மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

மக்கள் தேர்தல் அறிக்கை
-பத்திரிகையாளர் சந்திப்பு, Feb 16-28


பிப்ரவரி 06ஆம் நாள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு சார்பாக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ அறிக்கையின் நோக்கம் குறித்துப் பேசும்போது ‘மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையாகத் திகழும் தேர்தல் நீதியான,நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்பதை முதலில் நாங்கள் வலியுறுத்துகின்றோம். வாக்குரிமை என்பது ஜனநாயகக் கடமை.அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.எனவே நூறு விழுக்காடு வாக்குச் செலுத்துதல் என்பதைக் குறித்து மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

நாம் உரிமையைப் பெறுவதற்கே இந்தக் கடமையைச் செய்கிறோம்.எனவே உரிமையை விற்று விடக் கூடாது.ஓட்டுச் செலுத்த பணம் கொடுப்பது எப்படி குற்றமோ அதுபோல வாங்குவதும் குற்றமே என்பது குறித்தும் நாங்கள் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மக்கள் நல அரசுக்கான அடிப்படைத் தேவைகளை நாங்கள் இந்த அறிக்கையின் மூலம் முன் வைக்கின்றோம்.நாங்கள் விரும்புவது விழுமம் சார்ந்த அரசியல்.எனவேதான் விழுமம் சார்ந்த அரசியலுக்கான நோக்கங்களை இந்தத் தேர்தல் அறிக்கையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

இது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேர்தல் அறிக்கை அல்ல.மக்களின் தேர்தல் அறிக்கை.இன்னும் சொல்வதானால் இது முஸ்லிம்களின் கோரிக்கை அல்ல.மக்களின் கனவு, விருப்பம்,இலட்சியம்,எதிர்பார்ப்பு,திட்டம்தான் இந்த அறிக்கை.நாங்கள் ஒரு குழுவை அமைத்து அந்தக் குழு மக்களைத் துறைவாரியாகச் சந்தித்து,கருத்துகளைக் கேட்டறிந்து, அந்தக் கருத்துகளை ஆய்வு செய்து அந்த அடிப்படையிலே இதனைத் தயாரித்துள்ளோம்.

இது புதிதாக இந்தத் தேர்தலுக்காக மட்டும் தயாரிக்கப்பட்டது அல்ல.ஒவ்வொரு மக்களவை,மாநிலங்களைவைத் தேர்தலின் போதும் இதுபோன்ற மக்கள் தேர்தல் அறிக்கையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வெளியிட்டு வருகிறது. வெறுப்பு அரசியல் இங்கு விரட்டியடிக்கப்பட்டு,அன்பும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும்.அதுதான் நம் மாநிலத்தை, நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்' என்று குறிப்பிட்டார்.

மக்கள் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களான ஒழுக்கத்தில் சிறந்த தமிழ்நாடு,நீதியில் சிறந்த தமிழ்நாடு,சமச்சீரான வளர்ச்சியில் தமிழ்நாடு,சுத்தம் போற்றும் தமிழ்நாடு,ஊழல் இல்லாத தமிழ்நாடு,மது,போதை இல்லாத தமிழ்நாடு ஆகியவை குறித்து மாநிலச் செயலாளர்கள் S.N.சிக்கந்தரும்,T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்வும் விளக்கிக் கூறினர்.

இந்தச் சந்திப்பின் போது மாநிலத் துணைத் தலைவர் யூசுஃப் பாஷா,மாநில அமைப்புச் செயலாளர் K.ஜலாலுத்தீன்,மாநில மகளிர் அணிச் செயலாளர் A.ஃபாத்திமா,மாநில ஊடகச் செயலாளர் சாகுல் ஹமீது,மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் வி.எஸ்.முஹம்மத் அமீன் ஆகியோர் உடனிருந்தனர்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்