அசாமில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்து தண்ணீரில் மூழ்கும் வாகனத்தில் சிக்கியிருந்த 7 பேரை இமாம் அப்துல் பாஸித் காப்பாற்றிஉள்ளார்.
அசாம் மாநிலத்தின் பூமி மாவட்டத்தில் 2025 டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. வாகனத்தின் கண்ணாடிகள் மூடியிருந்த நிலையில் வாகனம் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது.
விபத்துச் சப்தம் கேட்டு அருகில் இருந்த பள்ளிவாசலின் இமாம் அப்துல் பாஸித் வெளியில் வந்து பார்த்து அதிர்ச்சியுற்றார். உடனே பள்ளிவாசலின் பாங்கு சொல்லும் ஒலிபெருக்கியில் கிராம மக்களை அழைத்தார். இதையடுத்து சில நிமிடங்களில் அங்கு ஓடி வந்த கிராம மக்கள் குளத்தில் குதித்து வாகனத்தில் சிக்கியிருந்த 7 இந்துச் சகோதர, சகோதரிகளையும் உயிருடன் மீட்டனர்.
அசாமின் சில்சாரில் இருந்து திரிபுரா நோக்கிச் செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சற்று நேரம் தாமதித்திருந்தாலும் ஏழுபேரும் உயிரிழந்திருப்பார்கள். உரிய நேரத்தில் இமாம் அப்துல் பாஸித் எடுத்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
இமாம் அப்துல் பாஸித்தை கவுரவிக்க உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்க உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.