் மூலம் மனிதன் கண்டு பிடிப்புகளை அழிவிற்கல்ல, ஆக்கப்பூர்வமான நன்மைக்காகப் பயன்படுத்த முடியும்.
இங்கே பட்டம் பெறும் மாணவிகள் திருக்குர்ஆனை முறையாகக் கற்றவர்கள்.இவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தால்,அவர்கள் சிறந்த ஒழுக்கமும்,அறிவும் கொண்ட மனிதர் களாக சமுதாய நலனுக்காகச் செயல்படுவார்கள்' எனக் குறிப்பிட்டார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் உமர் ஃபாரூக் நன்றியுரை ஆற்றினார்.இந்த நிகழ்வில் மாணவிகள்,ஆசிரியர்கள்,ஆலிம்கள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் திரளாகக் கலந்து சிறப்பித்தனர்.
தொகுப்பு : ஆலிமா சலீனா பாரி