
2020ஆம் ஆண்டு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை(CAA) எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு உமர் காலிதும் சர்ஜுல் இமாமும் தலைமை ஏற்றிருந்தனர். இந்தப் போராட்டம் மிக அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, வடகிழக்கு டில்லியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது இந்துத்துவவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது ஒரு பெரும் வகுப்புக் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்திலும், அதனை அடக்க டெல்லி காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும்53 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் 36 பேர் முஸ்லிம்கள்.முஸ்லிம்களின் வணிக நிறுவ னங்கள் தாக்கப்பட்டு சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. பல முஸ்லிம்களின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. 23.2.20 அன்று தொடங்கிய இந்தக் கலவரம் 29.2.20 வரை நீடித்தது. ஆனால், காவல் துறையினர் பெரிதும் பாதிப்பிற்குள்ளான முஸ்லிம்களையே கைது செய்து வழக்குப் போட்டனர்.
இந்த நிலையில் இந்தக் கலவரத்தை ஏற்படுத்தச் சதி செய்ததாகவும், மூளையாக இருந்து செயல்பட்டதாகவும் மாணவர் தலைவர்களான உமர் காலிதும், சர்ஜுல் இமாமும் இன்னும் ஐந்து முஸ்லிம் இளைஞர்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களை பிணையில் விடுதலை செய்யக் கோரி இவர்கள் தாக்கல் செய்த பிணை மனுக்களை விசாரணை நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
விசாரணைக் கைதிகளாக சிறையி லேயே வைக்கப்பட்டிருந்த இந்த எழுவரும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில், பிணை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினர்.சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த பிணை மனுக்களை விசாரித்தஉச்ச நீதிமன்ற நீதிபதிகள், உமர் காலிதும், சர்ஜுல் இமாமும் தாக்கல் செய்த பிணை மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
எனினும், மற்ற ஐந்து பேருக்கும் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்கி உத்தரவிட்டனர். இது ஒரு ஆறுதலான செய்தியாகும்.'ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டு உங்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டால் நீங்கள் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த காலம் கழிக்கப்பட மாட்டாது' என்ற ஒரு வினோதமான நிபந்தனையையும் நீதிபதிகள் விதித்துள்ளனர். இது நீதித்துறை வரலாற்றில் இதுவரை யாரும் வழங்காத நிபந்தனையாகும்.
இந்த வழக்கில் ஐந்தரை ஆண்டுகள் கடந்த பின்னரும், விசாரணை இதுவரை தொடங்கப்படவில்லை. 700க்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட உள்ளனர். இவர்களையெல்லாம் விசாரித்துத் தீர்ப்பு வழங்க விசாரணை நீதிமன்றத்திற்கு ஆண்டுகள் பல பிடிக்கும். விசாரணையில் ஏற்பட்டுள்ள தாமதத்தைச் சுட்டிக் காட்டியே இவர்கள் தங்களுக்கு பிணை வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் முறையிட்டனர். எனினும், தாமதத்தைக் காரணம் காட்டி பிணை கோர முடியாது என நீதிபதிகள் கூறி இவர்களின் பிணை மனுக்களை நிராகரித்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரிவு 43இன் படி, மேலெழுந்த வாரியாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகள் திருப்தியடைந்தால், பிணை மனுக்களை நிராகரிக்க முடியும். இந்த விதியினைச் சுட்டிக் காட்டியே நீதிபதிகள் பிணை வழங்க மறுத்துள்ளனர். இந்த இருவரும்தான் கலவரம் ஏற்படுத்தச் சதி செய்துள்ளனர் என்று குற்றச்சாட்டு இருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், மற்றவர்கள் சதிச் செயலில் ஈடுபடவில்லை. எனவே அவர்களுக்குப் பிணை வழங்குகிறோம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
பிணை என்பது உரிமை. சிறை என்பது விதிவிலக்கு என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கி யுள்ளனர். ஆனால், இந்த விதி இந்த இருவருக்கும் பொருந்தாது போலும்!
ஐந்தரை ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த வழக்கில் இதுவரை விசாரணை தொடங்கப்படவில்லை. விசாரணைக் கைதியாகவே இவர்கள் ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுகின்றனர். அவர்களது இளமைக் காலத்தின் கால் பகுதி சிறையிலேயே கழிந்து விட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இவர்கள் சிறையில் இருப்பர்? விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகி, இறுதியில் அவர்கள் நிரபராதிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அவர்கள் அடைந்த இன்னல்களுக்குப் பரிகாரம் என்ன? இந்த விஷயங்களையெல்லாம் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. எனினும், பல சட்ட நிபுணர்களும், மனித உரிமையாளர்களும் இவர்களுக்கு பிணை வழங்கப்படாததைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். 15.1.26 இந்து ஆங்கில நாளிதழில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கௌதம் பாட்டியா இது குறித்து எழுதியுள்ள கட்டுரையில் இந்தத் தீர்ப்பு அநீதியானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த இருவருக்கும் பிணை வழங்க மறுத்த நீதிபதிகள் இன்னும் ஓராண்டு கழிந்த பின்னரே இவர்கள் மீண்டும் பிணையில் மனுக்களைத் தாக்கல் செய்ய முடியுமென்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். எனவே இவர்கள் இருவரும் பிணையில் வெளிவர இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். அப்போதாவது நீதிபதிகள் பிணை வழங்குவார்களா? இவர்களுக்கு நீதி கிடைக்குமா?
இந்தத் தருணத்தில் 2020ஆம் ஆண்டு, வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைக் கருத்துகளைத் தெரிவித்த ஒன்றிய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர், இரவோடு இரவாக சண்டிகார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதும், அதன் பின்னர் அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை எதுவும் பதியப்படாமல் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதும் நமது நினைவுக்கு வருகின்றது. அந்த நீதிபதியும் பழி வாங்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்திற்குத் தன்னை மாறுதல் செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கு
மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள ஒரு தூணில் கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்திருந்தார். இந்தத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசும், அறநிலையத்துறையும், தர்கா நிர்வாகமும், இன்னும் சில பொது நல அமைப்புகளும் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுக்களை அதே நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்தத் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். இந்தத் தீர்ப்பு அநீதியானது எனப் பல சட்ட நிபுணர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்கள் எழுப்பிய பல்வேறு வாதங்களை நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர். இதற்கு முன்னர், இந்தப் பிரச்னை குறித்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளையும் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவர்கள்கவனத்தில் கொள்ளவில்லை.
தர்காவுக்கு அருகிலுள்ள தூண் கோயிலுக்குச் சொந்தமானது. எனவே அங்கு தீபம் ஏற்றுவதற்குத் தடை இல்லை. ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பினை இந்த இரு நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எந்தக் காலத்திலும் அந்தத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இப்போது ஏன் ஏற்ற வேண்டும் என்ற கேள்விக்கும் நீதிபதிகளிடம் பதில் இல்லை. ஏற்கனவே கோயில் நிர்வாகத்தால் மலையின் உச்சியிலுள்ள பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுகின்ற போது, இன்னொரு இடத்தில் இரண்டாவதாக ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கும் நீதிபதிகள் பதில் அளிக்கவில்லை.
இதுவரை இல்லாத ஒரு புதுப் பழக்கத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. தர்கா-வுக்கு அருகில் அந்தத் தூண் இருக்கின்றது என்பதற்காகவே இந்துத்துவா அமைப்பினர் அங்கு தீபம் ஏற்ற முனைகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தர்காவுக்கு அருகில் பிரச்னையை ஏற்படுத்த நினைக்கின்றனர். இதனையும்கூட நீதிபதிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பில், அந்தத் தீபத்தூண் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இருக்கிறது. எனவே தர்கா நிர்வாகம்அதனை ஆக்கிரமிப்புச் செய்யாவண்ணம் பாதுகாப்பதற்காக அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். (Justice Swaminathan said, 'It is, therefore,necensary that the temple management remains vigilant to foil any attempt to encroach on itsproperty. This can be done only by regular and periodic assertion of title. It is not a matter of religious tradition alone. At least for the sake of protecting its property, the temple managementis obliged to light the festival lamp at the derpath oon.' He directed the temple management tolight the Karthigai Deepam at the deepathoon, be sides the usual places, on December 3.)
அந்தத் தூணில் முன்பு தீபம் ஏற்றப்பட்டது. எனவே மீண்டும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென இந்துத்துவாவைச் சேர்ந்தவர் வழக்குத் தொடுக்கிறார். ஆனால், அந்தத் தூணில் இதற்கு முன்னர் எப்போதும் தீபம் ஏற்றப்பட்டதற்கான சான்றுகளை மனுதாரரால் சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே நீதிபதி, கோயில் இடத்தைப் பாதுகாப்பதற்காக அந்தத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடுகின்றார்.
எதற்காக அந்தத் தூண் இருக்கும் இடத்தை தர்கா நிர்வாகம் ஆக்கிரமிக்க வேண்டும்? இதற்கு முன்பு தர்கா நிர்வாகம் அதனை ஆக்கிரமிக்கின்ற முயற்சிகளில் எப்போதாவது ஈடுபட்டிருந்ததா? ஒன்றுமே இல்லை! அனுமான அடிப்படையிலேயே தனி நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார். அதனை இரு நீதிபதிகள் அமர்வும் ஏற்றுக் கொள்கிறது. எனவே இந்தத் தீர்ப்புகள் இந்து சமயச் சட்டங்களை காப்பாற்றுவதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. மாறாக சொத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற ரீதியில் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே கருத வேண்டியதிருக்கிறது.
தனி நீதிபதியின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும், அப்படிச் செய்யாது சட்ட ஒழுங்குப் பிரச்னையைக் காரணம் காட்டி தமிழக அரசு அரசியல் செய்வதாகவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சட்ட ஒழுங்கும், நல்லிணக்கமும் கெடும் என்று கருதியே தமிழக அரசு இந்த விஷயத்தில் செயல்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் உள்ளன.
இது தொடர்பான இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டியதிருக்கிறது. சிக்கந்தர் தர்கா கட்டப்பட்ட காலத்திலிருந்தே அங்கு கந்தூரியின் போதும் சரி, பிற நாள்களிலும் சரி ஆடு, கோழிகளை அறுத்து நேர்ச்சை செய்யும் பழக்கம் இருந்து வருகின்றது. இதனைத் திருப்பரங்குன்றம் மக்கள் அனைவரும் அறிவர். அவர்களே அதற்குச் சாட்சி. எனினும், இந்துத்துவா அமைப்புகள் தர்காவில் ஆடு, கோழிகளை அறுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கில் நீதிபதிகள் நிஷா பானுவும், ஸ்ரீமதியும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினர். நீதிபதி நிஷா பானு ஆடு, கோழிகளை அறுக்கத் தடையில்லை என்று தீர்ப்பளித்த நிலையில் நீதிபதி ஸ்ரீமதி ஆடு கோழிகளை அறுக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தார்.
இந்த மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக வழக்கு மூன்றாவது நீதிபதிக்குச் சென்றது. மூன்றாவது நீதிபதியான விஜயகுமார்
நீதிபதி ஸ்ரீமதிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். எனவே 2:1 என்ற அடிப்படையில் சிக்கந்தர் மலையில் ஆடு, கோழிகளை அறுக்கத் தடை விதிக்கப்பட்டது. எனினும் நீதிபதிகள் தர்கா நிர்வாகம் உரிமையில் நீதிமன்றத்தை அணுகி, தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்து (அதாவது ஆடு, கோழிகளை அறுத்து நேர்ச்சை செய்த-தற்கான ஆதாரங்களை) நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்புகளில் காணப்படும் விநோதம் என்னவென்றால், பன்னெடுங்காலமாக சிக்கந்தர் தர்காவில் நிலவி வந்த ஆடு, கோழிகளை அறுக்கும் பழக்கத்திற்குத் தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்படுகிறது என்பதேயாகும்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. திருப்பரங்குன்றத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலுமுள்ள பெரும்பான்மை சகோதர இந்து சமய மக்களும் நியாயத்தின் பக்கம் நிற்பது ஆறுதல் அளிக்கிறது.