மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

உலகின் மனசாட்சியை உலுக்கியெடுக்கும் குரல் தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்
ரியாஸ் மொய்தீன், செப்டம்பர் 16-30, 2025


 

ஐந்து வயது ஃபலஸ்தீனச் சிறுமி ஹிந்த் ரஜப் 2024 ஜனவரி 29 அன்று அவருடைய குடும்பத்தினர் ஐந்துபேருடன் காரில் வைத்து இஸ்ரேலிய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். உயிர்த்தியாகம் செய்யும் முன் ஃபலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டியுடன் ரஜப் மணிக்கணக்கில் பேசிய அழைப்பின் உண்மையான ஆடியோவை மையப்படுத்தி ஓர் உண்மைக் கதையை ஆவணப்படமாக்கியுள்ளார் பிரெஞ்சு துனிசிய இயக்குநர் கவுதர் பென் ஹானியா.

‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ என்ற இந்த ஆவணப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான சில்வர்லயன் கிராண்ட் ஜூரி பரிசை வென்றது. அதன் முதல் திரையிடலின் போது அங்கிருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று 23 நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி உணர்ச்சி வசப்பட்டனர்.

விருதைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் பென் ஹானியா, ‘ரஜப்பின் கதை அந்தச் சிறுமியின் கதை மட்டுமல்ல, இனப்படுகொலையைச் சகித்துக்கொண்டிருக்கும் மக்களின் கதை. ஹிந்தை மீண்டும் கொண்டு வர முடியாது, அவளுக்கு எதிராக நடந்த அட்டூழியத்தை அழிக்கவும் முடியாது. எடுக்கப்பட்டதை எதுவும் மீட்டெடுக்க முடியாது, ஆனால் சினிமாவின் மூலம் அவளுடைய குரலைப் பாதுகாக்க முடியும், எல்லைகளைத் தாண்டி எதிரொலிக்கச் செய்ய முடியும்’ என்று கூறினார்.

பொறுப்புக்கூறல் உண்மையானதாக இருக்கும் வரை, நீதி நிலைநாட்டப்படும் வரை ஹிந்த் ரஜபின் குரல் தொடர்ந்து எதிரொலிக்கும். நம்பிக்கையுடன் ஹிந்த் பேசிய இதயத்தை இளகச் செய்யும் அந்த இறுதி உரையாடல் மௌனித்துக் கிடக்கும் உலகின் மனசாட்சியை உலுக்கி எடுக்கிறது. ஒரு பிஞ்சு உயிரைக் காப்பாற்றுவதற்குக் கூட இயலாத உலகத்தில் நாம் வாழ்கின்றோம் என்பது எவ்வளவு வேதனை?


‘என் குடும்பத்தினர் அனைவரும் இறந்து விட்டனர்’

‘அவர்கள் இறந்துவிட்டனரா?’

‘ஆம்’

‘அவர்கள் இப்போது உன்னுடன் காரில் இருக்கிறார்களா?’

‘ஆம்’

‘நீ இப்போது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய்? எங்கு பாதுகாப்பு பெற்றுள்ளாய்?’

‘காரில் உள்ளேன்’

‘நீ வெளியே இல்லாமல் காருக்குள்தானே இருக்கிறாய்?’

‘ஆம்’

‘நான் அழைப்பைத் துண்டிக்காமல் உன்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறேன். நீ  காருக்குள்ளேயே  தான்  இருக்க வேண்டும். சரியா செல்லமே..!’

‘சரி, இராணுவ வாகனம் இப்போது என் அருகில்தான் உள்ளது’

‘இராணுவ வாகனம் சரியாக உன் அருகில் தான் உள்ளதா?’

‘ஆம்! எனக்கு மிக அருகில் உள்ளது’

‘அது நிற்கிறதா? அல்லது நகர்கிறதா? அதிலிருந்து யாராவது வெளியே வருகின்றனரா?’

‘ஆம்..! அது நகர்கிறது’

‘அது காருக்கு அருகில் இருந்து நகர்கிறதா? அல்லது காருக்குப் பக்கத்தில் வருகிறதா? அல்லது காரின் முன் பக்கத்தில் இருந்து வருகிறதா?’

‘காரின் முன்பக்கத்தில் இருந்து வருகிறது’

‘இராணுவ வாகனம் உன்னை நோக்கி காரின் முன்பக்கத்தில் இருந்து வருகிறதா? அது மிக அருகில் இருக்கிறதா?’

‘ஆம்..! அது எனக்கு மிக மிக மிக அருகில் இருக்கிறது’

‘சரி, நாம் அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை’

‘நீங்கள் என்னுடனே இருங்கள்..!’

‘நான் உன்னுடன் தான் இருக்கின்றேன் செல்லம். யாராவது உன்னை மீட்கும் வரை நான் உன்னுடனே இருப்பேன். நான் உன்னைத் தனியாக விட மாட்டேன்’.

‘யாராவது  வந்தவுடன்  நீங்கள் அழைப்பை வைத்து விடுவீர்களா?’

‘இல்லை,  யாராவது  உன்னை மீட்கும் வரை நான் இந்த அழைப்பைத் துண்டிக்க மாட்டேன். இராணுவமே வந்தாலும் சரி! இறைவன் பாதுகாக்கட்டும். நாங்கள் உன்னுடன் தொடர்பில் இருப்போம். நீ அழைப்பைத் துண்டித்து விடாதே! நான் உன்னுடன் இருக்கின்றேன் செல்லமே..!’

‘தயவு செய்து என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். தயவு செய்து என்னை விட்டுவிடாதீர்கள்!’

‘என் செல்லமே! நான் சத்தியம் செய்கிறேன். நான் உன்னுடன்தான் இருக்கிறேன். உன்னை விட மாட்டேன் நான் உன்னுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன். நான் உன்னைத் தனியாக விடமாட்டேன்’

‘நேரம் ஆகிறது. கிட்டத்தட்ட இரவு நெருங்கிவிட்டது. எனக்கு மிக அச்சமாக இருக்கிறது. என்னைத் தயவு செய்து அழைத்துச் செல்லுங்கள்’

‘என்  செல்லமே!  இது  என் சக்திக்கு உட்பட்டதாக இருந்திருந்தால் நான் உன்னிடம் வந்திருப்பேன். நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாமா?’

‘யா அல்லாஹ் என்னைப் பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் என்னைப் பாதுகாப்பாயாக..!’

அலறலுடன் தொடங்கிய குரல் மௌனத்துடன் முடிந்தது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்