மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

பதவி விலகல் மட்டுமே தீர்வாகுமா?
வி.எஸ்.முஹம்மத் அமீன் , October 16-31,2026


தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணி (SIR) நிறைவுற்ற நிலையில் 13.39 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) நாளிதழின் புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் மீட்டெடுப்பது போன்ற முக்கிய முடிவுகளில் தங்களது ஒப்புதல் பெறப்படவில்லை. புதிய வாக்காளர் சேர்க்கைக்கான பயன்பாட்டுப் படிவம் 6 (Form 6) நடைமுறைகளில் எவ்வித சட்டப்பூர்வ அதிகாரமுமின்றி தன்னிச்சையாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. SIR நடைமுறையின் பல முக்கிய முடிவுகள் தங்களுக்குத் தெரியாமல், கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பன போன்ற ஆட்சேபனைகளைத் தேர்தல் ஆணையர்கள் முன்வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், SIR மூலம் நீக்கப்பட்ட 13.39 கோடி வாக்காளர்களைப் பட்டியலில் மீண்டும் சேர்க்கக் கோரியும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் அக்டோபர் 6ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் ஜனநாயக கட்சி சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் யூடியூபர் துருவ் ரத்தி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு ஏற்பட்டுள்ள நிலையில் இதனை முடக்க ஒன்றிய அரசு பல வகைகளிலும் முயற்சி செய்து வருகிறது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குற்றம் சாட்டினார். அது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள், ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6 தவறாகப் பயன்படுத்தப்படுவது போன்ற ஐந்து வகைகளில் வாக்குகள் திருடப்படுவதாகக் கூறி அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தார்.

‘நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநில முதல்வர்களும் சட்டவிரோதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே மக்களவை, அனைத்து மாநில சட்டப்பேரவைகளையும் உடனடியாகக் கலைத்து விட்டு, வாக்குச்சீட்டு (Ballot Paper) முறையில் மீண்டும் புதிய தேர்தல்களை நடத்த வேண்டும்’ என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பார். இந்த நடைமுறையை மாற்ற தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் - 2023ஐ ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டு அவருக்குப் பதில் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒன்றிய அமைச்சர் சேர்க்கப்பட்டார். இதனால் தங்கள் விருப்பத்திற்கிணங்கச் செயல்படுபவரைத் தேர்தல் ஆணையராகக் கொண்டு வர பாஜக திட்டமிட்டது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்தான் ஞானேஷ் குமார்.

இப்போது எழுந்துள்ள பிரச்சினை அசாதாரணமானது. இந்திய ஜனநாயகத்தையும், மக்களாட்சித் தத்துவத்தையும் குழிதோண்டிப் புதைக்கக் கூடிய செயல். தேர்தல் முறை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மக்களாட்சியின் அடிப்படையையே ஆட்டம் காண வைத்திருக்கும் இந்தக் கொடுங்குற்றம் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தண்டனை பெற வேண்டும். ஆனால் இது மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகிவிடாது.

SIR ரத்து செய்யப்பட்டு நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். EVM முறைக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் - 2023 ரத்து செய்யப்பட வேண்டும். மீண்டும் பழைய முறையிலேயே தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனாலும் கூட பாஜக அரசில் நீதிபதிகள் மீதே பல ஆட்சேபனைகள் எழுந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் கூட தங்களது ஒப்புதல் இல்லாமல் படிவம் 6இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய உச்ச நீதிமன்றம் ஒருமித்த கருத்து இல்லாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் எந்த முடிவும் எடுப்பதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சட்டத்திற்குப் புறம்பானது எனத் தெரியவந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக 42 முன்னாள் நீதிபதிகள் கடிதம் கொடுத்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

நேர்மையான ஆட்சியாளர்களால் மட்டுமே மக்களாட்சியைப் பாதுகாக்க முடியும். தீய நோக்கங்களுடனும், திட்டங்களுடனும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் பாஜக அரசு அகற்றப்பட்டு அனைத்துத் துறைகளிலும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தல் ஆணையர் பதவி விலகுவது மட்டுமே தீர்வாக அமையாது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்