மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

மறுமையை நம்பாதவர்களே வேதனைக்கு ஆளாவர்கள்
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், ஜனவரி 16-31, 2026


நிராகரிப்பாளர்கள் (மக்களிடம்) கூறுகின்றார்கள்: '(நீங்கள் மரணமாகி) உங்கள் உடல் அணு அணுவாய் சிதைந்து போய்விட்ட பிறகு நீங்கள் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவீர்கள் என்று உங்களுக்குச் செய்தி அறிவிக்கும் ஒருவரை நாங்கள் உங்களுக்குக் காண்பித்துத் தரவா?'

'இந்த மனிதர் அல்லாஹ்வின் பெயரால் பொய்யைப் புனைந்து கூறுகின்றாரா? அல்லது இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றதா என்பது புரியவில்லையே!'10 இல்லை. உண்மையில், மறுமையை நம்பாதவர்கள்தாம் வேதனைக்கு ஆளாகப் போகிறார்கள். மேலும், மிக மோசமாக வழிகெட்டுப் போனவர்களும் அவர்கள்தாம்!11 இவர்கள் தங்களுக்கு முன்னாலும், பின்னாலும் சூழ்ந்துள்ள வானத்தையும் பூமியையும் என்றுமே பார்த்ததில்லையா, என்ன? நாம் நாடினால் இவர்களைப் பூமிக்கடியில் ஆழ்த்தியிருப்போம். அல்லது வானத்தின் சில துண்டுகளை இவர்கள் மீது விழச் செய்திருப்போம்.12 இறைவன் பக்கம் திரும்புகின்ற ஒவ்வோர் அடியானுக்கும் உண்மையில் இதில் ஒரு சான்று இருக்கின்றது.

· அத்தியாயம் 34 ஸபா        · திருவசனங்கள் : 7 & 9

10. நபிகளாரை 'பொய்யர்' என்று சொன்னால் பொதுமக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை குறைஷித் தலைவர்கள் நல்ல முறையில் அறிந்து வைத்திருந்தார்கள். ஏனெனில் நபிகளார்(ஸல்) வாய்மையானவர் என்பதையும் தம்முடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறைகூட ஒரே ஒரு பொய்யைக் கூடச் சொன்னதில்லை என்பதையும் ஒட்டுமொத்த சமூகமும் அறிந்தே இருந்தது. இதனால் குறைஷித் தலைவர்கள் பொது மக்கள் மத்தியில் நபிகளாரைக் குறித்து குற்றம் சுமத்துகின்ற போது, 'இந்த மனிதர் மரணத்-திற்குப் பிறகு வாழ்வு என்கிற கற்பனை செய்தும் பார்த்திராத, நடக்காத விஷயத்தைக் குறித்தெல்லாம் பேசுகின்றார்.

இந்த நிலையில் இனி இந்த விவகாரம் இரண்டில் ஒன்றாகத்தானே இருந்-தாக வேண்டும்! ஒன்று, (அல்லாஹ் காப்பாற்றுவானாக!) இந்த மனிதர் வேண்டுமென்றே பொய் ஒன்றைப் புனைந்து சொல்கின்றார். அல்லது இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்' என்கிற ரீதியில்
சொற்களை அமைத்துச் சொன்னார்கள். ஆனால் இவர்களின் இந்த 'பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்' என்கிற குற்றச்சாட்டுகூட 'பொய் ஒன்றைப் புனைந்து சொல்கின்றார்'  என்கிற  குற்றச்சாட்டைப் போன்று பொத்தலானதாய், எடுபடாததாய்த்தான் இருந்தது. ஏனெனில் அதிஅற்புதமான அளவுக்கு அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் கொண்ட ஓர் அறிவார்ந்த ஆளுமையை பைத்தியக்காரர் என்று புத்தி கெட்டுப் போன மனிதரால்தான், அறிவுக்குத் தாழ்ப்பாள் போட்டு மூடிவிட்ட மனிதரால்தான் ஏற்றுக் கொள்ள முடியும். இல்லையேல் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு எந்த மனிதர்தான் உயிருள்ள ஈயை விழுங்கிக் கொள்வதற்கு முன் வருவார்? இதன் காரணமாகத் தான் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் இந்த அபத்தமான கருத்தை மறுத்து எந்தவொரு வாதத்தையோ சான்றையோ சொல்லி விளக்க வேண்டிய அவசியத்தை உணரவில்லை. அதற்குப் பதிலாக மரணத் துக்குப் பிந்தைய வாழ்வும் சாத்தியமா என்கிற அவர்களின் வியப்பை மட்டும் இலக்காக்கி கருத்துரை நல்கினான்.

11. இது அவர்களின் பேச்சுக்கான முதல் பதிலாகும்.
'ஓ அறிவிலிகளே! உங்களுக்குத்தான் புத்தி கெட்டுப் போய்விட்டது! உங்களின் உண்மையான நிலைமையைக் குறித்து எந்த மனிதர் உங்களை எச்சரிக்கின்றாரோ அவருடைய பேச்சைக் கேட்காமல், நேராக நரகத்தில் உங்களைக் கொண்டு போய்த் தள்ளிவிடக் கூடிய பாதையில் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே! அடடா! உங்களின் முட்டாள்தனத்தின் உச்சம் என்னவெனில், அந்த மோசமான கதிக்கு ஆளாவதிலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக பரிதவிக்கின்ற மனிதரைப் பார்த்து “பைத்தியக்காரர்” என்று சொல்கின்றீர்களே!’ என்று இதற்குப் பொருள்.

12. இது அவர்களின் பேச்சுக்கான இரண்டாவது பதிலாகும்.
இந்தப் பதிலைப் புரிந்துகொள்வதற்கு, மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்வை குறைஷி நிராகரிப்பாளர்கள் மறுத்து வந்ததற்கான காரணங்களில் மூன்று காரணங்கள் மிகவும் எடுப்பாக இருந்தன என்ற யதார்த்தத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். எடுப்பாக இருந்த அந்த மூன்று காரணங்களின் விவரம் வருமாறு:

(1) அவர்கள் இறைவனுக்கு முன்னால் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள அறவே மறுத்தார்கள். ஏனெனில் அதனை ஏற்றுக்கொண்டால், அதன் பிறகு இந்த உலகத்தில் மனம் போன போக்கில் வாழ்வதற்கான சுதந்திரமே பறிபோய்விடும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

(2) மறுமை நிகழ்வதையும், இந்த ஒட்டுமொத்த பேரண்டமும் தூள்தூளாகச் சிதறிப் போவதையும், மேலும் புதிதாக மறுபடியும் ஒரு பேரண்டம் உருவாவதையும் அவர்கள் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாக நினைத்தார்கள்.

(3) எவர்கள் மரணித்து பன்னூறு, பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டனவோ, எவர்களின் எலும்புகள் வரை மக்கி மண்ணாகி நிலத்திலும் காற்றிலும் நீரிலும் கரைந்து, பறந்து, கலந்துவிட்டனவோ, அவர்கள் மீண்டும் அதே உடலுடனும் உயிருடனும் எழுப்பப்படுவது அந்தக் குறைஷி நிராகரிப்பாளர்களைப் பொறுத்தவரை முற்றிலும் சாத்தியமே இல்லாததாக இருந்தது.

இங்கு மேலே தரப்பட்ட பதில் இந்த மூன்று அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதற்கும் மேலாக அவற்றோடு கூடவே கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் கொண்டதாக இருக்கின்றது. இந்தக் கருத்துச் செறிவான, சுருக்கமான வாசகங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளவற்றின் முழுமையான விவரங்கள் வருமாறு:

(1) இந்த வானத்தையும் பூமியையும் எப்போதெனும் நீங்கள் கண்களைத் திறந்து பார்த்தீர்களேயானால், இது ஏதோவொரு விளையாட்டுப் பொருளும் அல்ல; மேலும் இது தற்செயலாகவும் உருவாகிவிடவில்லை என்பது உங்களுக்குத் தெளிவாகிவிடும். நினைத்ததைச் செய்து முடிக்கின்ற சர்வவல்லமை படைத்த ஒருவன், உச்சபட்ச விவேகத்தோடும் ஞானத்தோடும் இதனைப் படைத்துள்ளான் என்பதற்கு இந்தப் பேரண்டத்தில் இருக்கின்ற ஒவ்வொரு பொருளுமே சான்று பகர்கின்றன. இந்த அளவுக்கு ஞானமும் விவேகமும் செறிந்த முறையில் கட்டமைக்கப்பட்ட பேரண்டத்தில், ஒருவருக்கு அறிவும் பிரித்தறிகின்ற திறனும் அதிகாரங்களும் தரப்பட்ட பிறகு, அவர் எந்தப் பொறுப்பற்றவராகவும், யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமையற்றவராகவும் விட்டுவிடப்படுவார் என்று நினைப்பதே முழுக்க முழுக்க அபத்தமான வீண் பேச்சாகும்.

(2) பேரண்டத்தின் இந்தக் கட்டமைப்பைக் கண் திறந்து பார்க்கின்ற எவரும் மறுமை நிகழ்வது கொஞ்சமும் சிரமமான காரியமல்ல என்பதைத் தெரிந்து கொள்வார். இந்தப் பூமியும் வானங்களும் எத்தகைய கட்டுகளைக் கொண்டு நிறுவப்பட்டிருக்கின்றனவோ, அவற்றில் சின்னதாக இங்கு ஒரு பிறழ்வு, அங்கு ஓர் அசைவு நிகழ்ந்துவிட்டாலே, அந்தக் கணத்திலேயே உடனடியாக மறுமை நிகழ்ந்துவிடும்.இன்று எவன் இந்தப் பேரண்டத்தைப் படைத்திருக்கின்றானோ, அவனால் மறுபடியும் மற்றுமோர் பேரண்டத்தைப் படைக்க முடியும் என்பதற்கு இந்தப் பேரண்டத்தின் இந்தக் கட்டமைப்பும் சான்றாகும். மறுபடியும் மற்றுமோர் பேரண்டத்தைப் படைப்பது அவனுக்குச் சிரமமானதெனில், இதே பேரண்டத்தை அவன் படைத்து நிற்க வைத்தது எப்படி?

(3) இந்தப் பூமியையும் வானங்களையும் படைத்தவனைக் குறித்து நீங்கள் என்னதான் நினைத்து வைத்திருக்கின்றீர்கள்? இறந்துபோன மனிதர்களை மறுபடியும் படைக்கும் வல்லமை அவனுடைய ஆற்றலுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்டதாக நினைக்கின்றீர்களே! இறந்து போகின்ற மனிதர்களின் உடல் சின்னாபின்னமாகச் சிதறி மண்ணோடு மண்ணாகிப் போனாலும், இங்குமங்கும் சிதறிவிட்டாலும், இதே பூமியின், இதே வானங்களின் எல்லைகளுக்குள்தானே இருக்கும்? அவற்றுக்கு அப்பால் எங்கெனும் போய்விடுவதில்லைதானே!

பிறகு எந்த இறைவனுக்கு இந்தப் பூமியும் வானங்களும் சொந்தமோ, அவனுக்கு இந்த மண்ணிலும், காற்றிலும், நீரிலும் எந்தெந்தப் பொருள்கள் எங்கெங்கே சிதறிக் கிடந்தாலும், அவையனைத்தையும் அங்கிருந்து வெளிக்கொணர்வதில் என்ன சிரமம் இருக்கப் போகின்றது? உங்களுடைய உடலில் இப்போது என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவையனைத்தும் அவனால் ஒன்றுதிரட்டப்பட்டவைதாம்; இதே மண்ணிலிருந்தும் காற்றிலிருந்தும் நீரிலிருந்தும் பெறப்பட்டவைதாம். இந்தப் பகுதிகளை ஒன்று சேர்ப்பது இன்று சாத்தியம் எனில், நாளை அது ஏன் சாத்தியமற்றதாக ஆகிவிடும்?

இந்த மூன்று சான்றுகளுடன் இந்த வசனத்தில் எச்சரிக்கை ஒன்றும் பொதிந்துள்ளது. அதாவது, நீங்கள் திரும்புகின்ற திசையெல்லாம் இறைவனின் இறைமையில் சூழப்பட்டிருக்கின்றீர்கள். நீங்கள் எங்கே சென்றாலும் இதே பேரண்டம்தான் உங்களைச் சூழ்ந்திருக்கும். இறைவனுக்கு எதிராக உங்களால் எந்தவொரு புகலிடத்தையும் தேடி அடையவே முடியாது. மேலும் இறைவன் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ அல்லது உங்களின் தலைக்கு மேலிருந்தோ எந்தவொரு வேதனையை வேண்டுமானாலும் இறக்கிவிடுகின்ற பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான்.

தாயின் மடியைப் போன்று எந்த நிலத்தில் நீங்கள் மன நிம்மதியை அடைகின்றீர்களோ, மிகவும் மனநிறைவோடும் எந்தவிதமான கவலையும் இல்லாமலும் அதில் உங்களுக்காக வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கின்றீர்களோ, அதன் மேற்பரப்புக்கு கீழே என்னவிதமான ஆற்றல்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதையும், எப்போது அது ஏதேனும் ஒரு நிலநடுக்கத்தை உண்டாக்கி, அதே நிலத்தை நீங்கள் மீளாத் துயில் கொள்கின்ற உங்களுக்கான மண்ணறையாக ஆக்கிவிடுமோ என்பதையும் நீங்கள் அறிய மாட்டீர்கள்.

நீங்கள் எந்த வானத்தின் கீழ் முழு மனநிறைவோடும் கவலையில்லாமலும் அதனை உங்களின் வீட்டுக்கூரையாக நினைத்து நடமாடிக்கொண்டிருக்கின்றீர்களோ, அதே வானத்திலிருந்து திடீரென இடி வந்து உங்கள் மீது எப்போது விழும் என்பதும், எப்போது பெருமழை பொழிந்து பேரழிவை ஏற்படுத்தும் என்பதும், வேறு ஏதேனும் நீங்கள் அதுவரை கேள்விப்பட்டிராத ஆபத்து உங்கள் மீது வந்து விழுமோ என்பதும் உங்களுக்குத் தெரியுமா, என்ன?

இந்த நிலையில் இறைவன் மீதான உங்களின் இந்த அச்சமற்ற போக்கும், எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவது தொடர்பான உங்களின் இந்த அலட்சியமும், மேலும் உங்களின் நலன் நாடுகின்றவரின் அறிவுரையை வெற்று வார்த்தைவீச்சுகளோடும் வீண் ஜம்பம் அடிக்கின்ற தொனியிலும் நீங்கள் எதிர்கொள்ளும் விதமும் சொல்கின்ற செய்திதான் என்ன? உங்களின் மோசமான கதிக்கு நீங்களே அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றீர்களா, என்ன?

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்