மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ஈடேற்றமும் பேரழிவும்
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, ஜனவரி 16-31, 2026, ஜனவரி 16-31, 2026


ஈடேற்றமும் பேரழிவும்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மூன்று விஷயங்கள் ஈடேற்றம் அளிப்பவை ஆகும். மூன்று விஷயங்கள் பேரழிவை ஏற்படுத்துபவை ஆகும்.

 ஈடேற்றம் அளிக்கின்ற விஷயங்கள் எவையெனில் (1) மறைவான நிலையிலும் வெளிப்படையான நிலையிலும் எந்த நிலையிலும் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுதல். (2) மகிழ்ச்சி, அதிருப்தி ஆகிய இரண்டு நிலைமைகளிலும் உண்மை யையே பேசுதல்.1 (3) செல்வச் செழிப்பான நிலையானாலும் வறுமையில் வாடினாலும் இரு நிலைமைகளிலும் நடுநிலைமையை மேற்கொள்ளுதல்.2

 பேரழிவை ஏற்படுத்துகின்ற விஷயங்கள் எவை எனில் (1) மன இச்சைகளுக்குக் கீழ்ப்படிந்து நடத்தல்3 (2) பேராசை, கஞ்சத்தனம் ஆகியவற்றுக்கு அடிமையாகிவிடுதல்4 (3) ஆணவத்துடனும் கர்வத்துடனும் நடந்துகொள்ளுதல். இது இருப்பவற்றிலேயே மிக அருவருப்பான, இழிவான பண்பு ஆகும்.5

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : பைஹகி

1.மகிழ்ச்சி, அதிருப்தி ஆகிய இரண்டுக்கும் மேலாக உண்மைக்கு முக்கியத்துவம் தந்தாக வேண்டும். ஒருவருடனான நம்முடைய உறவும் தொடர்பும் இணக்கமும் இனிமையும் நிறைந்ததாய், மனத்துக்கு மகிழ்ச்சியை அளிப்பதாய் இருந்தாலும் உண்மையையே சொல்ல வேண்டும். அதனால் அந்த மனிதருக்குப் பாதிப்பு ஏற்படுமே எனத் தயங்கக் கூடாது. இதே போன்று ஒருவர் மீது தமக்குக் கோபமும் ஆத்திரமும் மிகைத்திருக்கின்ற நிலைமையிலும் கூட உண்மையையே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்வதால் அந்த மனிதருக்குப் பெரும் இலாபமும் நன்மையும் கிடைப்பதாய் இருந்தாலும் அவர் மீதான கோபமும் அதிருப்தியும் உண்மையைச் சொல்வதை விட்டு நம்மைத் தடுத்துவிடக் கூடாது.

2.செலவிடும்போது நடுநிலையைப் பேண வேண்டும். வரையறையே இல்லாமல் மானாவாரியாகச் செலவழித்து பணத்தை விரயம் செய்யக் கூடாது. செலவைக் கட்டுப்படுத்துவதாய்ச் சொல்லிக் கொண்டு கஞ்சத்தனமாகவும் நடந்துகொள்ளக் கூடாது. இதே போன்று வறுமைக்கும் இல்லாமைக்கும் ஆளாகின்ற சூழல்களிலும் மனிதன் தன்னுடைய சுயமரியாதையை இழந்து விடக்கூடாது. மேலும் செல்வச் செழிப்பும் வளமும் சேர்ந்துவிடுகின்ற போது ஆணவமும் அகம்பாவமும் கொண்டு அலையக் கூடாது. எல்லா நிலைமைகளிலும் இறைவனுக்கு விருப்பமான, இறைவன் அவனிடம் எதிர்பார்க்கின்ற அழகிய நடத்தையையே மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு நிலைமையிலும் நிதானத்தை இழக்காமல் சமநிலை தவறாமல் நடந்துகொள்வதுதான் இறைவனுக்கு விருப்பமான அழகிய நடத்தை ஆகும்.

3.மனஇச்சைகளை இறைவனின் கட்டளைக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டவையாய் எல்லா நிலைகளிலும் ஆக்கிக் கொள்வது அவசியம் ஆகும். மன இச்சைகள் கட்டுப்படுத்தப்படாமல் சுதந்திரமாகக் கட்டவிழ்த்து விடப்படுமேயானால் அது பேரழிவுக்கே இட்டுச் செல்லும். மறுமையிலோ மிகப் பெரும் அழிவுக்கும் இழப்புக்கும் ஆளாவது உறுதி.

4.பேராசை, கஞ்சத்தனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட இயல்பைக் கொண்டிருப்பது எளிதல்ல. இந்த இயல்பை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனில் வெறுமனே பேராசை, கஞ்சத்தனம் ஆகியவற்றின் பக்கம் இழுத்துச் செல்கின்ற உணர்வுகளையும் ஆசைகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தால் மட்டும் போதாது. அதற்கும் மேலாக பேராசை, கஞ்சத்தன உணர்வுகளுக்கு நேர்மாறாக, யாதொரு விஷயத்திலும் தாராள மனப்பான்மையும் தயாள குணத்துடனும் விரிந்த உள்ளத்துடனும் பரந்த பார்வையுடனும் நடந்து கொள்ளத் தொடங்கி விடுவதும் அவசியம் ஆகும்.

5.கர்வமும் அகம்பாவமும் ஆணவமும் மிக மிக மோசமான, இழிவான குணங்கள் ஆகும். இவற்றால் ஏற்படும் விளைவுகளும் கேடுகளும் இழப்புகளும்கூட மிக மிக மோசமானவையாய்த்தாம் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஆணவமும் அகம்பாவமும் கர்வமும் பிடித்த மனிதன்தான் இறைவனின் வெறுப்புக்கும் சாபத்துக்கும் உரியவனாக இருக்கின்றான். மற்றெல்லாப் பாவங்களைப் பொறுத்தவரை, ஒருவர் திருந்துவதற்கும், தம்முடைய நடத்தையை திருத்திக் கொள்வதற்குமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஆணவத்துக்கும் அகம்பாவத்திற்கும் கர்வத்திற்கும் ஆளான மனிதன் - தன்னைத் தானே மிக உயர்ந்த பீடத்தில் அமர்த்திக் கொண்டிருக்கின்ற மனிதன் - தன்னைத் தானே திருத்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே.

பணமும்,பொருளும்..!

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு காலம் வரும். அப்போது தீனார், திர்ஹம் தவிர வேறு எதுவும் பயன் அளிக்காது

அறிவிப்பாளர் : மிக்தாம் பின் மஅதிகரீப்(ரலி) 

நூல் : அஹ்மத்

பணமும் பொருளும் சம்பாதித்து வைத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. பணம், பொருள் ஆகியவற்றின் முக்கியத்துவம் பல மடங்கு கூடிவிடுகின்ற காலம் வரும். அந்த வேளையில் தம்முடைய மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் கண்ணியத்துடனும் மானத்துடனும் வாழ்வதற்கும் பணத்தின் தேவை கூடிவிடும். பணம் இன்றியமையாததாகிவிடும்.

அப்போது வறிய நிலையிலும், பணம் இல்லாமலும் இருப்பவர்கள் மானத்தை மட்டுமல்லாமல் மார்க்கத்தையும் நம்பிக்கையையும் விற்க வேண்டிய நிலைக்காளாகிவிடுமோ என்று அஞ்சுவார்கள்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்