மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இறைவனே வசப்படுத்திக்கொடுத்தான்!
· தஃப்ஹீமுல் குர்ஆன் · மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், Feb 1 - 15


இவர்கள் தங்களுக்கு முன்னாலும், பின்னாலும் சூழ்ந்துள்ள வானத்தையும் பூமியையும் என்றுமே பார்த்ததில்லையா,என்ன?நாம் நாடினால் இவர்களைப் பூமிக்கடியில் ஆழ்த்தியிருப்போம். அல்லது வானத்தின் சில துண்டுகளை இவர்கள் மீது விழச் செய்திருப்போம். இறைவன் பக்கம் திரும்புகின்ற ஒவ்வோர் அடியானுக்கும் உண்மையில் இதில் ஒரு சான்று இருக்கின்றது.13

நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பெரும் அருட்பேற்றினை வழங்கியிருந்தோம்.14 (நாம் ஆணையிட்டோம்:)‘மலைகளே!அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள்.இவ்வாறே பறவைகளுக்கும் (நாம் கட்டளை-யிட்டிருந்தோம்.)15 நாம் அவருக்காக இரும்பை மென்மையாக்கிக் கொடுத்தோம்.‘போர்க் கவசங்கள் செய்வீராக!அவற்றின் வளையங்களைச் சரியான அளவில் அமைப்பீராக' என்ற கட்டளையுடன்!16 (தாவூதுடைய வழித்தோன்றல்களே!) நற்செயல்கள் புரியுங்கள்; நீங்கள் செய்வதனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

மேலும்,நாம் ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்.அதனுடைய காலைப் புறப்பாடு ஒரு மாத தூரம் வரையிலாகும்;மாலைப் புறப்பாடும் ஒரு மாத தூரம் வரையிலாகும்.17 நாம் அவருக்காக உருக்கிய செம்பின் ஊற்றை ஓடச் செய்தோம்.18 மேலும்,ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.அவைகளோ தம் இறைவனின் கட்டளைப்படி பணிபுரிந்து கொண்டிருந்தன.19 அவற்றில் எது நம்முடைய கட்டளையை விட்டும் பிறழ்கின்றதோ அதனைக் கொழுந்து விட்டெரியும் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்.

· அத்தியாயம் 34 ஸபா        · திருவசனங்கள் : 9 & 12

13.எவருடைய மனதில் எந்தவிதமான துவேஷமோ,முன்முடிவோ,பக்கச்சார்போ மருந்துக்கும் இல்லையோ,எவரிடம் எந்தவொரு பிடிவாதமும்,முரண்டுபிடிக்கின்ற போக்கும் இல்லையோ,அவற்றுக்குப் பதிலாக எவர் வாய்மையான உள்ளத்தோடு தம்முடைய இறைவனிடம் வழிகாட்டுதலை வேண்டுபவராக இருக்கின்றாரோ அவரால் இந்தப் பூமி, இந்த வானங்கள் ஆகியவற்றைக் கொண்ட இந்தக் கட்டமைப்பைப் பார்த்து மிகப் பெரும் பாடம் கற்றுக்கொள்ள முடியும்.ஆனால் எவருடைய இதயம் இறைவனிடமிருந்து முகம் திருப்பிக் கொண்டிருக்கின்றதோ அவர் இந்தப் பேரண்டத்தில் இருக்கின்ற அனைத்தையும் பார்ப்பார்;ஆனால் பேருண்மையின் பக்கம் சமிக்ஞை செய்கின்ற எந்தவொரு அடையாளத்தையும் அவரால் புரிந்து கொள்ளவே இயலாமல் போய்விடும்.

14.வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் தாவூத்(அலை) அவர்களுக்கு அருளியிருந்த கணக்கற்ற அருள்வளங்கள் குறித்து இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.தாவூத்(அலை) பெத்லஹேம் நகரில் வசித்து வந்த யஹோதா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண இளைஞராக இருந்
தார். ஃபிலிஸ்தியர்களுக்கு எதிரான போர் ஒன்றில் ஜாலூத்தைப் போன்ற மிகப் பெரும் வலிமை வாய்ந்த எதிரியைக் கொலை செய்து திடீரென்று அவர் பனூ இஸ்ராயில்களின் நம்பிக்கை நட்சத்திரமாக,மனங் கவர் நாயகனாக உயர்ந்து விட்டார்.இந்த நிகழ்விலிருந்து அவருடைய எழுச்சி தொடங்கியது.எதுவரை எனில் தாலூத்தின் மரணத்திற்குப் பிறகு முதலில் அவர் ஹெப்ரான் (தற்போதைய கலீல்) நகரத்தில் யஹூதியா மக்களின் தலைவராக ஆக்கப்பட்டார்.

பிறகு சில ஆண்டுகளுக்குள் பனூ இஸ்ராயீல்களின் ஒட்டுமொத்த கோத்திரத்தாரும் ஒன்று சேர்ந்து அவரைத் தம்முடைய அரசனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.மேலும் அவர் ஜெருசலேம் நகரத்தை வென்றெடுத்து அதனை இஸ்ராயீல் தேசத்தின் தலைநகரமாக ஆக்கிக் கொண்டார். அவருடைய சீரிய தலைமையினால் வரலாற்றில் முதல் முறையாக இறைப்பற்று நிறைந்த இராஜ்ஜியம் உருவானது.அதன் எல்லைகள் அகபா வளைகுடா முதல் ஃபுராத் நதியின் மேற்குக் கரைகள் வரை பரவியிருந்தன.இந்த அருள்வளங்களோடு கூடுதலாக அவருக்கு அருளப்பட்ட இறைக் கொடைகளாய் அறிவு,ஞானம்,நீதி,நியாயம் செறிந்த செயல்பாடு,இறைப்பற்றும்,இறைவனுக்கு அடிபணிந்து பேணுதலோடு வாழ்கின்ற பக்குவமும் போன்ற வடிவங்களில் அவருக்குக் கிடைத்தன. (விவரங்களுக்குப் பார்க்க : திருக்குர்ஆன் 2:273; 17:7)

15.இதே கருத்து இதற்கு முன்பு அத்தியாயம் 21 அல்அன்பியாவில் வசன எண் 79இல் இடம் பெற்றிருந்தது.அங்கு இது குறித்த விளக்கங்களை நாம் அளித்து இருந்தோம். விளக்கத்துக்குப் பார்க்க : திருக்குர்ஆன் 21:71.

16.இந்தக் கருத்தும் இதற்கு முன்பு திருக்குர்ஆன் 21:80இல் இடம் பெற்றிருந்தது.மேலும் அங்கு இது தொடர்பான விளக்கத்தை நாம் அளித்து இருந்தோம்.விளக்கத்துக்குப் பார்க்க: திருக்குர்ஆன் 21:72.

17.இந்தக் கருத்தும் இதற்கு முன்பு திருக்குர்ஆன் 21:81இல் இடம் பெற்றிருந்தது.மேலும் அங்கு இது தொடர்பான விளக்கம் தரப்பட்டிருந்தது.விளக்கத்துக்குப் பார்க்க திருக்குர்ஆன் 21:74,75.

18.பூமியிலிருந்து சுலைமான்(அலை) அவர்களுக்காக ஊற்று ஒன்று வெடித்து பெருக்கெடுத்து ஓடியதாகவும் அதில் தண்ணீருக்குப் பதிலாக உருகிய செம்பு பெருக்கெடுத்தோடியதாகவும் தொன்மையான விரிவுரையாளர்கள் சிலர் இதற்குப் பொருள் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் சுலைமான்(அலை) அவர்களின் காலத்தில் செம்பை உருக்குகின்ற,உருகிய செம்பைக் கொண்டு விதவிதமான பொருள்களை உருவாக்குகின்ற தொழில் எந்த அளவுக்குப் பெரும் அளவில் மேற்கொள்ளப்பட்டிருந்ததெனில் அங்கு செம்பின் ஊற்றுகளே பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தன எனச் சொல்லப்பட்டது என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். (கூடுதல் விவரங்களுக்குப் பார்க்க : திருக்குர்ஆன் 21:74,75)

19.சுலைமான்(அலை) அவர்களுக்கு ஜின்கள் வசப்படுத்தித் தரப்பட்டிருந்தன.அவர்கள் விவசாயப் பெருங்குடிகளும் மலைவாழ் பெரு மக்களுமா அல்லது உண்மையிலேயே கண்களுக்குப் புலப்படாத படைப்புகளாய் உலகம் முழுவதும் அறிப் படுகின்ற ஜின்களா என்பது குறித்து இதற்கு முன்பு அத்தியாயம் 21 அல்அன்பியாவிலும் அத்தியாயம் 27 அந்நம்லிலும் விரிவாக விவாதித்திருக்கின்றோம். (விவரங்களுக்குப் பார்க்க:  திருக்குர்ஆன்  21:75;  27:23,45,52)
(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்