மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

எப்ஸ்டீன் கோப்புகள் சொல்லும் செய்தி
வி. எஸ். முஹம்மத் அமீன் , Feb 16-28


2026 ஜனவரி 30ஆம் நாள் அமெரிக்க நீதித்துறை(DOJ) வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள்(Epstein Files) உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.2025 டிசம்பர் 19ஆம் நாள் 3965 கோப்புகள் தி எப்ஸ்டீன் லைப்ரரி என்ற பெயரில் வெளியானதைத் தொடர்ந்து டிசம்பர் 23இல் 30 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட 11 ஆயிரம் கோப்புகள் வெளியானது. மீண்டும் ஜனவரி 30இல் 30 இலட்சம் பக்க ஆவணங்கள் 2000 வீடியோக்கள், 1.8 இலட்சம் புகைப்படங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு உள்ளது. இதில் மின்னஞ்சல்கள், உரையாடல்கள், விமானப் பயணங்கள் உள்ளிட்ட பல தரவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

தனித் தீவு, தனி விமானம் மூலம் சிறுமிகளைக் கடத்தி பாலியல் வேட்டையில் ஈடுபட்டு வந்த ஆள் கடத்தல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தவர்கள்
சாமானியர்களல்ல.வல்லாதிக்க நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள், உலகப் பணக்காரர்கள், அறிவுஜீவிகள்,புகழின் உச்சியில் இருப்பவர்கள் என்ற செய்தி இது பாலியல் குற்றம் தொடர்பானது மட்டுமல்ல ஆயுத வியாபாரம், வெளியுறவு நடவடிக்கைகள்,உலக அரசியல், ஆட்சித் தலையீடு,பொருளாதாரச் சூதாட்டம் என்று இந்த வலை இன்னும் விரிந்து கொண்டே செல்வதை உணர்த்துகிறது.

எப்ஸ்டீன் பாம்பீச் இல்லத்தில் 14 வயதான தங்கள் மகளைச் சீரழித்ததாக புளோரிடா காவல் நிலையத்தில் 2005ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து எப்ஸ்டீன் 2008இல் கைது செய்யப்பட்டு விடுதலையாகி,2019 ஜூலை 6ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டு 2019 ஆகஸ்ட் 10ஆம் தேதி சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்தக் கொடூரங்களுக்குத் துணை நின்ற கிஸ்லைன் மேக்ஸ்வெல் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து வெளிவந்துகொண்டே இருக்கும் செய்திகள் நம்மை பெரும் கவலையிலும்,வியப்பிலும் ஆழ்த்துகிறது.ஆட்சியாளர்கள்,செல்வந்தர்கள்,அறிவு
ஜீவிகள் என அனைவரையும் ஓர் இடைத்தரகர் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறான் என்பது எவ்வளவு கசப்பான செய்தி.

இதயத்தைக் கசக்கிப் பிழியும் இந்தக் கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்களும்,அதற்குத் துணை நின்றவர்களும் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்
பட வேண்டும்.சின்னஞ் சிறு சிறுமிகளுக்குப் பாதுகாப்பில்லாத உலகில் பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்யப் போகிறோம்? மது,போதை,ஆபாசம்,பாலியல் வெறி,வரம்புமீறல்,அதிகார மமதையின் பிடியிலிருந்து உலகைக் காக்க நம்மிடம் என்ன திட்டம் இருக்கிறது?

ஒழுக்க மாண்புகளைப் போதிப்பதைப் பிற்போக்குத் தனமாகப் பார்ப்பதும் கட்டற்ற சுதந்திரமும் எத்தகையை அவலத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.இறையச்சமும், இறைவனின் திருமுன் ஒருநாள் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு தண்டைனைக்கு ஆளாவோம் என்ற அச்ச உணர்வும்,கணக்குக் காட்ட வேண்டும் என்ற கவலையும் இல்லாதவர்களிடம் ஆட்சியும்,பணமும், அதிகாரமும்,அறிவும் இருந்தால் என்னவாகும் என்பதைத்தான் எப்ஸ்டீன் கோப்புகள் நமக்கு அழுத்தமாகச் சொல்கின்றன.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்