
2026 ஜனவரி 24,25,26 ஆகிய மூன்று நாள்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ் மாநில உறுப்பினர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.இதில் தமிழ்நாடு, புதுச்சேரியிலிருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர்,பொதுச் செயலாளர்,மாநிலத் தலைவர், பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்.
திருச்சி அஸ்ஸலாம் அரபிக் கல்லூரி துணை முதல்வர் மௌலவி ஜாஃபர் சாதிக் மன்பயீ திருமறை விரிவுரையுடன் மாநாடு தொடங்கியது.ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ தொடக்க உரையாற்றினார்.இந்தியாவின் வளர்ச்சியில் ஜமாஅத்தின் பங்களிப்பு குறித்து அகில இந்தியத் தலைவர் சையத் சாதத்துல்லாஹ் ஹுஸைனி ஆற்றிய உரையை மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் மொழிபெயர்த்தார்.தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது.
அறிக்கை ஆய்வு அமர்வு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பணிகள்,களங்கள்,மகளிர் அணி குறித்து மாநில அமைப்புச் செயலாளர் K.ஜலாலுத்தீன்,மாநிலத் துணைத்தலைவர்கள் யூசுஃப் பாஷா, I.ஜலாலுத்தீன்,மாநில மகளிர் அணிச்செயலாளர் ஃபாத்திமா ஆகியோர் விளக்கினர்.
சிறப்புரைகள்
வலுவான இயக்கத்திற்கு வலிமையான உறுப்பினர்களின் அவசியம் குறித்து அகில இந்திய பொதுச் செயலாளர் ஆரிஃப் அலீ மலையாளத்தில் ஆற்றிய உரையை ஆசிரியர் சலீம் தமிழில் மொழிபெயர்த்தார்.வாசிப்பு குறித்து டாக்டர் முஹையதீனும்,இயக்க முன்னோடிகள் குறித்து அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்வும்,இயக்கமும் குடும்பமும் என்ற தலைப்பில் சென்னை மாநகரத் தலைவர் அதாவுல்லாஹ்வும்,குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்களை கோவை பெரு நகரத் தலைவர் உமர் ஃபாரூக்கும்,ஃபிக் ஹுஸ் ஸீரா என்ற வரலாற்றுரையை திருச்சி அஸ்ஸலாம் அராபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரியும்,உளத்தூய்மை என்ற தலைப்பில் மௌலவி முஹம்மத் இஸ்மாயீல் இம்தாதியும் சிறப்புரை நிகழ்த்தினர்.
தாக்கம் ஏற்படுத்திய கிளைகள்
சமுதாயத்தில்,சமய நல்லிணக்கப் பணிகளில்,மகளிர் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்திய கிளைகள் குறித்த கருத்தரங்க நிகழ்வில் எண்ணூர் கிளைத் தலைவர் மஹபூப் பாஷா,மன்னார்குடி கிளைத் தலைவர் மன்சூர்,புரைசைவாக்கம் கிளைத் தலைவர் ஹாஷிம் பாஷா,திருப்பத்தூர் கிளைத் தலைவர் மௌலவி சமியுல்லாஹ் உமரி,கோவை மத்திய கிளைத் தலைவர் பீர் முஹம்மது,துவரங்குறிச்சி கிளைத் தலைவி ரிள்வானா ஆகியோர் கருத்துரை வழங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஷப்பீர் அஹமத் தலைமையேற்று நிகழ்வை நடத்தி கருத்துரை வழங்கினார்.
கருத்தரங்கங்கள்
தமிழ்நாட்டுச் சூழலில் அழைப்புப் பணி,முஸ்லிம் சமுதாயமும் ஜமாஅத்தின் பங்களிப்பும் குறித்த கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன.இதில் வி.எஸ்.முஹம்மத் அமீன்,P.முஹம்மத் யூசுஃப்,S.N.சிக்கந்தர்,முனைவர் ஹஜ் முகையதீன் ஆகியோர் கலந்து கருத்துரை வழங்கினர்.
மாநிலத் தலைவரின் நிறைவுரையுடன் மூன்று நாள் மாநாடு நிறைவு பெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகள்
மாநாட்டிற்கான அரங்கு அமைப்பு,காட்சிப் பதிவுகள்,உணவு ஏற்பாடு,தங்கும் வசதிகள்,தொழுகைக்கான ஏற்பாடுகள் என ஒவ்வொன்றையும் கோவை மாநகரத் தலைவர் P.S.உமர் ஃபாரூக் தலைமையிலான குழு மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
கவி ராத்திரி
இரண்டு நாள் இரவுகளிலும் தமிழ்,உருது மொழிகளில் இலக்கிய அமர்வு நடைபெற்றது.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் தலைமை தாங்கிய இலக்கிய அமர்வுகளில் நம்ம வாசல் சையத் இப்ராஹீம்,ஃபைசல்,ரஃபீ அஹமது,ஹாமீம் நதீம்,இர்ஷத் கான் உமரி,வி.எஸ்.முஹம்மத் அமீன் உள்ளிட்ட பலரும் கவிதைகள்,பாடல்கள் பாடி இலக்கிய விருந்தளித்தனர்.
மக்கள் தேர்தல் அறிக்கை,ராபித்தா மின்னிதழ் வெளியீடு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தயாரித்த மக்கள் தேர்தல் அறிக்கையும்,ஜமாஅத்தின் அறிஞர் பிரிவான ராபிதத்துல் உலமா தயாரித்த ராபித்தா மின் இதழும் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன.