மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ஒளிவீசும் முகங்ககள்
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, ஜனவரி 1-15, 2026


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறரிடம் கையேந்தி நிற்கின்ற இழிநிலைக்கு ஆளாகி விடக் கூடாது என்கிற நோக்கத்துடனும் தனது குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடனும் தனக்குப் பக்கத்தில் அண்டை வீட்டாராக இருக்கின்றவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற ஆசையுடனும் எவரொருவர் ஹலாலான, ஆகுமான வழிமுறைகளைக் கொண்டு பொருளீட்டுகின்றாரோ அவர் மறுமை நாளில் அல்லாஹ்வை எந்த நிலையில் சந்திப்பார் எனில், அந்த வேளையில் அவருடைய முகம் பௌர்ணமி நிலவைப் போல ஒளிமயமாக இருக்கும். இதற்குப் பதிலாக ஒருவர் மேலும் மேலும் பொருளைச் சம்பாதித்து சேர்த்துக்கொண்டே போக வேண்டும் என்கிற எண்ணத்துடனும், மற்றவர்களுக்கு முன்னால் பெருமை பாராட்ட வேண்டும் என்கிற நோக்கத்துடனும் பேரும் புகழும் ஈட்ட வேண்டும் என்கிற ஆசையுடனும் பொருளீட்டுகின்றார் ஹலாலான வழிமுறைகளைக் கொண்டே பொருளீட்டுகின்றார் எனில், மறுமை நாளில் அல்லாஹ்வை எந்த நிலையில் சந்திப்பார் எனில், அந்த வேளையில் அல்லாஹ் அவர் மீது கடுமையான கோபம் கொண்டிருப்பான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : பைஹகி

 பொருளீட்டுவதற்காக மேற்கொள்கின்ற வழிமுறைகளும் வழிவகைகளும் அனுமதிக்கப்பட்டவையாக, ஹலாலானவையாக இருத்தல் வேண்டும். அதற்கும் மேலாக பொருள் சம்பாதிப்பதே இலட்சியமாக ஆகிவிடக்கூடாது. அதற்கு மாறாக, தன்னுடைய கண்ணியத்தைக் காப்பாற்றிக்கொள்கின்ற நோக்குடனும் தன்னுடைய குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுகின்ற எண்ணத்துடனும்தான் பணம் சம்பாதிக்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் அண்டை வீட்டாருக்கு நல்லது செய்வதற்கான வசதி வாய்ப்பைப் பெற வேண்டும், ஊர் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற பொதுநல எண்ணமும் இருத்தல் வேண்டும். இத்தகைய உயர்ந்த எண்ணத்துடனும் தெளிவுடனும் ஒருவர் வாழ்ந்தார் எனில், மறுமை நாளில் அவர் எந்த நிலையில் தன்னுடைய அதிபதியைச் சந்திப்பார் எனில், அந்த வேளையில் அவருடைய முகம் பெர்ணமி நிலவைப் போல ஒளிமயமாக ரம்மியமாக இருக்கும்.

இதற்கு நேர்மாறாக, ஒருவருக்கு இந்த மாதிரியான உயர்ந்த இலக்கோ, நல்லெண்ணமோ, பரந்த பார்வையோ இல்லையெனில், செல்வச் செழிப்பில் புரள வேண்டும், நிலபுலன்களையும் சொத்து பத்துகளையும் சேர்க்க வேண்டும், மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும், நாலு பேர் மதிக்கின்ற அளவுக்கு நாலு காசு சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்கிற புகழாசையால் உந்தப்பட்டு பணம் சம்பாதிக்கின்றார் எனில், பணத்தையும் பொருளையும் குவித்துக் கொண்டே போகின்றார் எனில், அவருடைய பங்குக்கு அல்லாஹ்வின் கோபமும் சீற்றமும் தாம் கிடைக்கும். அதுமட்டுமல்ல தடுக்கப்பட்ட, ஹராமான வழிமுறைகளை மேற்கொண்டு அவர் பணம் சம்பாதித்திருந்தார் எனில், அவருடைய அழிவுக்கு அதுவே காரணமாகிவிடும்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்