நானும் என் அண்ணன் உனைசும் மருத்துவர்களாக வேண்டும் என்பதே எங்கள் கனவு. நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அதனால் கனவுகள் கூட எங்களுக்கு ஒன்றாகவே இருந்தது. தொழுகை, நோன்பு அனைத்தையும் நாங்கள் ஒன்றாக இணைந்துதான் செய்வோம். நான் உனைசுடன் சேர்ந்துதான் உலகின் வண்ணங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.
அவன்தான் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தான். ABCD முதல் எல்லாமே சொல்லிக் கொடுத்தான். எனக்கு ஒரு வயது கூடி விட்டது. நானும் உனைஸ் போல வளர்ந்து விடுவேன்.
என்னுடைய அம்மா, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ஒரு ரகசியத்தைச் சொல்லித் தந்துள்ளார்கள். ‘மரணம் என்பது அல்லாஹ்வுடைய சந்திப்பு. அதை ஏற்றுக்கொள்ள அஞ்சக் கூடாது. எப்போதும் தயாராக இருக்க வேண்டும்’ என்று! இதை எனக்கு அடிக்கடி உனைஸ் நினைவு படுத்துவான். நானும் அவனும் பல நன்மைகளைச் செய்வோம்.
எனக்கும் உனைசுக்கும் ஒரே ஆசைதான். உலகின் வண்ணங்களை அவனும் நானும் இணைந்து ரசித்தோம். அதே போல சுவனத்தின் வண்ணங்களையும் இணைந்து பார்க்க வேண்டும். என்னுடைய உலகம் மிகவும் சிறியது. நான் உனைஸ், அம்மா, அப்பா! எங்களுக்கென்று பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. நான் பெரியவனாக வேண்டும். என்னுடைய விழுந்த பற்களும் என்னோடு சேர்ந்து வளர்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!
நான் தூங்கிக் கொண்டிருந்தேன். ‘யாஹிர்! யாஹிர்!’ என்று உனைஸ் அழைத்தான். அதற்குள் விடிந்து விட்டதா? ‘டேய் வா! ஃபஜ்ர் தொழுகைக்குப் போகலாம்’ என்றான். நானும் உளூச் செய்து விட்டு அவன் பின்னே ஓடினேன். தொழுகை முடிந்து வீட்டிற்கு வந்தோம். நானும் அவனும் இன்று விளையாட வெளியே செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்டு வெளியே சென்றோம்.
காற்று மென்மையாக வீசியது. மழையின் அழகிய ஓவியம் தோன்றியது. என்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்ததில் மழையும் ஒன்று. காஸா நகரம் அமைதியின் ஆழத்தில் மூழ்கும் தருணம் அது. மழைத்துளிகள் விழும் சத்தத்தை நானும் உனைசும் அவ்வளவு ரசித்தோம்.
நானும், தந்தையும் வெளியே மார்க்கெட்டுக்குக் கிளம்பினோம். கிளம்பிய 20 நிமிடத்தில் தெருக்களைத் தாண்டியவுடன் ஒரு பயங்கர சப்தம். ஒரு கணம் வானத்தைப் பிளந்தது போன்று! காது கிழிப்பதைப் போன்று, இதயம் படபடவென நடுங்கியது. மண்ணில் புகை எழுந்தது. என்னவென்று புரியாமல் மனதில் ஒரே திகைப்பு.
உடனே என் நினைவு அம்மாவையும், உனை ஸையும் சூழ்ந்து கொண்டது. என்னையும், தந்தையையும் நோக்கி ஒருவர் ஓடி வந்தார். காற்று கூட நின்றது போல இருந்தது. அந்தச் செய்தி என் தந்தையை வந்து சேர்ந்த போது ‘உன் மனைவியும் உன் மகனும்..’ என்று சொல்லும் போதே குரல் அவருக்கு நடுங்கியது. என் தந்தை ஒரு பரிதவிப்போடு பார்த்தார். அந்த ஒரு பார்வையிலேயே எனக்குப் புரிந்தது ‘ஆம்! ஒரே நொடியில் என் உலகம் சிதறி விழுந்தது. அம்மாவின் சிரிப்பு, உனைஸின் குரல் அனைத்தும் புகை மேகத்தில் மறைந்தது. ஒரு நிமிடம் உள்ளம் சிதைந்து மூச்சே நின்றது. என்னை என் தந்தை கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார். நான் கண்ணீரில் உடைந்தேன்.
அந்த நேரத்தில் தந்தையின் கைகள் என்னை அணைத்தன. அவரது மார்பின் மீது சாய்ந்தேன். ஹஸ்புனல்லாஹ் என்று சப்தமாகக் கூறினார். ‘கண்ணே! அழ வேண்டாம், அழ வேண்டாம். அல்லாஹ் எப்போதும் நம்மோடு இருப்பான்’. இதைத்தான் உனைஸும் அடிக்கடி என்னிடம் சொல்வான். ‘இருவரும் சுவனத்தின் ஒளியை நோக்கிப் பயணித்து விட்டார்கள்’ என்றார் என் தந்தை.
என்னால் எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘நான் ஓடியாடி விளையாடிய வீட்டைக் காணவில்லை! என்னுடைய சகோதரனைக் காணவில்லை. என்னுடைய அம்மாவின் அழகிய சிரிப்பைக் காணவில்லை.
என்னுடைய வலியைச் சொல்லில் அடக்க முடியவில்லை. ‘அல்லாஹு’ என்று அனைவரும் என் அருகில் கதறுகிறார்கள். 26 பேர் இறந்து விட்டார்கள். அதில் உனைஸைப் போல பலரின் கனவும், கதையும் முடிந்து விட்டது. ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் (எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்) என்று கூறி பொருந்திக் கொண்டேன். அல்லாஹ் போதுமானவன் என்கின்ற ஒன்றைத் தவிர எங்களிடம் வேறு எதுவும் இல்லை.